தமிழர்களை த் தமிழர்களே ஆளவேண்டும்: சேனாதிராசா
“தங்களை தாங்களே ஆள வேண்டும்” என்ற தமிழர்களின் முடிவே வடக்கு மாகாணத்
தேர்தல் வெற்றிக்கு காரணம் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ. சேனாதிராசா.
மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு வந்திருந்தார் சேனாதிராசா. அவரை
“இந்து தமிழ்” நாளிதழுக்காக சந்தித்தோம். அவர் நமக்கு அளித்த சிறப்புப்
பேட்டி:
தமிழர் பகுதிகளில் ராணுவ ஆதிக்கம்
இலங்கை அரசுக்கு இத்தேர்தலை நடத்த விருப்பமில்லை. தேர்தலுக்கு சுதந்திர
முன்னணியைச் சேர்ந்தோர் எதிர்ப்பு குரல் எழுப்பினர். போருக்கு பின்னுள்ள
சூழலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ராணுவ ஆதிக்கம், தலையீடு
அதிகமாக இருந்தது. இப்பகுதிகளில் ஜனநாயக சூழல் ஏற்படும் நோக்கில் இந்தியா
மற்றும் சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலால் தேர்தல் நடத்தப்பட்டது.
இத்தேர்தலிலும் கடந்த கால தேர்தல்போல ராணுவ தலையீடு அதிகம் இருந்தது.
ஆளுங்கட்சி வேட்பாளர் பட்டியலில் ராணுவத்தினர் நிறுத்திய வேட்பாளர்களும்
இருந்தார்கள். அத்துடன் ராணுவ வீரர்கள் தமிழர்கள் வீடுகளுக்கும் சென்று
பிரசாரம் செய்தனர். வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்த செப்டம்பர் 21-ம்
தேதிக்கு முந்தைய நாள் இரவு ராணுவத்தினர் சீருடையுடனுடம், சீருடை
இல்லாமலும் வீடு வீடாகச் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கக்
கூடாது என்று மறைமுக எச்சரிக்கை விடுத்தனர். இச்சூழலில்தான் தமிழர்கள்
முக்கிய முடிவை எடுத்தனர். அதன் விளைவே தமிழ் கட்சிகள் பெற்ற அமோக வெற்றி.
போருக்கு பிந்தைய நிலைப்பாடு
தமிழர்களின் முக்கிய நிலைப்பாட்டுக்கு காரணம் உண்டு. கடந்த 60
ஆண்டுகளிலும், போர் நடந்த காலங்களிலும் ஆண்ட அரசுகள், தமிழர்களை அழிக்க
எடுத்த நடவடிக்கைகளைவிட போருக்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளால் ராஜபக்ஷ அரசு,
தமிழ் இன அடையாளங்களை தீவிரமாக அழிக்க நடவடிக்கை எடுத்தன. குறிப்பாக வடக்கு
மாகாணத்தில் லட்சக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். சீன ராணுவ
முகாம்கள் அமைக்கப்பட்டன. ராணுவக் குடியிருப்புகள் நிறுவப்பட்டன. பல
இடங்களில் இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் மசூதிகள்
அகற்றப்பட்டு புத்த சிலைகள் அமைக்கப்பட்டன. தமிழ் மக்களின் சொந்த
நிலங்களில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. விவசாய நிலங்கள் தற்போது
தமிழர்களிடம் இல்லை. அத்துடன் தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்க சுதந்திர
அனுமதி இல்லை. இதனால்தான் தமிழர்கள் அதிகளவு வாக்களித்தனர். இதனால்
மிகப்பெரிய ஜனநாயக தீர்ப்பு கிடைத்தது.
அதிகாரங்கள் பறிப்பு
மாகாண அரசுக்கு பல அதிகாரங்கள் இல்லை. 3 மாதங்களுக்கு முன்பு நிதியை
கையாளும் அதிகாரத்தையும் பறித்தனர். நிதி அதிகாரம் முற்றிலும் பறிப்புக்கு
பின்தான் தேர்தல் நடந்து வென்றுள்ளோம். தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு
இலங்கையில் தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆள அரசியல் அமைப்பு உருவாக உதவ
வேண்டும். அத்துடன் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் ஏறக்குறைய 26
இளைஞர்கள் தங்கள் உயிரை பலி தந்துள்ளனர். அவர்களுக்கு இந்த சமயத்தில்
மரியாதை செலுத்துகிறோம்.
உண்மையில் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை மூடி மறைக்கவே தமிழர்
பிரச்சினையை முன்னிறுத்துகிறார் ராஜபக்ஷ. கடந்த நிதிநிலை அறிக்கையில் 70
சதவீதம் ராணுவத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே ஒதுக்கீடு
செய்யப்பட்டது.
விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. அரசுக்கு எதிரான போராட்டங்கள்
அதிகரித்துள்ளன. பொருளாதார விஷயத்தில் தமிழர் நிலை மோசமான நெருக்கடி
சூழலில் உள்ளது.
ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் விவசாய நிலங்கள்
விவசாய நிலங்கள் ராணுவத்தினரிடம் உள்ளது. அதுதான் தமிழர் பொருளாதார
வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். அதேபோல் தமிழ் மீனவர்கள் மீன்பிடிப்பதில்
கட்டுப்பாடுகள் உள்ளன. 80 சதவீத தமிழ் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால்
பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய வளர்ச்சி இவர்களிடத்தில் இல்லை.
பொருளாதாரரீதியாக வாங்கும் சக்தி அற்றவர்களாக தமிழர்கள் உள்ளனர். இவற்றை
சரி செய்ய நடவடிக்கை எடுப்போம்.
ஐ.நா. சார்பில் வருகை தந்த நவநீதம்பிள்ளை தமிழ்ப் பிரதேசங்களில் விசாரணை
நடத்தி சென்றது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும், தமிழகக்
கட்சியினரும், தமிழ் மக்களும் ஒன்றுபட்டு எங்களுக்கு உதவியாக
இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை நம்பிக்கையுடன் முன்வைத்து விட்டு
தண்டுவடம் தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு புறப்பட்டார் சேனாதிராசா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக