புதன், 16 அக்டோபர், 2013

மீனவர் சிக்கலில் மத்திய அரசு பாகுபாடு: செயலலிதா குற்றச்சாட்டு

மீனவர் சிக்கலில் மத்திய அரசு பாகுபாடு: தலைமையருக்கு அனுப்பிய மடலில் செயலலிதா குற்றச்சாட்டு


இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடுமாறு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 65 பேரை விடுவிப்பதற்கு, அங்குள்ள தூதரம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத்தின் மீனவர் மீதான தாக்குதலுக்கு உடனே பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பியதைச் சுட்டிக்காட்டியவர், மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில், அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைக் கோரி மீண்டும் மீண்டும் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளாததது மிகவும் வேதனையடையச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
37 மீனவர்கள் கைது
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதலும், கைது நடவடிக்கையும் தொடர்வதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 24 மணி நேரத்துக்குள் 37 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டதையும், அவர்களிடம் இருந்து 9 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டதையும் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
தாம் எத்தனை முறை கடிதம் எழுதினாலும், அதற்கு உரிய நடவடிக்கையே எடுக்கப்படுவதில்லை என்று பிரதமரை குறை கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் அலட்சியப்போக்கு காரணமாக, இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகள் அதிகமாகிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
குர்ஷித் பயணம் வீண்
சமீபத்தில் இலங்கைப் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மீனவர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரபட்சம் ஏன்?
அண்மையில், குஜராத்தையொட்டி கடல் எல்லையில் மீனவர் மீது பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை உடனடியாக மத்திய அரசு கண்டித்ததுடன், பாகிஸ்தான் துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பி, துரிதகதியில் செயல்பட்டுள்ளது என்ற விவரம் தனக்கு கிடைத்துள்ளது என்ற முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை மட்டும் உதாசீனப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பாராமுகம் காரணமாக, தங்கள் சொந்த நாடே தங்களை கைவிட்டுவிட்டது என்ற மன நிலையில் தமிழக மீனவர்கள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக தலையிடுக
இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 65 மீனவர்களை விடுவிக்கவும், இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட 35 படகுகளை மீட்டுத் தரவும், இந்தியத் தூதரகம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அப்பாவி இந்திய மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரிடன் நடவடிக்கையை நிறுத்துவதற்கு, அந்நாட்டு அரசிடம் கண்டிப்புடன் கூற வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
 
 
- தமிழ்இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக