செவ்வாய், 30 ஜூலை, 2013

ஆண்களுக்கு முடிவெட்டி வியப்பு தரும் பட்டதாரி ப் பெண்!


படித்ததோ அயல்நாட்டு வணிகம்!  பிடித்ததோ மழிப்பான்!
ஆண்களுக்கு முடிவெட்டி அசத்தும் பட்டதாரி ப் பெண்!

 பல்லடம்:படித்தது பி.காம்., (பாரின் டிடேடு); ஆனால், பார்ப்பதோ, சலூன் கடை வேலை; ஆண்களுக்கு மிக நேர்த்தியாக கட்டிங், சேவிங் செய்து அசத்துகிறார், பல்லடத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், மாணிக்காபுரம் ரோட்டை சேர்ந்தவர் தங்கவேலு, 55; சலூன் கடைக்காரர். மனைவி கமலம், 48. மகள் தேவி, 30; பி.காம்., பட்டதாரி. இவர், பல்லடம் முனியப்பன் கோவில் எதிரே, சலூன் கடை நடத்தி, ஆண்களுக்கு முடி வெட்டுகிறார்; சேவிங் செய்கிறார். பெண்கள், சிறுமியருக்கு சிகை அலங்காரமும் செய்கிறார். மிகவும் நேர்த்தியாக செய்யப்படும் கட்டிங், சேவிங்க் குறித்து கேள்விபட்டு பலர், வாடிக்கையாளர்களாகி வருகின்றனர்.

தேவி கூறியதாவது:திருப்பூரிலுள்ள சிக்கண்ணா கல்லூரியில் பி.காம்., (எப்.டி.,- பாரின் டிரேடு) படித்தேன். அரசு வேலைக்கு பலமுறை முயற்சித்தும் பலனில்லை. போலீஸ் எஸ்.ஐ., வேலைக்கு மூன்று முறை முயற்சித்து, உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன்; எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைய வில்லை. அரசு வேலை கனவு தற்காலிகமாக முடங்கியது.
குடும்பத்தில் வறுமை தலைதூக்கத்துவங்கியது. இருபது ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வரும் என் தந்தை தங்கவேலு, சர்க்கரை நோய் பாதிப்பால், கடையை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். குடும்பத்தை வழிநடத்த, தந்தை தொழிலை, நானே செய்ய முடிவு செய்தேன்.சிறு வயதில் பள்ளியில் இருந்து வந்ததும், சலூன் கடையில் அமர்ந்திருப்பேன். இதனால், எவ்வாறு முடி வெட்டுவது; சவரம் செய்வது என தெரிந்து கொள்ள முடிந்தது. முனியப்பன் கோவில் எதிரே புதிதாக சலூன் கடை திறந்தேன். முடி வெட்டுவது, சேவிங் செய்வது பெண் என்பதால், ஆண்கள் முதலில் கடைக்கு வர கூச்சப்பட்டனர். சிலர் கேலியும், கிண்டலும் செய்தனர்.ஆண்களுக்கு முடி வெட்டி, சேவிங் செய்யும் நேர்த்தி கவர்ந்ததால், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சலூன் கடை அமைக்கவும், குடும்ப செலவுக்கும் ரூ.50 ஆயிரம் வரை, தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளேன். கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக, அந்த நிறுவனத்திற்கு பகலில் வேலைக்கு செல்கிறேன். காலை 6.00 - 9.00 மணி, மாலை 6.00 - இரவு 10.00 மணி வரை பகுதி நேரமாக சலூன் கடை நடத்தி வருகிறேன். கடன் முடிந்ததும், முழு நேரமாக கடையை நடத்துவேன்இவ்வாறு, தேவி கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக