பொறியியல் கல்லூரி முதல்வர் கொலை: மாணவர்களை நல்வழிப்படுத்தும் கல்விமுறை தேவை- இராமதாசு அறிக்கை
சென்னை, அக். 11–
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தூத்துக்குடி
மாவட்டம் வல்லநாடு அருகே குழந்தை இயேசு பொறியியல் கல்லூரியின் முதல்வர்
சுரேஷ் அதே கல்லூரியில் பயிலும் மாணவர்களால் கொடூரமான முறையில்
வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியையும்,
வேதனையும், துயரத்தையும் அளிக்கிறது.
கல்லூரியில் ஒழுங்கீனமாகவும்,
மாணவிகளிடம் தகாத முறையிலும் நடந்து கொண்ட ஒரு மாணவர் மீது கல்லூரி
முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த
மாணவர் தமது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இந்தக் கொடூர செயலை
நிகழ்த்தியிருக்கிறார்.
முதல்வர் சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட விதம்
பற்றி ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கும்போது, திரைப்படங்களில்
வரும் வன்முறை மற்றும் கொலைக் காட்சிகள் இந்த மாணவர்களிடம் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
மாதா,
பிதாவுக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்களை தங்களின் கடவுளாக மாணவர்கள்
மதித்து வந்த நிலை மாறி, ஆசிரியர்களையே படுகொலை செய்திருக்கும் நிலை
உருவாகியிருப்பது ஒட்டுமொத்த தமிழகமும் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும்.
நல்லொழுக்கத்தை
கற்றுத் தரும் நோக்கம் கொண்டதாக இருந்த கல்வி முறை, அதிக மதிப்பெண்களை
எடுத்தால் போதும் என்ற நோக்கம் கொண்ட எந்திரத் தனமானதாக மாறியது தான் இந்த
சீரழிவுக்கு முதன்மைக் காரணமாகும்.
தற்போதுள்ள பெரும் பாலான கல்லூரி
நிர்வாகங்கள் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்து வதில்லை. அனைத்து பள்ளி,
கல்லூரிகளிலும் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் ஏற்படுத்துதல், மாணவர்களின்
பிரச்சினைகளை அறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளையும், ஆறுதல்களையும் வழங்குதல்
உள்ளிட்டவை அடங்கிய கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அத்துடன், மதுக்கடைகளை மூடவும், போதைப் பொருள் விற்பனையை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கெல்லாம்
மேலாக, தங்களின் பெற்றோர் கனவையும், நாட்டின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற
வேண்டிய மிகப் பெரிய கடமை தங்களுக்கு இருப்பதை உணர்ந்து பொறுப்புடன்
செயல்பட மாணவர் சமுதாயம் முன் வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக