சனி, 3 ஆகஸ்ட், 2013

வயிற்று பிழைப்பிற்காக இடர் வாய்ப்பு தீரச் செயல்கள்

வயிற்று பிழைப்பிற்காக  இடர் வாய்ப்பு தீரச் செயல்கள்

சிறிது கவனம் சிதறினாலும் "ரிஸ்க்' ஆகிவிடும் என்ற நிலையில், வயிற்று பிழைப்புக்காக சாகசங்கள் நிகழ்த்தப்படுவது இன்றளவும் தொடர்கிறது. சாகசங்கள் செய்பவர்கள், ரிஸ்க் எடுப்பதை சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். வயிற்று பிழைப்புக்காக இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகள் இன்றளவும் பல்வேறு பகுதிகளில் நடந்துகொண்டுதான் உ ள்ளது.

புதுச்சேரியில் இப்படி ஒரு மயிர்கூச்செரியும் சாகச நிகழ்ச்சி கதிர்காமம் தில்லையடிம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பெரம்பலூர் காரைக்கிராமத்தை சேர்ந்த தங்கவேல், ராதா தலைமையிலான சாகச குழுவினர், பள்ளி மாணவர்கள் மத்தியில் சாகசங்கள் செய்து காட்டினர். உடலை பின்புறமாக வளைத்து பொருட்களை எடுப்பது, வளையத்தில் மூவர் நுழைவது, இரும்பு கம்பியை பெண்ணின் தொண்டை குழியில் வைத்து வளைப்பது, நீர் நிரம்பிய குடத்தை பற்களால் தூக்குதல், தீ மூட்டப்பட்ட வளையத்திற்குள் நுழைதல் என பல்வேறு சாகசங்களை இரண்டு மணி நேரம் செய்து காண்பித்தனர். தங்கவேலின் அண்ணன் ராஜா, தலையில் இருந்து மார்பளவுவரை தலைக்கீழாக மண்ணில் புதைந்து நிகழ்த்திய சாகசம் மாணவர்களை திகிலடைய செய்தது. மனதை திடப்படுத்தும் இந்நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வமுடனும் கண்டுகளித்து ஆர்ப்பரித்தனர். இப்படி, மேடைகளில் பாராட்டு மழையில் நனையும் சாகச கலைஞர்களின் வாழ்க்கையோ நிஜத்தில் சோகமானதாக உள்ளது.

சாகச கலைஞர் தங்கவேலிடம் பேச்சு கொடுத்த போது""கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சாகச கலைஞர்கள் என்றால் கிராம மற்றும் நகர மக்களிடம் மரியாததை இருந்தது. ஆனால், தற்போது நகர மக்கள் எங்களை மதிப்பதில்லை. கிராமப்புற மக்கள்தான் இன்றைக்கும் எங்களை ஆதரிக்கின்றனர். கோவில் விழாக்கள் மற்றும் முக்கிய திருவிழாக்களில் எங்களின் சாகசங்களை பார்த்து ரசித்து காணிக்கையாக பணம் தருவார். ஆனால், தற்போது, அந்த இடத்தை மின்சார ராட்டினம், திரைப்படங்கள் பிடித்து விட்டதால் தற்போது வரவேற்பு குறைந்துவிட்டது. எங்களை சாகசம் செய்து காட்டும்படி யாரும் அழைப்பதில்லை. "காடு ஆறுமாசம், காடு ஆறு மாசம்' என்ற கதையாக, எங்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டுள்ளது. கோவில் திருவிழாக்கள் இல்லாத நேரங்களில், பள்ளிகளுக்கு சென்று சாகசம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். வெளியில் இருந்து பார்த்தால் பிச்சை எடுப்பது போல் தோன்றலாம். ஆனால் இது எங்களுக்கு பரம்பரை தொழில். ஊர், ஊராக சென்று சாகசம் செய்வது மனத்திற்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக