புதன், 10 ஜூலை, 2013

அறுவடை செய்யும் பேராசிரியர்!

அறுவடை செய்யும் பேராசிரியர்!

மந்தாரை (ஆர்கிட்) மலர்'களை வளர்த்து மாதம், 50 ஆயிரம் சம்பாதிக்கும் கல்லூரி ப் பேராசிரியர், முருகையன்: நான், புதுச்சேரியைச் சேர்ந்தவன். புதுவை சமுதாயக் கல்லூரியில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். சிறு வயதிலேயே, பெற்றோருடன் விவசாயம் செய்ததால், அதன் மீது, அதிக ஈர்ப்பு இருந்தது. நவீன விவசாயம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், புதுவை வேளாண் வல்லுனர்கள், ஆர்கிட் மலர் சாகுபடி குறித்து, விளக்கம் அளித்தனர்.
காஞ்சிபுரத்தின், வாலாஜாபாத்தில் உள்ள, ஆர்கிட் பண்ணைக்கு எங்களை அழைத்துச் சென்று, செயல் விளக்கம் தந்தனர். நான், ஆர்கிட் மலர்களை சாகுபடி செய்ய முயற்சித்த போது, மாநில அரசே, 10 லட்சம் ரூபாய் மானியத்துடன், வங்கிக் கடனும் பெற்றுத் தந்தது. பசுமைக் குடில் மற்றும் பாசன வசதிக்கு, மானியம் போக, 36 லட்சம் செலவானது. இச்செடிக்கு, மிதமான நீரே தேவை என்பதால், மண்ணில் இதை வளர்க்க முடியாது. அதனால், எரிந்த அடுப்புக் கரியால் நிரப்பப்பட்ட, பூந்தொட்டியில் வளர்த்தேன். சதுர அடிக்கு, ஒரு செடி வீதம் ஏக்கருக்கு, 40 ஆயிரம் செடிகள் வளர்த்தேன். பயிரிட்ட, 10ம் மாதத்திலிருந்து, துணை செடிகள் வளர ஆரம்பிக்கும். ஆண்டிற்கு, 8 பூக்கள் என, 10 ஆண்டுகள் வரை பூக்கும் தன்மை கொண்டது. இப்பூக்களை பறித்தாலும், 15 நாட்கள் வரை வாடாமல் இருப்பதால், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கும், ஏற்றுமதி செய்கிறேன். பூக்களின் அளவிற்கு ஏற்ப, 8லிருந்து, 12 ரூபாய் வரை விற்கலாம். தானே புயலுக்கு முன் வரை, அனைத்துச் செலவுகளும் போக மாதம், 90 ஆயிரம் லாபம் கிடைத்தது. தற்போது, 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. தானே புயலால் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு, 24 லட்சத்திற்கான கடனை, அரசு தள்ளுபடி செய்தது. நிலத்தடி நீர், நாளுக்கு நாள் குறைந்து வருவதால், மரபு சார்ந்த பயிர்களை சாகுபடி செய்வதை விட, நவீன முறையில் புது வகையான பயிர்களை பயிர் செய்து, விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். அரசு உதவியும் கிடைக்கிறது. தொடர்புக்கு: 90038 60205.

1 கருத்து:

  1. படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடனை அரசு தள்ளுபடி செய்தது இருக்கட்டும், இலாபம் கிடைக்கிறது என்றால் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைத்தபின் வருமானவரி கட்டுவது நல்லது. கிடைக்கும் இலாபத்தில் பொதுநலத்திற்குப் பயன்படுத்துவது நல்லது. கல்லூரிப் பணியைத் துறந்துவிட்டால் அப்பணியில் பிறருக்கு வாய்ப்புக்கிடைக்கும். ஆசிரியர்கள் எல்லாரும் விவசாயம் பண்ணி வியாபாரத்தில் ஈடுபட்டால் கல்விப்பணி என்னாவது.

    நன்றி.

    பதிலளிநீக்கு