சிறைக் கைதிகளுக்கு பாடம் நடத்தும் ராஜேந்திரன்:என் சொந்த ஊர் அரியலூர்
மாவட்டம் நின்னியூர் கிராமம். குடும்பத்தில் மூத்தவன் நான். எனக்குப் பின்,
ஐந்து தம்பிகள், ஒரு தங்கை. அந்தக் காலத்தில் என் அப்பா, சாராயம்
காய்ச்சுவார். அதை விற்று கிடைக்கும் பணத்தில் தான், நான் படித்தேன். நான்
பள்ளியில் படிக்கும் போது, கிருபானந்த வாரியார் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு
கிடைத்தது. அது தான் என்னை சாராய வியாபாரத்தில் இருந்து, சமூகத்தின்
பக்கம் திருப்பியது.வருமானத்திற்காக, விவசாயத்தில் இறங்கினேன். என்
தம்பிகள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்தேன். எங்கத் தலைமுறை, நல்ல
விஷயங்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. விவசாயத்தில் நஷ்டம் வரத்
துவங்கியதும், சென்னைக்கு பஸ் ஏறிவிட்டேன். இங்கு வந்து, 20
ஆண்டுகளாகிவிட்டது.சில ஆண்டுகளுக்கு முன், தாம்பரத்தில் உள்ள மகளிர் சுய
உதவிக் குழு நிகழ்ச்சியில், தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத் தலைவராக
உள்ள, நடராஜின் அறிமுகம் கிடைத்தது. அப்போது நான் அறிவொளி இயக்கத்தில்
இருந்தேன். என் அனுபவங்களை அவரிடம் கூறும் போது, சிறைக் கைதிகளுக்குப்
பாடம் எடுக்கக் கூறினார். கடந்த, 2007 முதல் சிறைக் கைதிகளுக்குப் பாடம்
நடத்திக் கொண்டிருக்கிறேன். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் யாராவது ஒருவர்
கைதியாக உள்ளே வந்தால், வெளியே போகும் போது, கையெழுத்து போடும் அளவிற்கு
சொல்லிக் கொடுத்துவிடுவேன். சிறைக்கு உள்ளே பெரிய படிப்பு படித்தவர்கள்
உள்ளனர். அந்தக் கைதிகளையே ஆசிரியர்களாக்கி, மற்றவர்களுக்குப் பாடம்
சொல்லித் தரச் செய்வேன். பள்ளிக் கல்வித் துறையும், சிறைக் கைதிகள் தேர்வு
எழுத ஒத்துழைப்பு தருகின்றன. சிறையில் உள்ள ஒவ்வொரு கைதிக்குள்ளும் கவிஞன்,
ஓவியன், எழுத்தாளன் இருக்கிறான். கைதிகளின் தேர்வுக் கட்டணத்தை மட்டும்
தான் சிறைத் துறை செலுத்தும். நோட்டு, புத்தகம், பேனா என, அனைத்தையும்,
நன்கொடை மூலம், வசூல் செய்து வாங்கித் தருவேன்; மற்றபடி நான் ஒரு கருவி
தான்.
"பசித்தால் தான் சாப்பிடணும்!'
சித்த மருத்துவர் செல்வ சண்முகம்: நம் உடலில் தினசரி ஏற்படக் கூடிய,
வளர்சிதை மாற்றத்தை சரி செய்ய, உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. அதைக்
கொடுப்பது தான் உணவு. பொதுவாக, ஒவ்வொரு உணவுப் பொருளும், சிறந்த மருத்துவப்
பண்புகளை கொண்டிருக்கும். சில பொருட்களை, ஒன்றுடன் ஒன்று கலந்து
சாப்பிடும் போது, அதன் பலன் இரட்டிப்பாகும்.உதாரணமாக, தேன் மருத்துவக்
குணம் கொண்ட உணவு. தேனை தனியாக, நாள் ஒன்றுக்கு, ஆறு டீஸ்பூன் வரை கூட
சாப்பிடலாம். இதே போல் பசு நெய்யும் உடலுக்கு நல்லது. ஆனால், இரண்டையும்
ஒன்றாய் கலந்து சாப்பிட்டால், தொண்டை அழற்சி, வயிற்றுப் பிரச்னை ஏற்படும்.
கைக்குத்தல் அரிசி, அவலை, தயிருடன் கலந்து சாப்பிட்டால், வயிறு மந்தமாகும்;
மூட்டு வலி வரும்.இரண்டு பொருளை சேர்த்துச் சாப்பிடுவதால், உடலுக்கு
கூடுதல் நன்மை ஏற்படுவதும் உண்டு. நாட்டுச் சர்க்கரையும், புழுங்கல்
அரிசியும் சேர்த்து செய்யும், சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போது,
வாந்தியையும், மனத் தடுமாற்றத்தையும் போக்கும். எள் சேர்த்து
தயாரிக்கப்பட்ட புளி சாதம் உண்டால், நாவில் உள்ள சுவை மொட்டுக்கள், நன்றாக
இயங்க ஆரம்பிக்கும்.சூடான சோறுடன் நல்லெண்ணெய் கலந்து உண்டால், இளமை
பொலிவாக இருக்கலாம். குழைந்த சாதத்துடன், பசு மோர் அல்லது தயிரை, கல்
உப்புடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமானத் தன்மை அதிகரிக்கும்.
மாமிசங்களுடன், இஞ்சி, பூண்டு, பெருங்காயம், கல் உப்பு, ஏலக்காய், கிராம்பு
சேர்த்து பக்குவப்படுத்தி சமைக்கும் போது, மாமிசத்தின் நஞ்சு நீங்கி, அந்த
உணவு, உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். நாள்பட்ட நோய்களுக்கு பின்
ஏற்படும், உடல் தளர்ச்சியை நீக்கும்.சமைத்த உணவுடன், பழங்களைச் சேர்த்து
சாப்பிடுவது நல்லதல்ல. பழம் சாப்பிட்டு, ஒன்றரை மணி நேரம் கழித்து தான்,
உணவு உண்ண வேண்டும். உணவிற்கு முக்கால் மணி நேரம் முன், நெல்லிக்காய்
சாப்பிடுவது நல்லது.எதை, எதனுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு
முக்கியமோ, அதை விட முக்கியம், பசித்து புசிப்பது! எந்த ஒரு
காரணத்திற்காகவும், பசிக்காமல், சாப்பிடவே கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக