ஞாயிறு, 13 அக்டோபர், 2013

அ. காற்றடித்தாலும் இனி வாழை சாயாது! ஆ. எடை குறைந்தால் பயப்படாதீர்கள்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_825400.jpg

காற்றடித்தாலும் இனி வாழை சாயாது! 
காற்றின் தாக்கத்திலிருந்து வாழைத்தோப்புகளை ப் பாதுகாக்கும், புது ரக சவுக்கு மரத்தை உருவாக்கியுள்ள ஆராய்ச்சியாளர், புவனேசுவரன்: நான், கோவையில் உள்ள, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறேன். வாழை சாகுபடியில் உள்ள பெரும் சவாலே, அவற்றை காற்றின் தாக்கத்தில் இருந்து, பாதுகாப்பது தான். நீர் தட்டுப்பாடு, நோய் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பைவிட, பலத்த காற்றால் ஏற்படும் பாதிப்பில் தான், விவசாயிகளுக்கு அதிக நட்டம் ஏற்படும். பருவக்காற்று வீசும் காலங்களில், கம்புகளால் முட்டு கொடுப்பது, 'பிளாஸ்டிக் பெல்ட்'டால் கட்டுவது, மண் அணைப்பது, இலைகளை கவாத்து செய்வது வழக்கம். இருந்தும், 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசினால், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துவிடும். கடலோர பகுதிகளில் வீசும் காற்றை தடுக்கவும், கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புழுதியை தடுக்கவும், பொதுவாக சவுக்கு மரங்களை வளர்ப்பர். எனவே, காற்றின் தாக்கத்திலிருந்து வாழை தோப்புகளை பாதுகாக்க, அடர்த்தியான வீரிய ரக சவுக்கு மரத்தை உருவாக்க முயற்சித்தோம்.
இவ்வாறு, 10க்கும் மேற்பட்ட, உயர் ரக சவுக்கு மரத்திலிருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டு, 'குளோனிங்' என்ற தாவர இனப்பெருக்கம் முறையில், 'காசுரினா ஜூங்குனியானா' என்ற புதிய ரக சவுக்கை கண்டுபிடித்தோம். இதை, வாழைத்தோப்பின், நான்கு திசைகளின் ஓரத்தை சுற்றிலும், மூன்று வரிசையாக, வரிசைக்கு வரிசை, 1 மீ., இடைவெளியில், குறுக்கு-மறுக்காக நட வேண்டும். இச்சவுக்கை வளர்ப்பதால், காற்றின் வேகத்தை, 46 சதவீதமும், மண்ணரிப்பை, 76 சதவீதமும் கட்டுப்படுத்தலாம். மேலும், தோட்டத்தின் தட்பவெப்ப நிலை சமன் ஆவதுடன், காற்றில் உள்ள தழைச்சத்தையும் மண்ணில் நிலைநிறுத்துகிறது. ஒரு முறை நடப்படும் இச்சவுக்கு மரம், மூன்று ஆண்டுகள் வரை பயன்படும். பின், சவுக்கு மரங்களை அறுவடை செய்வதன் மூலம், உபரி வருமானமும் பெற முடியும். தொடர்புக்கு: 0422-2484100

எடை குறைந்தால் பயப்படாதீர்கள்!
குழந்தை நல மருத்துவர், சுப்ரமணியன்: குழந்தையின் உடல் எடை, ஆரோக்கியத்தை தீர்மானிக்கிற விஷயங்களில் ஒன்று, என்பதால், எடையை வைத்து மட்டுமே, குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியாது. பிறந்த குழந்தையின் எடை, 2.5 முதல் 3.5 கிலோ வரை இருக்கலாம். தாயின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் பரம்பரையை பொறுத்தே, குழந்தை யின் எடை அமையும். எனவே, 'நான் நல்லா தான் சாப்பிட்டேன்; குழந்தை ஏன் அதிக எடையுடன் பிறக்கவில்லை...' என, தாய் கேள்வி கேட்க முடியாது. குழந்தை பிறந்த சில நாட்களில், எடை குறையும். உடம்பில் உள்ள, தேவையில்லாத நீர் இறங்குவதே, இதற்கு காரணம். ஒரு வாரத்திற்கு பின், மீண்டும் சரியாகி விடும். குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு, தினமும், 20 முதல் 30 கிராம் வரை, உடல் எடை கூடும். மூன்றி லிருந்து, ஆறாம் மாதம் வரை, தினமும், 15 கிராம் வரையே, எடை கூடும். ஆறாம் மாதத்திலிருந்து, குழந்தையின் வளர்ச்சி அளவு குறைய ஆரம்பிக்கும். எனவே, 'பிறந்த ஆறு மாதம் வரை, குழந்தை நன்றாக வளர்ந்தது. யாரு கண்ணு பட்டது என, தெரியவில்லையே...' என, பெற்றோர் கவலைப்பட தேவையில்லை. ஒரு வயது குழந்தைக்கு, 8 முதல் 12 கிலோ வரை, எடை இருக்கும். எட்டு கிலோவை விட சற்று குறைந்தாலும், பிரச்னை இல்லை. குழந்தை நன்றாக ஓடி ஆடி விளையாடுகிறதா என்பதே முக்கியம். எனவே, குழந்தையின் எடைக்கும், ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும், குழந்தையின் எடை தான், அதன் வளர்ச்சியை சரியாக காட்டும் கருவியாக செயல்படுகிறது. மேலும், 200 குழந்தைகள் இருக்கும் இடத்தில், சில குழந்தைகளை மட்டும், பிரச்னை உடையவர்கள் என, எளிதில் காட்ட, இந்த எடை வளர்ச்சி விகிதம் உதவும். பெரும்பாலான குழந்தைக்கு நீர்சத்து தான், அதிகம் இருக்கும். சிலருக்கு திசு, எலும்பு, கொழுப்பு போன்றவை அதிக எடையுடன் இருப்ப தால், குண்டாகவும் இருப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக