செவ்வாய், 10 ஜூலை, 2012

மருத்துவ வசதியில் அலட்சியம் பறிபோனது கால்பந்து வீரர் உயிர்

மருத்துவ வசதியில் அலட்சியம் பறிபோனது கால்பந்து வீரர் உயிர்
  தினமலர் 10-07-2012 IST
 
கோல்கட்டா:கால்பந்து மைதானத்தில் உரிய மருத்துவ வசதிகள் இல்லாததால் மேற்குவங்க வீரர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். இவரை மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்காமல் அலட்சியம் காட்டியதால் உயிரை காப்பாற்ற முடியவில்லை. 
மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரியில் <உள்ள நேதாஜி வித்யாபத் மைதானத்தில் ஒளிவெள்ளத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் தோரல்பாரா -பானு நகர் அணிகள் மோதின. தோரல்பாரா அணி சார்பில் விளையாடிய மகேஷ் தபா, 27, கோல் அடிக்க பாய்ந்தார். அப்போது எதிரணி கோல்கீப்பரின் முழங்கால், தபாவின் நெஞ்சில் பலமாக தாக்கியது. இதையடுத்து சுருண்டு கீழே விழுந்தார். உடனே "பைக்' மூலம் தபாவை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைப்பிரிவில்(ஐ.சி.யு.,) படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக இவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். உடனடியாக மரினா என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் ஐ.சி.யு.,வில் இடமில்லை. மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தபா மரணம் அடைந்தார். பின் இவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர். 
விதிமுறை என்ன:
விபத்து மற்றும் இருதயம் தொடர்பான பிரச்னையின் போது பாதிக்கப்பட்டவரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். "பொன்னான நேரத்தை' வீணடித்து அலைக்கழிக்கப்பட்டதால், தபாவின் உயிர் அநியாயமாக பறிபோகியுள்ளது. தவிர, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இதன்படி மைதானத்தில் டாக்டர் அடங்கிய ஆம்புலன்ஸ் வசதிகள் எப்போதும் இருக்க வேண்டும். ஆனால், நேதாஜி மைதானத்தில் இது போன்ற வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. 
இது குறித்து மாவட்ட விளையாட்டு சங்கத்தின் இணை செயலர் போலா மண்டல் கூறுகையில்"" வீரரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. ஆம்புலன்சில் தான் அழைத்துக் சென்றோம். முதலில் சென்ற இரண்டு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி இல்லை. காத்திருக்க சொன்னார்கள். ஆனால், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நேர்ந்தது,'' என்றார்.
தபாவுக்கு தவறான பழக்கங்கள் எதுவும் இல்லையென்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். இதனால், மைதானத்தில் நடந்த சம்பவம் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாதது தான் மரணத்துக்கு காரணமாக இருக்க வேண்டும். இவரது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின், மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். 
---
தொடரும் சோகம்
இந்தியாவில், கால்பந்து மைதான நிர்வாகிகளின் அலட்சியம் காரணமாக, இளம் வீரர்களின் மரணம் தொடர்கிறது. 
* கடந்த 2004ல் மோகன் பகான் அணிக்கு எதிரான பெடரேஷன் கோப்பை போட்டியின் போது, டெம்போ வீரர் கிறிஸ்டியானோ ஜூனியர், மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
* கடந்த ஆண்டு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் அணியின் கோல் கீப்பர் அருண் குமார், 24, மாரடைப்பால் களத்தில் மரணம் அடைந்தார்.
* கடந்த மார்ச் மாதம், சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியின் போது, பெங்களூரு மார்ஷ் ஸ்டிரைக்கர் வீரர் வெங்கடேஷ், 25, திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். இவரை பரிசோதிக்க டாக்டர்கள் யாரும் மைதானத்தில் இல்லை. ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. கடைசியில் வெங்கடேஷை, ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றி கொண்டு செல்ல, வழியிலேயே மரணம் அடைந்தார். 
* இந்த சோகம் மறையும் முன், மேற்கு வங்கத்தை சேர்ந்த கால்பந்து வீரர் மகேஷ் தபா, 27, மரணம் அடைந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக