பார்வையிழந்தாலும் கனரக த் தொழிலில் சாதித்தோம்!
பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் வேலை வழங்கி, அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும்,சுப்ரமணியன்: நான், திருச்சியில் உள்ள, 'ஆர்பிட்' நிறுவனத்தின், செயலராக பணியாற்றுகிறேன். பார்வையை இழந்தால், வாழ்க்கையே இருண்டு விட்டது என, இடிந்து போய் விடாமல், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி, மற்ற சாதாரண மனிதர்கள் போல், தங்களின் சொந்த காலில் நிற்பதற்கு, 1973ல், 'ஆர்பிட்' ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஐந்து பார்வையிழந்தவர்கள் மூலம், 'சாக்பீஸ், சோப்பு' போன்ற, எளிய பொருட்களை மட்டுமே தயாரித்து விற்றோம். பார்வையற்றவர்களால், சரியாக வேலை செய்ய முடியாது என, எந்த நிறுவனமும் எங்களுக்கு, 'ஆர்டர்'கள் தருவதில்லை. ஆனால், எங்கள் திறமையை உணர்ந்த, திருச்சி பெல் நிறுவனம், கனரக பொருட்களுக்கான ஆர்டர்கள் தந்தது.
கொடுக்கப்பட்ட ஆர்டர்களை சரியாக செய்து முடித்ததால், ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன. இதனால், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தரும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டதால், பார்வை உள்ளவர்களை விட, 20 சதவீதம் அதிக திறனுடன் உழைக்க முடிகிறது. ஏனெனில், பார்வையற்றவர்களால், வேடிக்கை பார்க்காமல், கவனச்சிதறல் இன்றி வேலை செய்ய முடியும். எங்களின் அயராத உழைப்பால், கடந்த ஆண்டு ராணிபேட்டையிலும் புதிய கிளை நிறுவி, 25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். 2001 மற்றும் 2009ம் ஆண்டிற்கான, 'சிறந்த தனியார் நிறுவனம்' என்ற விருதை, தமிழக அரசிடமிருந்து பெற்றோம். கடந்த, 2010ல், உடல் ஊனமுற்றோர் தினத்தன்று, 'சிறந்த நிறுவனம்' என்ற விருதை, ஜனாதிபதியிடமிருந்தும் பெற்றுள்ளோம். தைவானில், 2012ம் ஆண்டு, 23 நாடுகள் பங்கேற்ற, 'வொர்க்கபிலிட்டி ஆசியா' மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும், 200 நிறுவனங்கள் பங்கேற்றன. அதில், நாங்கள் தான் சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராட்டப்பட்டோம்.
சிக்கல்களை எளிதாகக் கையாளலாம்!
மனநல ஆலோசகர், நவரத்தினா: நான், சென்னையை சேர்ந்த, மனநல ஆலோசகர். இன்றைய அவசர உலகில், பிரச்னைகள் வரும் போது, அதற்கான தீர்வுகள் தெரிந்திருந்தும், தவறான முடிவுகளையே பலர் எடுக்கின்றனர். பின், ஆற அமர்ந்து யோசிக்கும் போது தான், தடுமாற்றத்தை உணர முடிகிறது. ஆனால், மறுபடியும் தவறான முடிவெடுத்து, பல இக்கட்டுகளில் சிக்கி தவிக்கிறோம். இதற்கு காரணம், எதிர்மறை எண்ணங்களே. இவ்வுலகில், எதிர்மறை எண்ணங்கள் இல்லாதவரே இல்லை. அதற்காக, எதிர்மறை எண்ணத்துடனேயே வாழ்வதும், ஆரோக்கியமாக இருக்காது. எதிர்மறை எண்ணத்தால், தவறாக முடிவெடுக்கிறோம். பின், அதனால் ஏற்படும் பாதிப்புகளை, நாம் உணரும் போது, 'எனக்கு அதிர்ஷ்டம் இல்லை' என, அவநம்பிக்கையை வளர்க்கிறோம். நல்ல மனநிலையில் முடிவுகள் எடுத்து, நல்ல பலன் கிடைக்கும் போது தான், மனம் தெளிவடையும். எனவே, பிரச்னையின் ஆரம்ப நிலையிலேயே, மனதை திடமாக வைத்திருப்பது நல்லது. உண்மையிலேயே நீங்கள் எதிர்கொள்வது பிரச்னை தானா என்பதை, முதலில் நன்றாக யோசியுங்கள். ஏனெனில், சில நேரங்களில் ஒன்றுமில்லா காரியம் கூட, நம்மால் பெரிதாக ஊதப்பட்டு, பெரிய பிரச்னையாக மாறிவிடும். எனவே, பிரச்னையை முழுமையாக புரிந்து கொண்டாலே, பிரச்னைக்கான தீர்வின் பாதி கிணற்றை தாண்டலாம்.
பிரச்னைக்கான முக்கியத்துவம், அதற்கான தீர்வு, அதனால் ஏற்படப் போகும் பலன் மற்றும் இந்த சமூகத்தில் உங்களுக்கு கிடைக்கப் போகும் மரியாதை போன்றவற்றை எண்ணிப் பார்த்து, நிதானமாக முடிவு எடுத்தாலே, பிரச்னைக்கான தீர்வை எட்டலாம். முதலில், உங்களை பற்றிய சுயமதிப்பை அதிகமாக்குங்கள். சுயமதிப்பில் தொய்வு கண்டவர்களுக்கு தான், அதிக எதிர்மறை எண்ணங்கள் எழும். தினமும், கண்ணாடி முன் நின்று, நான் தன்னம்பிக்கையான(வள்)வன் என, சொல்லி பழகினாலே, உங்களின் சுயமதிப்பு அதிகரித்து, பிரச்னைகளை எளிதாக கையாள்வீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக