ஞாயிறு, 28 ஜூலை, 2013

நான் தென்காசி சந்தோசு பேசுகிறேன்

நான் தென்காசி சந்தோசு பேசுகிறேன்

சந்தோசு என்கின்ற பழநி மாரியப்பன்.


திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர், இருபத்தியொரு வயதாகும் இவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட பார்வைக்கோளாறு படிப்படியாக அதிகமாகி தற்போது பார்வையை முழுமையாக இழந்துள்ளார், மேலும் கேட்கும் சக்தியும் குறைவு, இத்துடன் சிறுவயதில் ஏற்பட்ட சர்க்கரை நோய் காரணமாக தினமும் இரண்டு முறை இன்சுலின் போடவேண்டும்.


இவ்வளவு பிரச்னை உள்ளவர் எப்படி இருப்பார், எப்போதும் வீட்டில் முடங்கிக் கிடப்பார் என்றுதான் யாருக்கும் எண்ணத்தோன்றும், ஆனால் உண்மையில் அப்படியில்லை கவலைப்படுவதால் குறைகள் குறையப்போவதில்லை என்ற யதார்தத்தை உணர்ந்து, தான் என்ன செய்ய முடியும் என்பதை புரிந்துகொண்டு தற்போது பல துறைகளில் சாதனை புரிந்தவராக உள்ளார்.



செல்லப்பிள்ளை:

தென்காசி அருகே உள்ள ஆயக்குடி ஜெபி கல்லூரியில் பிஎட் படித்துவரும் இவரை முதலில் கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் சேர்ப்பதற்கு தயக்கம் காட்டியது. காரணம் சாதாரணமாக உள்ள கல்லூரி மாணவர்களோடு கலந்து அவர்கள் வேகத்திற்கு படிக்க முடியாதே என்பதால், ஆனால் கல்லூரியின் செல்லப்பிள்ளையே இப்போது சந்தோஷ்தான்.
காரணம் கல்லூரியின் சார்பில் நடைபெறும் பேச்சுப்போட்டி, வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகிறார். கல்லூரியின் முதல்வர் முதல் வாயில் காப்பாளர் வரை சந்தோஷ் என்றால் இப்போது எல்லாம் தனி கவனம்தான், கவனிப்புதான்.

சந்தோஷ்க்கு மேலும் பல திறமைகள் உண்டு, நமக்கெல்லாம் இப்போதும் குடும்பத்தில் உள்ளவர்களின் போன் எண்ணைக் கேட்டால் மொபைலில் பார்த்துதான் சொல்வோம், ஆனால் சந்தோஷிடம் ஒருமுறை உங்கள் போன் எண்ணையும் பெயரையும் கூறிவிட்டு பிறகு எப்போது உங்கள் பெயரைச் சொன்னாலும் உங்கள் மொபைல் போன் எண்ணை உடனே சொல்லிவிடுவார்.


பேச்சாற்றல்:

அடுத்ததாக ஒரு ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து பேசுங்க தம்பி என்று சொன்னால் போதும் அடுத்த சில நிமிடங்களிலேயே நல்ல தமிழில் கொடுத்த தலைப்பில் சரளமாக பேசக்கூடிய வல்லமை உண்டு. இவரது தந்தை அம்பலவாணன் ஒரு பள்ளி ஆசிரியர், தன் பிள்ளையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யக்கூடியவர், தலையை அடகு வைத்தாவது அவன் விருப்பத்தை நிறைவேற்றும் பாசக்கார தந்தை. இவரை ரோல் மாடலாகக் கொண்டு தானும் ஒரு ஆசிரியராக வரவேண்டும் என்பது சந்தோஷின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்ற இவரது தந்தையும், தாய் சண்முகமாலதியும், தம்பி சச்சின் பிரபாகரனும் நிறையவே துணை நிற்கின்றனர். இவர்களைத் தாண்டி இவர்களது உறவினர் அலங்கார் ரிசார்ட்ஸ் சின்னவர் ஈஸ்வர்ராஜ், சந்தோஷை சந்தோஷப்படுத்தவும், மேடையேற்றி பிரபலப்படுத்தவும் நிறைய பாடுபட்டு வருகிறார்.

அதிலும் தாய் சண்முகமாலதியின் பங்கு அலாதியானது தனது மகனுக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவிற்கும் தன்னை வருத்திக் கொள்ளத் தயங்காதவர், மருத்துவ செலவை சரிக்கட்ட வேண்டும் என்பதற்காக வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். சந்தோஷ்க்கு தாய்க்கு தாயாக மட்டுமின்றி, நல்ல தோழனாக, நல்ல ஆசிரியராக, நல்ல குருவாக என்று எல்லாமாக இருந்து வழிகாட்டி வருகிறார். இப்போது கூட பார்வை இல்லாதவர்களுக்கு பயன்படும் வகையில் வெளிநாட்டில் வாய்ஸ் கம்ப்யூட்டர் இருப்பதாக அறிந்து அந்த கம்ப்யூட்டரை தனது மகனுக்கு எப்படியாவது தருவித்து கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார், தெரிந்த வாசகர்கள் வழிகாட்டி உதவலாம். சண்முகமாலதியின் எண்: 9865664016.


இலட்சியம்:

சந்தோஷைப் பற்றி நிறைவாக சொல்ல வேண்டும் என்றால் அவர் தனது குறைகளைப்பற்றி ஒரு போதும் கவலைப்பட்டவர் கிடையாது. தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தன்னால் இந்த சமூகமும் சந்தோஷமாக இருக்கவேண்டும், நல்ல ஆசிரியராகி அடுத்த தலைமுறைக்கான அற்புதமான மாணவர்களை உருவாக்கவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார் அவரிடம் பேசுவற்கான எண்: 9659294079. இவர் போனை எடுக்கவில்லை என்றால் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம் ஆகவே இரவு ஏழு மணிக்கு மேல் பேசவும், பேசுபவர்கள் சந்தோஷ்க்கு கொஞ்சம் காதிலும் பிரச்னை என்பதை புரிந்து கொள்ளவும். நன்றி!

- எல்.முருகராசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக