புதன், 6 பிப்ரவரி, 2013

நெகிழியில் ஆதாயம் பார்க்கலாம்


" நெகிழியில் ஆதாயம் பார்க்கலாம்!'உறுதியான பிளாஸ்டிக் சாலைகள் அமைப்பதற்கான, தொழில்நுட்பநிபுணர் டாக்டர் ஆர்.வாசுதேவன்: மதுரை தியாகராஜர் கல்லூரியில், வேதியல் துறை தலைவராக பணியாற்று கிறேன். ஒரு சாதாரண தார் சாலை, மூன்று ஆண்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்கும். ஆனால், பிளாஸ்டிக் சாலைகள், 10ஆண்டுகள் தாக்கு பிடிக்கும்.தார் சாலை மழை நீரில் தேங்கி ஊறுவதால், தாருக்கும் கல்லுக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டு, சாலைகள் எளிதில் வீணாகின்றன. இது போன்ற, எந்த விளைவு களும், பிளாஸ்டிக் சாலையில் ஏற்படாது. சாலையில் பள்ளம், விரிசல் விழாமல், உறுதியாக பிணைக்கப்பட்டிருக்கும். தார் சாலையை விட, இரண்டு மடங்குஉறுதியானது. கல்லை, 170 டிகிரி சென்டிகிரேடில் சூடேற்றி, அதன் மீது, பிளாஸ்டிக் துகள்களை தூவுவதால், பிளாஸ்டிக் உருகி, கல் மீது"லேமினேட்' செய்தது போல் ஒட்டிக் கொள்ளும். அதன் மேல், உருகிய தாரை ஊற்றினால், லேமினேட் செய்யப்பட்ட கோட்டிங் கல்லுக்கும், தாருக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட்டு, சாலையின் தரமும் அதிகரிக்கும்.மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம், பால் கவர், கேரி பேக் என, மட்காத பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை, வீடுகளில் கிலோ 7 ரூபாய் வரை வாங்கி சுத்தப்படுத்தி, பிளாஸ்டிக் அரவை இயந்திரத்தில், 2 மி.மீ., முதல் 4 மி.மீ., நீளமுள்ள துகள்களாக மாற்றப்படுகின்றன. ஒரு அரவை இயந்திரம், 1.5 லட்சம் ரூபாயில் கிடைக்கிறது.தினமும், மகளிர் சுய உதவிக் குழுவின் இரண்டு உறுப்பினர் வீதம், பிளாஸ்டிக்கை அரைக்கும் வேலை செய்தாலே போதும். அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களின் அளவிற்கு ஏற்றார் போல், 16 ரூபாய் முதல், 23 ரூபாய் வரை விற்கிறோம். இத்தொழிலை மற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களும் மேற்கொண்டு லாபம் ஈட்டலாம்.தமிழக அரசே, பிளாஸ்டிக் தார் சாலைகள் அமைக்க ஊக்குவிப்பதால், அரசின் உள்ளாட்சி நிர்வாகங்களே, பிளாஸ்டிக் துகள்களை கொள்முதல் செய்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக