இரு கண்ணிலும் பார்வை இழந்தும் ""தும்பிக்கை போல நம்பிக்கையுடன்''
கூடலூர்: முதுமலை முகாமில், இரு கண்ணிலும் பார்வை இழந்த, கும்கி யானை ""தும்பிக்கை போல நம்பிக்கையுடன்'' உலா வருகிறது.
நீலகிரி
மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகள்
உள்ளன. இதில், மூன்று யானைகள் சமீபத்தில் திருவண்ணாமலையில்
பிடிக்கப்பட்டவை. இவைகளில், இரு கண்களிலும் தற்போது பார்வை இன்றி, "ஹாயாக'
உலா வரும் கும்கி யானை இந்தர், 61, என்ற யானைக்கு பல தனித்துவமான
சிறப்புகள் உண்டு. 1960 அக்டோபர் மாதம் சுமார் 8 வயது குட்டியாக
பொள்ளாச்சியில் பிடிக்கப்பட்ட இந்தர், முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு,
கும்கி பயிற்சி வழங்கப்பட்டது. சிறந்த கும்கி யானை இந்தர், தமிழகம் மற்றும்
வெளி மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஊருக்குள் வரும் யானைகள்
விரட்டுவதில் ஈடுபட்டுள்ளது. மற்ற யானைகளுக்கு கும்கி பயிற்சியும்
அளித்துள்ளது. பல கோவில் திருவிழாக்களில் பங்கெடுத்துள்ள இந்தர், பல தமிழ்
திரைப்படங்களிலும் நடித்துள்ளது. சிறந்த கும்கியான இருந்த இந்த யானைக்கு,
இரு கண்ணிலும் பார்வை போனது. இதனால் கும்கிக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டது.
கண்களில் பார்வை இழந்தாலும், உள்ளத்தில் நம்பிக்கை இழக்காத இந்தர், பகலில்
உணவுக்காக பாகனுடன், வனப்பகுதிக்குள் செல்வது உள்ளிட்ட, தனக்கான அனைத்து
பணிகளையும் தானே செய்து வருகிறது. அதேபோல, உணவு நேரங்களில் யாரின் துணையும்
இன்றி, தனது உணவை எடுத்து உண்கிறது. எந்த சுற்றுலா பயணிகளையோ,
ஆதிவாசிகளையோ தவறி கூட தாக்கியதில்லை. தனக்கே உரித்தான பாதையில் இன்றுவரை
பயணிக்கிறது. இந்தரை கவனித்து வரும் பாகன்கள் கூறுகையில், "கண்ணிந்த
இந்தருக்கு தெய்வம் தான் இதுவரை துணையாக நின்று வழி நடத்தி செல்கிறார்;
இல்லையெனில், எல்லா பணிகளையும் சரியாக செய்ய முடியாது. அதேபோல, இந்தருக்கு
முதுமலையின் அனைத்து பாதைகளும் அத்துப்படி' என, பெருமிதத்துடன்
தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக