செவ்வாய், 15 அக்டோபர், 2013

பொதுநலக்குழுவிலிருந்து இலங்கையை நீக்கப் பேரவையில் தீர்மானம் : இராமதாசு

பொதுநலக்குழுவிலிருந்து இலங்கையை நீக்கக் கோரி பேரவையில் தீர்மானம் : இராமதாசு வலியுறுத்தல்

காமன்வெல் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கக் கோரி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காமன்வெல்த் அமைப்பில் ஒரு நாடு தொடர்வதற்கு என்னென்ன தகுதிகள் தேவையோ, அவற்றில் ஒன்று கூட இலங்கைக்கு இல்லை; காமன்வெல்த் அமைப்பிலிருந்து ஒரு நாடு நீக்கப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும் இலங்கைக்கு எதிராக உள்ளன. எனவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று பாமக உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும்  வலியுறுத்தியுள்ளனர். மாணவர்கள் அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், மத்திய அரசோ கேளாக்காதினராய் இருந்து வருகிறது. மாறாக, தமிழர்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்குவது, இலங்கையில் மின் நிலையங்களை அமைத்துத் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இன்னொருபுறம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை வரும் மார்ச் மாதத்திற்குள் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்; தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவத்தினரை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ள நிலையில், அதை ஏற்க முடியாது என்று இராஜபக்சே சவால் விடுகிறார். ஈழத் தமிழர்களுக்கு 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் படி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தும் நிலையில், தமிழர்களுக்கு நில அதிகாரமோ அல்லது காவல்துறை அதிகாரமோ வழங்கப்படாது என்று கூறி இந்திய அரசுக்கு அவமரியாதை செய்திருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
காமல்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் விசயத்தில் முடிவெடுப்பதற்கு முன்பாக தமிழக மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்வேன் என பட்டும்படாமலும் தான் பிரதமர் கூறுகிறாரே தவிர, தமிழர்களின் நலனைவிட  இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது எனக்கு முக்கியமல்ல என்று உறுதிபட தெரிவிக்க மறுக்கிறார்.  எனவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த விசயத்தில் மழுப்பலாக பதிலளிப்பதை விடுத்து, தனது நிலைப்பாட்டை இந்தியா உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இந்த விசயத்தில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் கடமை தமிழக அரசுக்கு  உள்ளது.  எனவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது; அம்மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, வரும் 23 ஆம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும். பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து, தீர்மானத்தின் நகலைக் கொடுத்து அதில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக