செவ்வாய், 8 அக்டோபர், 2013

டெசுமாண்ட் டுடு எனும் மகத்துவர்

டெசுமாண்ட் டுடு எனும் மகத்துவர்

டெஸ்மாண்ட் டுடு
டெஸ்மாண்ட் டுடு
டெஸ்மாண்ட் டுடு... வன்முறை நிரம்பிய, வெறுப்பு வழிந்து கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவில் அன்பு என்பதும், அகிம்சை என்பதும் எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை நிறுவிய பாதிரியார் இவர்.
இளம் வயதிலேயே நிறவெறிக்கு உள்ளானார் டெஸ்மாண்ட் டுடு. வெள்ளையர்கள் கறுப்பின மக்களை அடிமைகளைப்போல நடத்தினார்கள். இரண்டாம் தர குடிமக்களாக இவர்கள் நடத்தப்பட்டார்கள்.
டெஸ்மாண்ட் டுடு சிறுவனாக இருந்தபோது காசநோய் வந்து மரணத்தின் விளிம்பு வரை போய் மீண்டு வந்தார். அப்பொழுதெல்லாம் ஏசுவின் கதைகள் அவருக்கு நம்பிக்கையைத் தந்தன. ஆனாலும், தங்களை மனிதர்களாக வெள்ளையர்கள் மதிக்க மாட்டார்களா என்கிற ஏக்கம் அவரின் பிஞ்சு நெஞ்சிலே கசிந்துகொண்டே இருந்தது.
டுடுவும், அவரின் அம்மாவும் சேர்ந்து தெருவில் நடந்து கொண்டிருந்தபோது ட்ரெவர் எனும் நபர் தன்னுடைய தொப்பியை தூக்கி இவரின் அம்மாவுக்கு மரியாதை செலுத்தினார். அவர் பிறப்பால் வெள்ளையர்; அவரொரு பாதிரியார் என்று தெரிந்து, தானும் அவரைப்போலவே ஆகவேண்டும் என்கிற எண்ணம் டுடுவின் மனதினுள் ஆழமாக பதிந்துபோனது.
டுடுவின் இளமைக்காலத்தில் அவருக்கு நல்ல கல்வி கிடைத்தது. பின்னர் அரசின் கொள்கையால், கறுப்பின மக்கள் தனியான, வசதிகள் இல்லாத, இருளில் மூழ்கி இருக்கும் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார்கள். அவர்களுக்கு மிக மோசமான கல்வி தரப்பட்டது.
இதற்கிடையில் இவர் இறையியல் கல்வியை லண்டனில் முடித்து நாடு திரும்பினார். சர்ச்சின் பாதிரியார் ஆனார். நிறத்தின் பெயரால் பாகுபடுத்தலை எதிர்த்து அதிபருக்கு கடிதம் எழுதினார். ஆனால் அதை அதிபர் கவனிக்கவே இல்லை. இந்தத் தருணத்தில் ஆப்பிரிக்காவில் இருக்கும் எல்லா சர்ச்சுகளின் தலைமைப் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. மக்களை அணுகினார்; அயலானை நேசி, அன்பைக்கைக்கொள்ள சொன்னார்.
சொவேடோ எனும் இடத்தில் பத்தாயிரம் கறுப்பினப் பிள்ளைகள் பாரபட்சமாக நடத்தப்படுவதை எதிர்த்து போராடினார்கள். போலீஸ் துப்பாக்கியால் 500 பிள்ளைகளைச் சுட்டுத்தள்ளியது.
ரத்தம் கொதித்த டுடு, மக்களுக்குச் சொன்னார்: “நாம் கண்டிப்பாக வெல்வோம். அதில் சந்தேகமில்லை. உண்மையை பொய்யோ, வெளிச்சத்தை இருளோ, வாழ்வை மரணமோ வெல்ல முடியாது. அன்போடு காத்திருப்போம்.”
வெளிநாடுகளுக்கு ஒரு யோசனையும் சொன்னார். எங்களை நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களின் முதலீடுகளை எங்களின் அறவழிப் போருக்கு ஆதரவாக, திரும்பப்பெறுங்கள் என்பதுதான் அது. “அப்படியே!” என்று பல நாடுகள் செயல்பட்டன. தென் ஆப்பிரிக்கா ஸ்தம்பித்தது.
மண்டேலா ஆயுதம் ஏந்தியபொழுது அதை விமர்சிக்கவில்லை இவர். போராளிகளின் பாதைகள் வேறு என்பது அவரின் கருத்து.
டுடுவின் அமைதி வழிப் போராட்டங்கள் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுத்தந்தன. நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் அதிபரானபோது அவரை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் வரலாற்று தருணம் இவருக்கு வாய்த்தது. “இப்பொழுது நான் இறந்தால் அதைவிட பொருத்தமாக எதுவும் இருக்காது. இந்த கணத்துக்காகத் தானே நாம் தீர்க்கமாக போராடினோம்!” என்று உணர்ச்சிவசப்பட்டார்.
டுடு இப்பொழுதும் எய்ட்ஸ், காசநோய் ஒழிப்பு ஆகியவற்றுக்காக பணியாற்றி வருகிறார்.
“அநீதி நடக்கும்போது நடுநிலைமை என்பது அடக்கியாள்பவன் பக்கம் நிற்பதற்குச் சமம். நீங்கள் எலியின் வாலை தன் காலால் மிதித்து கொண்டிருக்கும் யானையை தட்டிக்கேட்காமல், நடுநிலைமை காப்பதாக சொன்னால், உங்களின் நடுநிலைமையை எலி பாராட்டாது!” என்கிற அவரது வரிகள் காலத்துக்கும் பொருந்துவது!
அக்.7 - டெஸ்மாண்ட் டுடு பிறந்த  நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக