வியாழன், 1 ஆகஸ்ட், 2013

தமிழக மீனவர்கள் தாக்கப்படல் : முதல்வர் கண்டனம்


தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கண்டனக் கடிதம்


தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இதில் மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கண்டனம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 34 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை இலங்கைச் சிறைகளில் நீண்ட நாள்கள் சிரமப்பட்டுக் கழிப்பது தொடர்கதையாகி வருகிறது.
கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும், கச்சத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்படுவது குறித்தும் நான் மீண்டும் மீண்டும் தங்களுக்கு கடிதம் எழுதிவருகிறேன்.
2013 ஜூன் 17ம் தேதியிட்டு நான் எழுதிய கடிதத்தை நினைவூட்டுகிறேன்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் ஜூன் 15ம் தேதி மீன் பிடிக்கச் சென்று, அவர்கள் 2 படகுகளுடன் இலங்கைக் கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். பின்னர் அனுராதபுரம் சிறையில் ஜூன் 27 வரை அடைக்கப்பட்டனர். அவர்களின் காவல் ஜூலை 25 வரை நீட்டிக்கப் பட்டது. அதற்காக அவர்கள் வவுனியா சிறைக்கு அனுப்பப்பட்டனர். தற்போது அவர்களின் நீதிமன்றக் காவல் ஆக.6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 விசைப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையால் ஜூலை 6ம் தேதி சிறைப்பிடிக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் அனுராதபுரம் சிறையில் ஜூலை 19ம் தேதி வரை வைக்கப்பட்டனர். இது குறித்து தங்களுக்கு ஜூலை 8ம் தேதி ஒரு கடிதம் எழுதினேன். தற்போது அவர்களுக்கு ஆக.2 வரை சிறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களின் படகுகள், உடமைகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன.
மேலும், தங்களுக்கு எழுதப்பட்ட எனது 2012 ஜூலை 4ம் தேதியிட்ட கடிதம், 2013 ஜூன் 17ம் தேதியிட்ட கடிதங்களை நினைவூட்டுகிறேன்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு 20 மாதங்களுக்கும் மேலாக அங்கே சிறையில் வாடுகின்றனர் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.
இப்படி அடிக்கடி இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கண்மூடித் தனமாகத் தாக்கப்படுவதையும் அவர்களின் உடமைகளும் வாழ்வாதாரமும் சிதைக்கப் படுவதையும் கடிதங்களில் தெரிவித்தும் இந்திய அரசு மெத்தனமாக இருப்பதுடன், எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை உங்கள் முன் வைக்கிறேன். மீனவர்களை விடுவிப்பதற்கு எந்த வித உத்தரவாதமும் அரசு தரவில்லை என்பதை நோக்கும் போது வருத்தமாக உள்ளது.
நமது சமுதாயத்தின் மிகவும் பின்தங்கிய சமூகமாக விளங்கும் மீனவ சமுதாய மக்கள் இப்படி சிரமப்பட்டு அந்நிய மண்ணில் சிறைப்பட்டு, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து, அவர்களின் குடும்பங்களைக் கவனிக்க முடியாமல் போகிறது. இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழக மீனவ சமுதாயமும் கொந்தளிப்பில் உள்ளது. இந்திய அரசு அவர்களின் விடுதலைக்காக எந்த வித உத்தரவாதத்தையும் தரவில்லை என்ற கோபம் அவர்களிடம் உள்ளது.
எனவே, உங்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள், வெளியுறவுத் துறை அமைச்சகம் இதில் நேரடியாகத் தலையிட்டு, உச்சபட்ச முக்கியத்துவம் கொடுத்து, தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விடுவிக்கப்பட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் உங்களது தனிப்பட்ட கவனத்தை நான் எதிர்பார்க்கிறேன்.
- என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் முதலவர் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக