வெள்ளி, 11 அக்டோபர், 2013

தமிழில்நடைபெற்ற செம்மொழிவிருது விழா - தமிழுக்காக மாற்றப்பட்ட மரபு

' தமிழுக்காக மாற்றப்பட்ட மரபு ' என்னும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்க்காப்புக்கழகம் மூலம் செம்மொழி விருதுகள் விழா தமிழில் நடத்தப் பெற வேண்டும் எனத் 'தமிழக அரசியல்' இதழ்  முதலான ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தொடர்ந்து செம்மொழி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தமிழில் நடத்திவிட்டுப்பிற மொழியில் விழா நடத்தலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டது.  செம்மொழி நிறுவன இயக்குநர் திருவாட்டி பூமா, பதிவாளர் முனைவர் முத்துவேல், பொறுப்பு அலுவர் முனைவர் இராமசாமி ஆகியோர் தொடர் நடவடிக்கை எடுத்தனர். குடியரசுத்தலைவர் மாளிகையிலும் வேண்டுதலின் அறநிலையைப் புரிந்து கொண்டனர். அதன்படி தமிழில் விருதுகள் குறிப்பு முதலில் தெரிவிக்கப்பட்டதும் தமிழுக்கு உரிய இடம் தந்ததும் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.  தொடர்புடைய அனைவருக்கும் செய்தியை வெளியிட்ட தினமணிக்கும் நன்றி.   தொடர் வேண்டுகோளின்படி மூத்த அறிஞர்களுக்கான வாழ்நாள் விருதுகளையும்  விடுபட்ட விருதுகளையும் வழங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

ஐராவதம் மகாதேவன், தமிழண்ணலுக்கு தொல்காப்பியர் விருது

2009-10, 2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுகளை முறையே ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கெüரவித்தார். மேலும் 12 பேருக்கு செம்மொழித் தமிழ் குடியரசுத் தலைவர் விருதுகளையும் அவர் வழங்கினார்.
மூன்று பிரிவு விருதுகள்: செம்மொழி தமிழுக்காகவும், தமிழ் இலக்கிய மேன்மைக்காகவும் பங்காற்றி வரும் அறிஞர்களுக்கு செம்மொழித் தமிழ் குடியரசுத் தலைவர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, பொன்னாடை ஆகியவற்றுடன் தொல்காப்பியர் விருது; வெளிநாட்டுத் தமிழ் அறிஞர் ஒருவருக்கும், வெளிநாட்டில் வாழும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும் தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, பொன்னாடை ஆகியவற்றுடன் குறள் பீட விருதுகள்; தமிழ் மொழி பயிற்சி, ஆராய்ச்சி, பதிப்புகளை வெளியிடும் இளம் தமிழ் அறிஞர்கள் ஐந்து பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை, பொன்னாடை ஆகியவற்றுடன் இளம் அறிஞர் விருதுகள் என மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அறிஞர்களுக்கு கௌரவம்: இதையொட்டி, 2009-10, 2010-11-ஆம் ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழா தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் "தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவனுக்கு 2009-10-ஆம் ஆண்டுக்கான "தொல்காப்பியர் விருது' வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கௌரவித்தார்.
2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெறுவதற்காக பேராசிரியர் இராம. தமிழண்ணல் பெரிய கருப்பன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அதைப் பார்த்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இருக்கையில் இருந்து வந்து அவருக்கு விருதை வழங்கினார்.
இதேபோல, செக் குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசெக்குக்கு 2009-10-ஆம் ஆண்டுக்கான குறள் பீட விருது வழங்கப்பட்டது.
தமிழ் செம்மொழிப் புலமையுடன் விளங்கி வரும் இளம் அறிஞர்களான தி. சுரேஷ், சே. கல்பனா, இரா. சந்திரசேகரன், வாணி அறிவாளன், சோ. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு 2009-10-ஆம் ஆண்டுக்கான இளம் தமிழ் அறிஞர் விருதையும், து. சங்கையா, அ. ஜெயகுமார், ஆ. மணி, சி. சிதம்பரம், க. சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு 2010-11-ஆம் ஆண்டுக்கான இளம் தமிழ் அறிஞர் விருதையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் தமிழறிஞரும் தமிழ் இணையக் கல்விக் கழகத் தலைவருமான முனைவர் வா.செ. குழந்தைசாமி, தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
"2010-11 ஆம் ஆண்டுக்கான குறள் பீட விருதுக்குத் தேர்வான இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மார் உடல் நலம் சரியில்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவருக்குரிய விருது, ரொக்கப் பரிசு ஆகியவை தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்படும்' என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பூமா தெரிவித்தார்.
தமிழக அமைச்சர்களுக்கு அழைப்பு இல்லை
தெலங்கானா விவகாரத்தில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு உள்ளிட்ட ஆறு ஆந்திர அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியை ராஜிநாமா செய்தனர். தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை பல்லம் ராஜு புறக்கணித்தார்.
இந் நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செம்மொழித் தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல்லம் ராஜு "மத்திய அமைச்சர்' என்ற முறையில் பங்கேற்று முதல் வரிசையில் அமர்ந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று விட்டார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், இணை அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், வே. நாராயணசாமி, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தில்லியில் இருந்த போதும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை முறைப்படி அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழுக்காக மாற்றப்பட்ட மரபு
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செம்மொழித் தமிழ் குடியரசுத் தலைவர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருதும், விருது பெறுவோர் தொடர்பான குறிப்பும் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் மரபை மீறி தமிழில் வாசிக்கப்பட்டது.
நிகழ்ச்சி நடைபெற்ற அசோகா மண்டபத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வந்தார். அப்போது, விருதுகளின் பெருமை குறித்தும், விருது பெறும் அறிஞர்கள் குறித்தும் தமிழ் மொழியில் குறிப்பு வாசிக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பூமா இக் குறிப்பை வாசித்தார்.
வழக்கமாகக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இந்தி மொழியில் தொகுத்து வழங்கப்படுவது மரபாகும். அதன்படியே, கடந்த ஆண்டு செம்மொழி விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளின் குறிப்பு இந்தி மொழியில் வாசிக்கப்பட்டது. அந்த மரபு முதன்முறையாக புதன்கிழமை மாற்றப்பட்டு தமிழில் விருதுகள், விருது பெறுவோரின் குறிப்பு வாசிக்கப்பட்டது அறிஞர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. தமிழைத் தொடர்ந்து இந்தி மொழியில் அக் குறிப்பு வாசிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக