புதன், 16 அக்டோபர், 2013

பெண் தொழில்முனைவோர் வழிகாட்டி மணிமேகலை

பெண் தொழில்முனைவோர் வழிகாட்டி

Comment   ·   print   ·   T+  
பல்கலைக்கழகத்தில் பேராசிரியை பணி கிடைத்தால், ஒரு பெண் என்ன செய்வார்? பெரும்பாலானோர் தான் உண்டு, தன் வேலையுண்டு என இருக்கவே விரும்புவார்கள். ஆனால், மணிமேகலை அப்படி தன்னைச் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை.
பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியப் பெண்களையும் கிராமப்புற பெண்களையும் சுயதொழில் முனைவோராக்கி வருகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் மைய இயக்குனரான மணிமேகலை, பெண்கள் மேம்பாடு பற்றி அவர்கள் மத்தியில் நம்பிக்கை விதையை விதைத்து வருகிறார்.
அடிப்படையில் பொருளாதார பேராசிரியான மணிமேகலை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் மையம் தொடங்கிய போது அதன் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தற்போது மகளிரியல் மையம், தனி துறையாக தரம் உயர்த்தப்பட்டு அதன் தலைவராக மணிமேகலை இருந்து வருகிறார்.
பெண் மேம்பாடு, பெண் உரிமை, பெண் சட்டப் பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர், தமிழ்நாடு பெண் தொழில் முனைவோர் சங்கத்தை உருவாக்கி பல பெண்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியிருக்கிறார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு சுயதொழிலுக்கான பயிற்சிகள் அளித்து, வங்கியில் கடன் உதவி ஏற்பாடு செய்து ஏராளமான பெண்களை தொழிமுனைவோராக மாற்றிக் காட்டியது இவரது திறமைக்கு ஒரு சான்று.
நவீன தையல் பயிற்சி, ஆயத்த ஆடை பயிற்சி, வாழை நாரில் இருந்து புடவை தயாரிக்கும் பயிற்சி, நாப்கின் பயிற்சி என தமிழ்நாடு பெண் தொழில்முனைவோர் சங்கம் மூலம் இதுவரை சுமார் 3 ஆயிரம் பெண்கள் பயிற்சி பெற்று, சுயதொழில் செய்து வருகின்றனர்.
கல்வியறிவே ஒரு பெண்ணை சமூகத்தில் உயர்த்தும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார் மணிமேகலை. அதனால் படிக்க வசதியில்லாத நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்கள் கல்வி பெறும் வகையில் நிதி திரட்டி உதவுவதில் மணிமேகலை தனி கவனம் செலுத்தி வருகிறார்.
பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் மணிமேகலை, இது குறித்த ஆய்வு படிப்புகளுக்கு நெறியாளராக இருந்து ஏராளமான மாணவிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
கடந்த 18 ஆண்டுகளாக பாலினம் மற்றும் அது சார்ந்த பிரச்சினைகள் பற்றியும் மணிமேகலை பேசாத இடங்களில்லை. பெண்கள் மேம்பாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
கடந்த ஆண்டு மகளிரியல் துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து மணிமேகலையை பொருளாதார துறைக்கு மாற்றி பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த உத்தரவை மாற்றக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சினையில் ஆளுநர் தலையிட்ட பிறகு மணிமேகலைக்கு மீண்டும் அதே பொறுப்பு கிடைத்தது. மணிமேகலைக்காக மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி பாசக்கரம் நீட்டக் காரணம் சமூகம் மற்றும் பெண்கள் நலனுக்காக அவர் பாடுபட்டதுதான். பிறருக்காக நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் சமூக முன்னேற்றத்துக்கான அடிக்கல்தானே. அதைத்தான் செய்துவருகிறார் மணிமேகலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக