புதன், 9 அக்டோபர், 2013

மரம் வளர்க்க கட்டணமில்லா மிதியூர்தி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_822597.jpg


மரம் வளர்க்க இலவச மிதியூர்தி

இயற்கை வளத்தை ப் பாதுகாக்க, 1 இலட்சம் மரக் கன்றுகளை, 'ஆட்டோ' மூலம் இலவசமாக, 'டோர் டெலிவரி' செய்த, எழில் விழியன்: நான், சேலத்தில், பர்னிச்சர் கடை வைத்துள்ளேன். மரம் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்ட, 'நிழல்' அமைப்பின், தலைவராக உள்ளேன். கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய, 94 குழந்தைகளின் நினைவாக, ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் மரம் நட்டேன். ஆண்டுதோறும் நினைவு நாளின் போது, குழந்தையின் பெற்றோர் அங்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்துவது, மனதிற்கு நெருடலாக இருந்தது. மரம் வளர்ப்பது ஒன்று தான், நம் எதிர்கால வாரிசுகளுக்கு விட்டுச் செல்லும் உண்மையான சொத்தாக கருதினேன். தமிழக அரசு, எவ்வளவு தான் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ், மனு செய்பவர்களுக்கு வனத்துறை மூலம், இலவச மரக்கன்றுகளை அளிக்க முன்வந்தாலும், அதை அவரவர் இடங்களுக்கு எடுத்து செல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களால், மரம் வளர்ப்பதை பொதுமக்கள் தவிர்த்தனர்.இச்சிக்கலுக்கு தீர்வு காண, ஆட்டோ மூலம் மரக்கன்றுகளை இலவசமாக டோர் டெலிவரி செய்ய எண்ணினேன். சேலத்தில் உள்ள அரசு பள்ளிகள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கோவில்கள், தர்காக்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களுக்கு, வனத்துறை தரும் மரக்கன்றுகளை, ஆட்டோவில் நேரடியாக எடுத்து சென்று, இலவசமாக டோர் டெலிவரி செய்கிறேன். மற்றவர் மரம் வளர்க்க உதவுவதை, சேவையாக கருதும் நான், இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர, உதவியாக இருந்ததை நினைக்கும் போது, மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆண்டுதோறும், உலக சுற்றுச்சூழல் தினமான, ஜூன் 5ல், 'வளர்க மரமுடன், வாழ்க வளமுடன்' என்ற கோஷத்தை முன்வைத்து, சேலம், அசோகா ஸ்துாபி முன், விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறோம். மேலும், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு சென்று, மரபுசாரா எரிசக்தி பயன்பாடு, இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக