சனி, 9 பிப்ரவரி, 2013

மாடியில் காய்கறித் தோட்டம்!


மாடியில் காய்கறி த் தோட்டம்!

அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு, மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கும், என்.மாதவன்: நான், சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில், வெங்கடேஸ்வரா நர்சரி எனும், நாற்றங்கால் பண்ணை வைத்திருக்கிறேன்.அடுக்கு மாடி குடியிருப்புகளில், பூமியில் பயிரிடும் வாய்ப்பில்லை. ரோஜா, சாமந்தி, செம்பருத்தி என, பூச்செடியையும், சிலர் துளசி செடியை மட்டுமே, மண் தொட்டியில் செடிகளாக வளர்ப்பர்.வீட்டின் மொட்டை மாடியில், 200 சதுர அடி இடம் இருந்தால், பூமியில் விவசாயம் செய்வதை போல், காய்கறி தோட்டம் அமைத்து, நன்கு அறுவடை செய்யலாம். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் தேங்கி, மாடியின் உறுதி குறைவதை தடுக்க, மாடியில், "வாட்டர் புரூப் ஷீட்' ஒட்டி, காய்கறி தோட்டம் அமைப்பது அவசியம்.கூழாங்கற்களை, மூன்றங்குல உயரத்திற்கு பரப்ப வேண்டும். அதன் மேல் தேங்காய் நாரை பரப்பி, செம்மண், எரு உரம், ஆற்று மண் கலந்த, தோட்ட மண் கலவையை பரப்பி, எல்லாம் சேர்த்து, 1 அடி உயரம் வரை இருக்க வேண்டும். அரசாங்கம் மற்றும் தனியார் பண்ணைகளில் கிடைக்கும், அனைத்து காய்கறி விதைகளையும் பயிரிடலாம்.விதையூன்றிய மூன்று வாரங்களில், பயிரிட்டவை பிஞ்சு விடத் துவங்கி விடும். கீரை வகைகளையும், மிளகாய், பூசணி, புடலங்காய் என, அனைத்தையும் பயிரிடலாம். வீட்டின் மாடி, "கான்கிரீட்' என்பதால், வெயிலின் வெப்பத்தை குறைக்க, காலையில், 8:00 மணிக்கு முன்னும், மாலையில், 6:00 மணிக்கு முன்னும், தண்ணீர் ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை என, மூன்று தடவை, "ரோகர்' பூச்சி மருந்துகள் தெளிக்க வேண்டும்.மா, மாதுளை, கொய்யா, எலுமிச்சை என, மரங்களையும் வளர்க்கலாம். 1 அடி என்பதை விட, கூடுதலாக அரை அடி தோட்ட மண் இருந்தால் போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக