ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

ஆழ்துளை இயந்திரன் & அனைத்தும் இலவசம்


இங்கு அனைத்தும் இலவசம்!

228 தலித் குடும்பத்தை தத்தெடுத்து உணவு, கல்வி என, அனைத்தையும் வழங்கும் மயிலானந்தம்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியின், சாமிநாதபுரத்தை சேர்ந்தவன். மயில்சாமிக் கவுண்டர் என்ற என் பெயரை, ஜாதியை நீக்கி, மயிலானந்தம் என, மாற்றினேன். ஆரம்பத்தில் சிறு மளிகைக் கடையாக ஆரம்பித்து, இன்று மாட்டுத் தீவனம், எண்ணெய் உற்பத்தியில் முன்னணியிலுள்ள, எஸ்.கே.எம்., நிறுவனத்தை உருவாக்கி, ஒரு தொழில் அதிபராக உள்ளேன்.தொழிலில் மற்றவரால் வளர்ச்சியடைந்து உயர்ந்த நான், பிற்பட்ட சமுதாயமாக இருக்கும் தலித்களுக்கு உதவ,பள்ளிக்கூடம் கட்ட நினைத்தேன். முன்னாள் ஆளுநர் சி.சுப்ரமணியம், "தலித் மாணவர்கள், மற்ற ஜாதி மாணவர்களோடு படித்தால் தான், போட்டியிட்டு வெல்லலாம். எனவே மற்ற உதவிகளை செய்' என, ஆலோசனை கூறினார்.என் ஊரில் உள்ள, இரண்டு தலித் காலனிகளின் மொத்தம், 228 குடும்பத்தை தத்தெடுத்து, எஸ்.கே. எம்., சேவை மையம் மூலம், அனைத்து உதவிகளையும் இலவசமாக, 1999ம் ஆண்டு முதல் செய்து வருகிறேன். முதியவர்களுக்கு, காலை, 7:00 மணிக்கு, தேநீர், 11:00 மணிக்கு மதிய உணவு, மாலை 6:00 மணிக்கு இரவு உணவு என, தினமும் வழங்கி வருகிறேன். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை, 8:00 மணிக்கு, மேசை வசதியுடன் கூடிய உணவறையில் சிற்றுண்டி, பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வர இரண்டு வாகனம், பள்ளி முடிந்து வந்ததும், உணவு, விளையாட்டு, இரவு, 9:00 மணி வரை, படிக்க பயிற்சி வகுப்புகளும் உண்டு. கணினி, ஆங்கிலம், இசை, நடனத்தில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறோம்.பள்ளிக் கட்டணம், நோட்டு புத்தகம், சீருடை வழங்குகிறோம்.இதுவரை, 25 பேர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இன்னும், 10 ஆண்டுகளில் அனைத்து குழந்தைகளும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பதே, சேவை மையத்தின் நோக்கம்.

"போர்வெல் ரோபோ!'

ஆழ்துளைக் குழிகளில் விழுந்த குழந்தைகளை, உயிருடன் மீட்கும் ரோபோவை கண்டுபிடித்த, மணிகண்டன்:நான் தூத்துக்குடியை சேர்ந்தவன். அப்பா மெக்கானிக் என்பதால், ஐ.டி.ஐ., மெக்கானிக் படிக்க வைத்தார்.ஆழ்துளைக் குழி களில் விழும் குழந்தைகளை, ஐந்தே நிமிடங்களில், பாதுகாப்பாக மீட்கும், "போர்வெல் ரோபோ'வை கண்டுபிடித்துள்ளேன்.கடந்த, 2003ம் ஆண்டு சேலம் ஆத்தூரில், ஆழ்குழியில் விழுந்த குழந் தையை, 18 மணி நேரம் போராடியும், தீயணைப்புத் துறையினர் சடலமாகவே மீட்டனர். நவீன கருவிகள் இல்லாததே, இச்சம்பவத்திற்கு காரணம்.ஆழ்துளைக் குழிகளின் ஆழம், அகலம், அதன் அமைப்பு முறை, தீயணைப்புத் துறையினரின் செயல்பாடு ஆகியவற்றை, விபத்து நடக்கும் பகுதிக்கே சென்று, குறைபாடுகளை நன்கு கவனித்தேன். ஆழ்குழி என்பதால், பெரியவர்கள் இறங்க இடமிருக்காது. முற்றிலும் இருள் சூழ்ந்திருப்பதால், குழந்தை விழுந்த ஆழம் தெரியாது. இக்குறைகளை தீர்க்க, ஆராய்ந்து கண்டுபிடித்ததே, "போர்வெல் ரோபோ' தொழில் நுட்பம்.பஞ்சாலான ரப்பர் கைகள், ஸ்பெஷல் மறை, வெப் கேமரா, பேட்டரி, மின் விளக்கு, லேப்-டாப், "டிவி' என, தேவையான பொருட்களை வைத்து, ரோபோ தயாரித்தேன். கடந்த, 10 ஆண்டுகளில், 30 குழந்தைகள் விழுந்துள்ளனர். ஒரு குழந்தை மட்டுமே, உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. கிணறுகளில் தவறி விழும் சிறுத்தை, மான்கள் போன்ற விலங்குகள் என, மற்றவற்றையும் தூக்க இது பயன்படுகிறது.இக்கருவியை, தூத்துக்குடி, மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர்களான பழனியாண்டி, சகாயம் ஆகிய இருவரும் இயக்கி, சிறந்த கண்டு பிடிப்பிற்கான விருதை, குடியரசு தினத்தில் அளித்து, பெருமைபடுத்தினர். சென்னை, ஐ.ஐ.டி., நடத்திய, தென்னிந்திய அளவிலான புதிய கண்டுபிடிப்பிற்கான போட்டியில், நான் கண்டுபிடித்த போர்வெல் ரோபோ, முதலிடத்திற்கான விருதையும், 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசையும், பெற்று தந்தது. இக்கருவியை, தமிழக அரசு வாங்க, தீயணைப்புத் துறை பரிந்துரைத்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக