தலைமையர் உறுதி: உண்ணா நோன்பை முடித்துக்கொண்டார் தியாகு
இதன் தொடர்ச்சியாக, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
காமன்வெல்த் மாநாடு, நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற
உள்ளது. இலங்கை தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க காமன்வெல்த்
அமைப்பைச் சேர்ந்த இந்தியா உள்பட 54 நாடுகளுக்கு அழைப்பு
அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது
என்று தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி
வருகின்றன.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின்
பொதுச்செயலாளர் தியாகு, சென்னையில் கடந்த 1-ம் தேதி முதல் காலவரையற்ற
உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரை போலீஸார்
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் அவர்,
உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
தியாகு, தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை
கைவிட்டுவிட்டு வேறு அறவழியில் போராடலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி,
அவருக்கு ஆலோசனை வழங்கி, வேண்டுகோள் விடுத்தார். எனினும் தியாகு
போராட்டத்தை கைவிடவில்லை.
'தமிழக உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்'
தியாகுவின் உண்ணாவிரதப் போராட்டம் 14-வது நாளாக திங்கட்கிழமை நீடித்த
நிலையில், அன்றைய தினம் இரவு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது
இல்லத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார்.
அப்போது, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா
கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி சார்பில்
வலியுறுத்தினார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம்
மேற்கொண்டு வந்த தியாகுவின் உடல்நிலை குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங், 'காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் தமிழ்
மக்கள் மற்றும் உங்கள் கட்சியின் (திமுக) உணர்வுகளை மதித்து நல்ல முடிவு
எடுப்போம். திமுக தலைவர் கருணாநிதி தலையிட்டு, தியாகுவின் போராட்டத்தைக்
கைவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று டி.ஆர்.பாலுவிடம் கூறினார்.
அதுதொடர்பான கடிதத்தையும் பாலுவிடம் மன்மோகன் வழங்கினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் கொடுத்தனுப்பிய கடிதத்தை திமுக
அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., சென்னை ராஜீவ் காந்தி
அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாகுவிடம் திங்கட்கிழமை
இரவு நேரில் வழங்கினார்.
இந்தச் சூழ்நிலையில், தியாகு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மதியம்
வாபஸ் பெற்றார். குழந்தைகள் கொடுத்த பழச் சாற்றை குடித்து அவர்
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
- தமிழ்இந்து,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக