செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

மௌனத்தின் வலி:கலைஞரின் மாய்மாலம்



1/ 2 ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது. தமிழ் ஈழ மக்களின்பால்  பரிவு உள்ளதுபோல் காட்டி அம்மக்களின் தலைமையைக் கேலி செய்கிறார். தம் குடும்பத்தில்கூட க் கட்டுப்பாடு கொண்டு வர முடியாதவர் போர்க்களத்திலேயே இருந்து தம்  நாட்டு மக்களைக் காப்பாற்றும் தலைமையை எள்ளி நகையாடுகிறார்.  தம் சொந்தக் குடும்ப  மக்களைப்பற்றி மட்டுமே கவலைப்படுபவர் தெரிவிக்கும் கருத்துகள் எவ்வாறு நாட்டு மக்கள் நலனுக்காகத் தம் உயிரையும் கொடுக்கும் மக்களிடையே எடுபடும்? சிங்கள நாடு வேறு, தமிழ் ஈழ நாடு வேறு என்ற  வரலாற்று நிலைப்பாட்டில் இருப்ப்வர்கள், எங்ஙனம் அடுத்த நாட்டுத் தேர்தலில் ஈடுபட முன்வருவர்?  தேர்தலைப்புறக்கணிக்காமல் இருந்து வேறு யார்   வந்திருந்தாலும் புத்தப்புறா வேடமிடும் வல்லூறுகள் ஆட்சியில் இருக்கையில் இதே நிலைதானே இருந்திருக்கும். தொடர்ச்சி 2/2 காண்க.வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


மிகப்பெரும் இனப்படுகொலை நடந்திருக்கும் பொழுது, இப்பொழுதும் மொழி, கலை, பண்பாட்டு அழிவுகளுடன் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுது, அந்நாட்டு மக்களின் விடுதலை பற்றிப் பேசாமல் தான் குற்றமற்றவர் எனக் கூறுவதன் காரணம் என்ன? தெசோ மூலம் ஏமாளி மக்களின் வாக்குகளையும் கவரலாம். விடுதலைப்புலிகளைக்  குறை கூறுவதன் மூலம்  கொலைத்தாயின் கருணைப்  பார்வையிலும் இருந்து பயன் அடையலாம் என்பதுதானே! நேருக்கு நேரான போர் என்றாலோ தனி நிலைப் போர் என்றாலோ தமிழ்ஈழக்கொடிதானே பாரெங்கும் பட்டொளி வீசிப் பறந்திருக்கும்! போர் என்ற பெயரில் பல நாடுகளைக் கூட்டாக வைத்துக்  கொண்டு அப்பாவிமக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்றொழித்திருக்கையில் யார்தான் என்ன செய்ய இயலும்?  விடுதலைப்புலிகளைக் குறை கூறுவதன் மூலம் இனப்படுகொலைக் குற்றவாளிகள் மீது தவறு இல்லை என்று  மாய்மாலம் செய்பவரைக் காலம் வரலாற்றில் இருந்து தூர எறியும்.  கடவுளே! இவரது கருத்தின் உள்நோக்கம் புரியாமல் பரிந்துரைப்பவர்களை மன்னிப்பீராக! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

மௌனத்தின் வலி: கருணாநிதி வேதனை

சென்னை, நவ. 17: இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மௌனத்தின் வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது.
  நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகி விட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதை நாம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
"எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ?' என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.
தேர்தல் புறக்கணிப்பு...  "இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். அமைதி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் அவர். தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். மேலும், 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை அதிபர் தேர்தலில் 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை.
இதை எண்ணிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன என்பதை நினைத்துப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம்முடைய மௌன வலி யாருக்குத் தெரியப் போகிறது?'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக