நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்கும் அன்ன ஆலயம்
எத்தனையோ தெய்வங்களுக்கு ஆலயங்கள், இந்த நாட்டில் உள்ளன. ஆனால்,
சென்னையில், உணவுக்கு ஒரு ஆலயம் உள்ளது.சென்னை, பெரம்பூரில், அருள்ஜோதி
அன்ன ஆலயம், கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை, மதியம்,
இரவு என, மூன்று வேளையும், பசி என்று வருவோருக்கு, இல்லை என்று சொல்லாமல்,
உணவளித்து வருகிறார் சதீஷ்ராஜ் 'அடிகளார்', 47.
1995ல் இருந்து...:
கடந்த
1995ல், வீட்டிலேயே, சொந்த செலவில், அன்னதான பணியை சதீஷ்ராஜ் துவங்கினார்.
பின், நன்கொடையாளர்கள் வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின்
அளவு அதிகரிக்க, 1999ல், கென்னடி சதுக்க பிரதான சாலையில் தனியே அன்னதானக்
கூடம் அமைத்தார்.இங்கு, தற்போது, மூன்று வேளையும் அன்னதானம் நடந்து
வருகிறது. இதுதவிர, தினமும், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில்,
உரிய அனுமதி மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மாணவ, மாணவியருக்கு, காலை
உணவாக, அரிசி கஞ்சி வழங்கி வருகிறார்.ஆலய அன்னதானத்திலும், இந்த உணவு ஆலயம்
பங்கேற்கிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட
கோவில்களில், சுழற்சி முறையில், மதிய சாப்பாடு, அன்ன ஆலயத்தில் இருந்து
அனுப்பப்படுகிறது.இந்த வகையில், தினமும், ஏறத்தாழ 5,000 பேர், அருள்ஜோதி
அன்ன ஆலயம் மூலம் பசியாறி வருகின்றனர்.
வேதாத்திரி மகரிஷி:
அன்ன
ஆலயம் அமைத்தது குறித்து சதீஷ்ராஜிடம் கேட்ட போது, ''என்னை
விளம்பரப்படுத்தும் வகையில் நான் எதுவும் கூறமாட்டேன். இருந்தாலும்,
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கிறேன்,'' என்றபடி,
பதிலளிக்க துவங்கினார்.''ஆரம்பத்தில் நானும் சாதாரணமாக வேலை, வீடு என்று
சென்று கொண்டுஇருந்தேன். ஒருநாள் மனிதனாய் பிறந்த நாம், ஏதாவது சேவை செய்ய
வேண்டும் என எண்ணி, அன்னதானம் செய்ய துவங்கினேன். வேதாத்திரி மகரிஷி
மீதிருந்த பற்றால், பின்னாளில் சேவையே வாழ்க்கையாகி விட்டது. ஆரம்பத்தில்
சொந்த செலவில் நடந்த அன்ன ஆலயப் பணிகள், இப்போது பொதுமக்களின் நன்கொடை
மூலம் குறைவில்லாமல் நடைபெறுகின்றன,'' என்றார் அவர்.அன்னதானம் தான்,
அறங்களில் தலை யானது என்ற அவர், ''முன்பின் அறியாத, தொடர்பே இல்லாத ஒருவர்
தரும் அன்னதானம், எங்கோ ஒருவரின் வயிற்றுப் பசியை போக்குகிறது. அவரது வாய்
வாழ்த்தா விட்டாலும், அவரது பசியாறிய உணர்வு, தானமளித்தவர்களை மனதார
வாழ்த்தும்,'' என்றார்.
'மக்களால் நடக்கிறது':
''பொதுமக்கள்
தரும் நன்கொடையை நாங்கள் பணியாட்களை அனுப்பி வாங்கு வோம். தற்போது, பலரது
நன்கொடையை நேரில் சென்று பெற முடியாத அளவுக்கு, நன்கொடைகள் குவிகின்றன.
இந்த அன்னதானப் பணியில் நான் வெறும் கருவி மட்டுமே. மக்கள் தான் இதை
நடத்துகின்றனர்,'' என, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.அருள்ஜோதி அன்ன
ஆலயத்தில் தொடர்ந்து ஆறு மாதத்திற்கு மேல் ஒருவரை காண முடியாது. அதன் பின்,
அவர் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பார் என, உறுதியுடன் தெரிவிக்கிறார்
சதீஷ்ராஜ்.
இப்படியுமா?
உரையாடல்
முடிந்ததும் தம்பதியராய் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றபோது,
சதீஷ்ராஜும், அவரது மனைவியும் மறுத்து விட்டனர்.இன்று 100 பேருக்கு
சாப்பாடு போட்டு விட்டு, 'போஸ்' தரும் சிலருக்கு மத்தியில், தினமும் 5,000
பேருக்கு உணவளிக்கும் தம்பதியர், செய்தியாக கூட தங்களுக்கு விளம்பரம்
வேண்டாம் என, மறுத்தது, உண்மையிலேயே அதிசயமாகத் தான் இருந்தது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைப்பில் 5000 பேருக்கு எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இறுதிப்பத்தியில் 500 எனத் தவறாக உள்ளது.திருத்த வேண்டுகிறேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக