புதன், 9 அக்டோபர், 2013

மாற்றத்தின் வித்தகர்கள் 2 - பத்மா கோபாலன்

மாற்றத்தின் வித்தகர்கள் 2 - பத்மா கோபாலன்

சமசு
  • மாணவர்களுடன் பத்மினி கோபாலன்
    மாணவர்களுடன் பத்மினி கோபாலன்
  • பத்மினி கோபாலன்
    பத்மினி கோபாலன்
  • மாணவர்களுடன் பத்மினி கோபாலன்
    மாணவர்களுடன் பத்மினி கோபாலன்
  • வகுப்பறையில் மாணவர்களுடன் பத்மினி கோபாலன்
    வகுப்பறையில் மாணவர்களுடன் பத்மினி கோபாலன்
சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சிப் பள்ளி. நம்ப முடியாத ரம்மியத்தோடு காட்சியளிக்கிறது அதன் மழலையர் பிரிவு வளாகம். வெளியே வரிசையாகப் போடப்பட்டிருக்கும் செருப்புகள், சாப்பாட்டு டப்பாக்கள், தண்ணீர் போத்தல்கள் ஒவ்வொன்றிலும் நேர்த்தி. வகுப்பில் வரிசையாகப் பாய்த் தடுக்கில் அமர்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். அவர்கள் முன் மரத்திலான உருளைகள், கட்டுமான படிகங்கள், காய்கறிகள்... ஒவ்வொரு குழந்தையும் அவற்றை வைத்து தன் மனதுக்கேற்ற கட்டுமானங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது; காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருக்கிறது; கோதுமை மாவில் பல்வேறு வடிவங்களைச் செய்துகொண்டிருக்கிறது. ஆசிரியை இங்கு அதிகாரி கிடையாது; அவர் சக தோழர். குழந்தைகளோடு குழந்தைகளாக அமர்ந்து சொல்லிக்கொடுக்கிறார்கள். பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். குழந்தைகள் தமிழ் - ஆங்கிலம் இரண்டையுமே அற்புதமாகப் படிக்கிறார்கள். சகலமும் நேர்த்தி. வித்தியாசம் சீக்கிரமே புலப்படுகிறது. இவர்கள் படிப்பது மாண்டிசோரி கல்வி முறையில். உலகெங்கும் மிகச் சிறந்த முறை - அதேசமயம் பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கக் கூடிய முறை - என்று சொல்லப்படும் கல்விமுறை. சென்னை மாநகராட்சியின் 40+ பள்ளிக்கூடங்களில் உள்ள 3000+ ஏழைக் குழந்தைகளும் இப்போது இந்தக் கல்விமுறையில்தான் படிக்கிறார்கள். சர்வதேச அளவில் மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னோடி நடவடிக்கை இது.
அற்புதமான இந்த மாற்றத்தின் முன்னோடி... பத்மா கோபாலன். வயது எத்தனை தெரியுமா? 82.
கதர் உடை, பொட்டு நகை கிடையாது... கம்பீரத்தை அணிகலனாக்கிக்கொண்டிருக்கிறார் பத்மினி. பத்து ஆண்டுகளுக்கு முன் மயிலாப்பூரில் ஒரு மாநகராட்சிப் பள்ளியைத் தத்தெடுத்த பத்மினி தன் சொந்த செலவில், அங்கு ரூ. 1 லட்சம் கல்வி உபகரணங்களை வாங்கிக்கொடுத்து, அந்தப் பள்ளிக்கான ஆசிரியை - ஆயாக்களுக்கும் சம்பளம் கொடுத்து மாண்டிசோரி மழலையர் பிரிவைத் தொடங்கிவைத்தது மாற்றத்தின் முதல் விதை. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருடைய ‘ராம்சரண் அறக்கட்டளை’ மாநகராட்சியின் எட்டுப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றது. இப்போது ஏனைய பள்ளிகளில் மாநகராட்சி நிர்வாகமே இந்தக் கல்விமுறையைக் கையில் எடுத்திருக்கிறது. ஒபாமா இந்தக் கல்விமுறையைத்தான் கொண்டுவர விரும்பினார். அமெரிக்காவில் அவரால் கொண்டுவர முடியவில்லை. அங்கு முடியாதது இங்கு சாத்தியமாகி இருக்கிறது.
“என் தலைமுறையைச் சேர்ந்த இந்தியப் பெண்களோட கதை என்னவா இருக்குமோ, அதே கதைதான் என்னோடதும். ஒரு பெரிய குடும்பத்துல பிறந்தேன். நல்லா படிச்சேன். பி.ஏ. முடிச்சேன். கல்யாணம் ஆனதும் குடும்ப வேலைகளோட ஒதுங்கிட்டேன். ரெண்டு குழந்தைங்க. பொண்ணு டாக்டரா இருக்கா. பையன் ஆடிட்டரா இருக்கான். குடும்பத்துக்காகத்தான் எல்லாருமே உழைக்கிறோம்னாலும் அது மட்டும்தான் கடமையாங்கிற கேள்வி சின்ன வயசுலேர்ந்தே ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு காலம் வரைக்கும் என் வீட்டுலேயே சாயுங்கால நேரங்கள்ல ஏழைக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு என்னால உதவிகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.
வாழ்க்கை முழுக்க ஒரு விஷயத்தை என்னால கவனிக்க முடிஞ்சுச்சு. பணம்னு உதவி கேட்டு வர்ற பெண்கள்ல பலர் கல்வி சம்பந்தமான தேவைக்காகத்தான் கேட்டு வந்தாங்க. ஏன் அந்த உதவியை நேரடியாச் செய்யக் கூடாதுன்னு யோசிச்சப்ப, ரெண்டு வழிகள் இருந்துச்சு. ஒண்ணு பள்ளிக்கூடம் தொடங்குறது; இன்னொண்ணு பள்ளிக்கூடங்களை நோக்கிப் போறது. முதல் வழி உதவி தேவைப்படுறவங்களை நம்மளை நோக்கி வரவழைக்கிறது; ரெண்டாவது வழி நாமளே அவங்களை நோக்கிப் போறது. நான் ரெண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தேன்.
மாநகராட்சிப் பள்ளிக்கூடங்கள்ல நுழையறது அவ்வளவு சுலபமா இல்லை. ஏகப்பட்ட கேள்விகள், தடைகள் எல்லாத்தையும் கடந்துதான் உள்ளே நுழைஞ்சோம். அப்படி நுழைஞ்சப்போ, இந்தக் குழந்தைகளுக்கு உலகத்திலேயே சிறந்த கல்விமுறையில சொல்லிக்கொடுக்கணும்னு முடிவு பண்ணினோம். அப்போ அறிமுகமானதுதான் மாண்டிசோரி முறை. காந்தி சிறந்த கல்விமுறைனு சொன்ன முறை இது. ஆனா, தொடக்கத்துல இந்த முறையைப் பத்தி விசாரிச்சப்ப யாரும் எனக்கு ஊக்கம் கொடுக்கலை. எல்லாருமே இந்த முறை ரொம்ப ஒசத்தின்னு சொன்னாங்க. ஆனா ‘அது ரொம்ப செலவாகும். ரொம்ப சுதந்திரமான முறை. சேரி குழந்தைகளுக்குச் சரிப்படாது’ன்னாங்க.
எனக்கு ரொம்ப கோவத்தையும் வைராக்கியத்தையும் கொண்டுவந்ததே இந்த வார்த்தைகள்தான். குழந்தைங்களோட குணத்துல சேரிக் குழந்தைங்க; அடுக்குமாடி குழந்தைங்கன்னு பாகுபாடு இருக்குதா என்ன? நான் இல்லேன்னு நெனைச்சேன். இன்னைக்கு என்னோட குழந்தைங்க அது நிரூபிச்சு இருக்காங்க. டெல்லிலேர்ந்து மனித வளத் துறையிலேர்ந்து வந்தாங்க. பிரமிச்சுப்போய்ட்டாங்க.
இந்தக் கல்விமுறையைப் பத்தி எவ்வளவோ சிறப்புகளைச் சொல்வாங்க. என்னைப் பொறுத்த அளவில நான் முக்கியமா நெனைக்குறது இந்தக் கல்விமுறை கொடுக்குற சுயமரியாதை. இங்கே சொல்லிக்கொடுக்குற முதல் விஷயமே எல்லோரும் சமம்கிறதுதான். ஒரு உதாரணம் சொல்றேன். ஆரம்ப காலத்துல ஒரு அதிகாரி இங்கே வந்தார். வழக்கமா இப்படி அதிகாரிங்க பள்ளிக்கூடத்துல போனா குழந்தைங்கள் எழுந்திருச்சு நிற்பாங்க இல்லையா? இவங்க எழுந்திருக்கலை. அவங்க பாட்டுக்குப் படிச்சுக்கிட்டு இருக்காங்க. இவருக்குக் கோபம். ஒரு குழந்தையைக் கூப்பிட்டு, ‘ஏன் எழுந்திருக்கலை’னு கேட்டார். அந்தக் குழந்தை பதிலுக்கு, ’ஏன் எழுந்திருக்கணும்’னு கேட்க, உறைஞ்சுட்டார் அந்த அதிகாரி. இதுதான் நான் முக்கியம்னு நெனைக்கிறேன்.
ஒரு குழந்தையும் சக மனுஷன்தான். அதுக்குனு சுயமரியாதை உண்டு. நாம மரியாதைங்கிறபேருல ஆரம்பத்துலேயே அதை அடக்கி ஒடுக்க ஆரம்பிக்கிறோம்.
நம்ம சமூகம் ஏன் இப்படி இருக்குனு யோசிச்சுப் பாருங்க. அடுக்குகள் தெரியும். ஒருத்தருக்கு மேல் ஒருத்தர்; அவருக்கு மேல் இன்னொருத்தர்னு அடுக்கப்பட்டு இருக்கிறது புரியும். தனக்குக் கீழ் இருக்குறவன் தனக்குப் பணியணும். இந்தப் பணிவை நாம மரியாதைனு சொல்றோம்; நான் பயம்னு சொல்ல விரும்புறேன். இந்தப் பயத்தை உடைச்சுட்டா போதும்; சுயமரியாதை வந்துடும்; எல்லாம் மாறிடும். அதை மாண்டிசோரி கல்விமுறை தருது. என்ன கொடுமைன்னா, ஏழைகளுக்கு அவசியமான இப்படிப்பட்ட கல்விமுறைகூட பணக்காரங்களோடதா இந்தச் சமுதாயம் மாத்திட்டது. அதை மாத்தினோம்னு நாங்க நெனைக்கிறோம்.
எவ்வளவோ பேரோட பங்களிப்பும் ஒத்தாசையும் இதுல இருக்கு. முதல்முதல்ல எங்களுக்கு அனுமதி கொடுத்த கமிஷனர் விஜயகுமார்ல தொடங்கி இன்னைக்கு மேயரா இருக்குற துரைசாமி வரைக்குமான அதிகாரிகள், சம்பளத்தை ஒரு பொருட்டா நெனைக்காம, தங்களோட குழந்தைங்களா நெனைச்சு அவங்களோட மல ஜலம் வரைக்கும் அள்ளுற எங்களோட ஆசிரியைகள், இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுட்டு தானா முன்வந்து உதவுற நல்ல உள்ளங்கள்... இதுல நான் ஒரு பொருட்டே இல்லை” என்கிற பத்மினிக்கு வழிகாட்டி காந்தி.
“காந்தி சொல்வார்... ‘எந்த விசேஷ குணமும் இல்லாதவன். சாமானியர்களிலும் சாமானியன். என்னாலேயே இதைச் செய்ய முடியும் என்றால், உங்களால் இன்னும் முடியும்’னு. என்னைப் பத்தி யாராவது பெருமையா பேசுனா, நானும் அதையே சொல்வேன். என்னோட 72 வயசுல இந்தக் காரியத்தை நான் ஆரம்பிச்சேன். நிச்சயமா என்னைவிட எல்லோராலும் அதிகமாவே செய்ய முடியும்!”
சமசு - தொடர்புக்கு writersamas@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக