வியாழன், 12 ஜூலை, 2012

உள்ளத்தில் ஊனமின்மையால் உயர்ந்தவர்



இடுப்பிற்கு கீழ் செயல் இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் சாதித்து வரும் ஜெயன்: திருச்சி மாவட்டம் துறையூர் சோபனபுரம் தான் சொந்த ஊர். இரண்டு வயதிலேயே, பெற்றோரை இழந்து விட்டேன். பாட்டி தான் படிக்க வைத்தார். இப்போது நான், பி.ஏ., பி.எட்., பட்டதாரி.
வயல் மற்றும் தோட்ட வேலைக்கு பல நாள் பட்டினியுடன் சென்றிருக்கிறேன். அவ்வளவு கஷ்டத்திலும், படிப்பின் மேல் இருந்த ஆர்வம் குறையவில்லை. பிளஸ் 2வில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், குழப்பமாக இருந்தது.

தென்காசி ஆயக்குடி அமர் சேவா சங்கத்தில் சேர்ந்தேன். அங்கு என்னைப் போல் வாழ்பவர்களின் இன்னொரு உலகத்தைப் பார்த்து, திகைத்துப் போனேன். அங்கு தான் டைப்பிங், புக் பைண்டிங், கம்ப்யூட்டர் எல்லாம் கற்றுக் கொண்டேன்.
ஆயக்குடி சங்கத்தில் தான், என் மனைவி பேபியைப் பார்த்தேன்; திறமையான பெண். அவரும் இடுப்பிற்கு கீழ் செயல் இழந்த மாற்றுத் திறனாளி தான். ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருந்தார். அந்த சங்கத்தில் கைவேலை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நாங்கள் இருவரும் காதலித்தோம். இரு வீட்டார் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பின், பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன்; எல்லா இடங்களிலும், அவமானம் மட்டுமே மிஞ்சியது.

இனி படிப்பைத் தவிர வேறு யாராலும், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாது என, முடிவெடுத்தேன். வைராக்கியத்துடன் படித்தேன். கட்டணக் கழிப்பறையில் இரவு வேலைக்கு சென்று கொண்டே, காலையில் கல்லூரிக்கு சென்று, பி.ஏ., தமிழில் தேர்ச்சி பெற்றேன்.
பி.எட்., படிப்பில் சேர, கையில் பணம் இல்லை. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனக்கு உதவினர். இப்போது, எம்.ஏ.,வும் முடிக்கப் போகிறேன்.
மனைவி, குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால், இப்போது, வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. வீட்டிலேயே மொபைல் போன் சர்வீஸ் செய்கிறேன். மாதம், 4,000 ரூபாய் வருமானம் கிடைக் கிறது. ஆசிரியர் வேலை கிடைத்தால், எங்கள் பாரம் தீர்ந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக