புதன், 9 அக்டோபர், 2013

நெஞ்சுவலியிலும் பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு உயிரிழந்த ஓட்டுநர்

நெஞ்சுவலியிலும் பேருந்தை ப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு உயிரிழந்த ஓட்டுநர்

பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையிலும், பேருந்தை பாதுகாப்பாக சாலை ஓரம் நிறுத்திவிட்டு உயிரிழந்த ஓட்டுநரை நினைத்து பேருந்தில் பயணம் செய்த பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
புதன்கிழமை காலை 10 மணியளவில் தனியார் சொகுசுப் பேருந்து  சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில் 14 விமானப் பணிப்பெண்கள், தனியார் விமான பணிப்பெண்கள் இருந்தனர். சொகுசுப் பேருந்தை  சென்னை புரசைவக்கத்தை சேர்ந்த சம்பத் ஓட்டி வந்தார். விமான நிலையத்தில்  இருந்து புறப்பட்டு பரங்கிமலை நெடுஞ்சாலை அருகே வந்தபோது ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போதும் அவர் ஒரு கையினால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையினால் பஸ் ஸ்டியரிங்கினை பிடித்து சமாளித்து ஓட்டினார். பஸ்ஸை மிகவும் சிரமப்பட்டு ஆஸர்கானா வரை ஓட்டி, பத்திரமாக சாலை ஓரம் நிறுத்தினார்.
பேருந்து நின்றதும், அவர் நெஞ்சைப் பிடித்தபடி மயங்கி விழுந்தார். பணிப்பெண்கள் உடனே அலறி அடித்து கீழிறங்கி சாலையில் வந்து கொண்டிருந்த வண்டிகளை நிறுத்தி தகவல் சொல்லி 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
தனது உயிரையும் பொருட்படுத்தாமல், பேருந்தில் பயணித்த தங்களது உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் உயிரிழந்ததைக் கேட்டு பணிப்பெண்கள் 14 பேரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். தங்கள் உயிரைக் காப்பாற்றி உயிர் விட்ட ஓட்டுநரை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்கள்.
இது குறித்து உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பரங்கிமலை போலீஸார் விசாரணை நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக