வெள்ளி, 13 ஜூலை, 2012

சண்முகத்திற்கு அகவை 95தான்




சண்முகம். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்; தாயின் அன்பு மற்றும் அரவணைப்புடன் திருச்சி முசிறியில் வளர்ந்தவர். ஒவியம் மீதான ஆர்வம் காரணமாக சென்னை ராய் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் படித்தவர். இதன் காரணமாக 1939-ல் ஒவிய ஆசிரியராக குன்னூரில் வேலைக்கு சேர்ந்தார்.
இங்கேதான் புகைப்படக்கலைஞர் சொக்கலிங்கம் என்பவரை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அவரையே குருவாகக்கொண்டு புகைப்படக் கலையை கற்றார். அங்குள்ள ஆபிசர் டிரெய்னிங் காலேஜில் உள்ள ஒரு கர்னலுக்கு இவர் எடுத்த படம் பிடித்துப்போக போட்டோகிராபி தொடர்பான நிறைய புத்தகங்களை தருவித்து கொடுத்தார்.

அன்றைய சூழ்நிலையில் புகைப்படம் எடுப்பது என்றால் காலை அல்லது மாலை வெளிச்சத்தில் அவுட்டோரில் மட்டுமே எடுக்கமுடியும், "பிளாஷ் லைட் 'எல்லாம் அப்போது கிடையாது. இதன் காரணமாக 1948-ல் 1000 டபிள்யோ விளக்குகள் பொருத்தி படம் எடுக்கும் சண்முகா ஸ்டூடியோவை துவக்கினார். மின்சார பல்புகளை உபயோகித்து போட்டோ எடுக்கும் முதல் ஸ்டூடியோ இது என்பதால் "எலக்ட்ரிக் ஸ்டூடியோ' என்றே அழைக்கப்பட்டது.

குன்னூரின் முதல் எலக்ட்ரிக் ஸ்டூடியோவை ஆரம்பித்த சண்முகம் துறுதுறுப்பானவர்; மிகவும் கனமான "வெயிட் லேண்டர்' கேமிராவை தூக்கிக்கொண்டு நிறைய இடங்களில் இவர் படம் எடுத்துள்ளார். இவர் எடுத்த ஊட்டி ரயிலுக்காக கட்டிய பாலங்கள் தொடர்பான படங்கள் இன்றும் லண்டனில் உள்ள புகைப்பட அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

குன்னூரை மூழ்கடிக்கும் வகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தொடர்பாக இவர் எடுத்த படங்கள் இப்போது பார்த்தாலும் அதிர்ச்சியையும்,ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும். அந்தக்கால பிரிட்டிஷ் ராயல் போட்டோகிராபி பத்திரிகைகளில் இவர் எடுத்த படங்கள் பல வெளிவந்துள்ளன. குன்னூரின் அழகை வெளிப்படுத்தும் வகையில் இவர் எடுத்த படங்கள் இப்போதும் பல இடங்களில் அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

போட்டோ எடுப்பதற்காக இவரே உருவாக்கிய " ஸ்டேண்டு' உள்ளிட்ட பல சாதனங்கள் நேற்று செய்தது போல பள, பளவென்று இருக்கிறது. ஒவ்வொரு பொருளையும் அந்த அளவிற்கு பாதுகாத்து,பராமரித்து வருகிறார். இவரது மகன், மற்றும் பேரன்கள் இவரது ஸ்டூடியோவை நிர்வகித்து வந்தாலும் இன்றைக்கும் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கப்போவது வரை போட்டோகிராபி தொடர்பான விஷயங்களில் இவர் காட்டும் ஆர்வமே தனி. இன்னமும் கண்ணாடி போடவில்லை; காதுகேட்கும் சக்தி குறைவு என்றாலும் அதற்கான கருவி மாட்டிக்கொள்ளவில்லை.

வயதானவராயிற்றே என்று யாரும் இவர் நடக்கும்போது கையை பிடித்துவிடக்கூடாது, உடனே உதறிவிடுவார். என் எல்லா காரியத்தையும் நானே செய்துக்குவேன், ஏன்னா எனக்கு வயது 95 தான் என்று காரணமும் சொல்வார்.

- எல்.முருகராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக