சாரல் விழாவில் முதல்முறையாகக் காய்கனி, பழக் கண்காட்சி
குற்றாலம் சாரல் திருவிழாவின் ஒரு பகுதியாக முதல்முறையாக காய்கனி, பழக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஐந்தருவி அருகே நடைபெற்ற இக்கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட
ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலைமை வகித்தார். வீட்டுவசதி வாரியத் தலைவர்
ஆர்.முருகையாபாண்டியன் முன்னிலை வகித்தார். காய்கனி, பழக் கண்காட்சியை
அமைச்சர் பூ.செந்தூர்பாண்டியன் திறந்துவைத்துப் பேசியதாவது: உதகை,
கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மட்டுமே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று
வந்தன. நமது ஊரிலும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்த மாவட்ட
ஆட்சியரின் முயற்சிக்கு பாராட்டுகள்.
சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து இந்தக் கண்காட்சியைக் கண்டு ரசிக்க
வேண்டும். சுற்றுச்சூழல் பூங்காவையும் சுற்றிப் பார்த்து மகிழ வேண்டும்
என்றார் அவர்.
மகேந்திரகிரி இஸ்ரோ திரவ இயக்க திட்ட மையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தையும் அமைச்சர் திறந்துவைத்தார்.
இந்த அரங்கில் மாதிரி ராக்கெட்டுகள், செயற்கைக்கோள் மாதிரிகள்,
ராக்கெட்டுகள் ஏவப்படும் முறை குறித்து விளக்கப்பட்டது. கிள்ளிகுளம் வேளாண்
கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வர் எம்.ஏ.கே.பிள்ளை வாழ்த்திப் பேசினார்.
வேளாண் துறை இணை இயக்குநர் கி.சௌந்திரராஜன் வரவேற்றார்.
கண்காட்சியில் பல்வேறு காய்கனிகளால் டிராகன், மயில், முயல், பச்சோந்தி,
கிங்காங், டைனோசர், பெங்குவின், பஞ்சவர்ணக் கிளிகள், முதலை,
ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட உருவங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை
சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக