புதன், 9 அக்டோபர், 2013

சென்னைப் புறா வாகை சூடியது

1500 அயிரைக்கல் தொலைவு பந்தயம்: சென்னை ப் புறா வாகை சூடியது

சென்னைவாழ் புறா ஆர்வலர்களுக்காகத் தொடங்கப்பட்ட ’நியூ மெட்ராஸ் ரேசிங் பீஜியன் (பந்தயப் புறா) அசோசியேஷன்’ மற்றும் ’தென்னிந்திய ரேசிங் பீஜியன் சொஸைட்டி’ ஆகியவை ஆண்டுதோறும் 1,000 கிலோ மீட்டர், 1,500 கிலோ மீட்டர் தூரத்துக்கான புறா பந்தயப் போட்டியை நடத்துகின்றன. குவாலியரில் இருந்து சென்னை வரை 1,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்ட பந்தயத்தில், சென்னை சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்த ஆர்.டி.வெங்கடேஷின் ‘கோல்டன் கிங்’ புறா சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
பிரத்யேகக் கூண்டு
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பாரம்பரியமிக்க பந்தயப் புறாக்களை வாங்கி வந்து இனப்பெருக்கம் செய்துள்ளனர். இந்தியப் புறாக்களும் வெளிநாட்டுப் புறாக்களுடன் சேர்த்துக் கலப்பினமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. மழைநீர் புகாத, சூரியஒளி மற்றும் காற்றோட்ட வசதி கொண்ட பிரத்யேகக் கூண்டுகளில் புறாக்களை வளர்க்கின்றனர்.
ஒருமாத பயிற்சி
பந்தயப் புறாக்கள் பிறந்த 6-வது நாளில், ஒரு வளையத்தை அடையாளத்துக்காக மாட்டி விடுகின்றனர். ஒன்றரை மாதம் ஆனதும் நன்கு வளர்ந்த நிலையில் கூண்டைவிட்டு வெளியே எடுத்துப் பறக்க விடுகின்றனர். 6-வது மாதத்தில் பயிற்சி தொடங்குகிறது. ஒருமாத பயிற்சிக் காலத்தில் குறிப்பிட்ட தூரம் வரை வேனில் புறாவை எடுத்துச் சென்று, அங்கு திறந்தவெளியில் பறக்கவிட்டு, பந்தயத்துக்கு தயார்படுத்துகின்றனர்.
இலக்கை அறிய மோப்பசக்தி
சூரியக்கதிர்களைப் பார்த்து, காந்த சக்தி மூலம் வடதுருவம், தென்துருவத்தைப் பார்த்து, மோப்ப சக்தியால் இருந்த இடத்திற்கே புறாக்கள் வந்துவிடுகின்றன என்கின்றனர் புறா ஆர்வலர்கள். இந்தப் பந்தயத்தைப் பொருத்தவரை அவரவர் வீட்டுக்கே வந்து சேரும் வகையில் பந்தய தூரத்தை கணக்கிட்டுக் கொள்கின்றனர். குறிப்பிட்ட தூரத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் முதலாவதாக வரும் புறாவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. வெங்கடேஷின் புறா, சரியாக 13-வது நாளிலேயே அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டது. இந்தப் புறா ஓமர் வகையைச் சேர்ந்தது.
ஆபத்தை எதிர்கொள்ளும் சாதுர்யம்
புறாக்கள் பொதுவாக காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரைதான் பறக்கும். மாலை 6.30 மணிக்கு ஏதாவது ஒரு வீட்டில் தங்கிவிடும். அப்போது அங்கு இருக்கும் பூனை, ஆந்தை, புறாவை விரட்டிப் பிடித்து அடித்துச் சாப்பிடும் பைரி எனப்படும் பருந்து ஆகியவற்றால் பந்தயப் புறாக்களுக்கு ஆபத்து நேரிடும். அந்த ஆபத்துகளை சாதுர்யமாக எதிர்கொண்டு புறாக்கள் சாதிப்பதாக சொல்லப்படுகிறது.
புறாக்களுக்கான சர்வதேச ஒலிம்பிக்
பந்தயத்தில் வெற்றி பெறும் புறாக்களை இனவிருத்திக்குப் பயன்படுத்தி புதிய பந்தயப் புறாக்கள் உருவாக்கப்படுகின்றன என்கிறார் ’நியூ மெட்ராஸ் ரேசிங் பீஜியன் அசோசியேஷன்’, ‘தென் இந்திய ரேசிங் பீஜியன் சொஸைட்டி’ தலைவர் கே.பழனியப்பன். மத்திய, மாநில அரசுகள் புறா பந்தயத்தை அங்கீகரித்து உதவினால், புறாக்களுக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்று சாதிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்கிறார் அவர். பந்தயத்தில் வெற்றி பெற்ற கோல்டன் கிங் புறா உரிமையாளர் வெங்கடேஷுக்கு, சென்னை அருகே அரை கிரவுண்டு மனை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக