First Published : 09 Jul 2012 02:27:39 AM IST
சென்னை, ஜூலை 8: வள்ளுவம் என்பது வாழ்க்கை நெறி என்றும், வாழ்வியல்
நெறிமுறைகளைக் கற்றுத் தருவதற்காகத்தான் வள்ளுவர் குறளைப் படைத்தார் என்றும் கவிஞர்
ஈரோடு தமிழன்பன் கூறினார்.
சென்னை போரூர் புனித யோவான் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் வாழ்வியல்
மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி
பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிசளிப்பு விழாவில் அவர் பேசியது:
திருக்குறளை இயற்றிய வள்ளுவருக்கு எந்த சமயத்தையும் முன்னிலைப்படுத்தி எழுத
வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. அதேபோலத் திருக்குறளை மிகச் சிறந்த இலக்கியமாக
படைக்க வேண்டும் என்ற நோக்கமும், வள்ளுவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், அவருக்கு மக்களுக்கு வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத்தர வேண்டும் என்ற
எண்ணம் மேலோங்கியிருந்ததை, அவர் இயற்றிய குறள்களின் வாயிலாக நம்மால் அறிந்துகொள்ள
முடிகிறது.
வள்ளுவர் திருக்குறளை இயற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த
இரண்டாயிரம் ஆண்டுகளில் எத்தனையோ எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள்
மக்களிடையே வந்து சென்றிருக்கிறார்கள்.
ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் வள்ளுவர் மட்டுமே மக்களால் இன்று
வரை நினைக்கப்படுகிறார்.
தனது படைப்பு இத்தனை ஆண்டுகாலம் நிலைத்து நிற்கும் என திருக்குறளை இயற்றியபோது
வள்ளுவரேகூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
அப்படியே நினைத்திருந்தாலும்கூட, 2000 ஆண்டுகளுக்குப் பின்னால் இதுபோன்ற
விழாக்களில் 3 முதல் 5 வயது குழந்தைகள் தன்னுடைய குறட்பாக்களைச் சொல்வார்கள் என்று
நிச்சயம் நினைத்திருக்கமாட்டார்.
இந்தக் குழந்தைகளின் வாயிலாக வள்ளுவரை நம்மால் இன்றளவும் நினைவுகூர முடிகிறது.
ஏன், வள்ளுவரே குழந்தைகளின் வாயிலாக சின்ன சின்ன குறட்பாக்களைச் சொல்கிறாரோ என்றும்
எண்ணத் தோன்றுகிறது.
குழந்தைகளின் மழலை மொழியில் குறளைக் கேட்பது எவ்வளவு இனிமையானது என்பது இன்று
எனக்குப் புரிகிறது. இந்த பிஞ்சுக் குழந்தைகளுக்காகத்தான் வள்ளுவர் குறட்பாக்களை
ஈரடிப் பாடல்களாக, எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதியுள்ளோரோ என்று
எண்ணத் தோன்றுகிறது. உலகின் பல முக்கியக் கவிஞர்களுக்குத் தங்களுடைய படைப்பை
எவரேனும் சொல்வதைக் கேட்கும் ஆவல் இருக்கும். படைப்பாளிக்கே உரித்தான தேடல் அது.
எங்கேயாவது யாராவது தங்களது பாடல்களை மேற்கோள் காட்டினால் உணர்ச்சிவசப்படுவார்கள்.
ஆனால், திருவள்ளுவருக்கு அந்த நிலை இருந்தது இல்லை. இன்றளவும் அவரது குறட்பாக்கள்
உலகளவில் பேசப்பட்டு வருகின்றன.
பலரால் தினம்தோறும் குறிப்பிடப்பட்டு மேற்கோள் காட்டப்பட்டு, பாராட்டப்பட்டு
வருகின்றன.
குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியோர்களும் திருக்குறளைப் படிக்க வேண்டும்.
படித்தால் மட்டும் போதாது, திருக்குறளின் அர்த்தங்களை புரிந்துகொண்டு, அதற்கேற்ப
தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு திருக்குறளை அர்த்தத்துடன் கற்றுத் தர
வேண்டும்.
வள்ளுவம் என்பது வாழ்க்கை நெறி. குழந்தைகளை பெற்றோர்களின் வாரிசுகளாகவும்,
அதைவிட முக்கியமாக வள்ளுவத்தின் வாரிசாகவும் வளர்த்தால், நல்ல சமுதாயத்தை உருவாக்க
முடியும் என்றார் ஈரோடு தமிழன்பன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக