புதன், 11 ஜூலை, 2012

கேரா டோரா என்றொரு பெண் புயல்- எல்.முருகராசு

கேரா டோரா என்றொரு பெண் புயல்- எல்.முருகராசு
தினமலர்


அரச குடும்பத்தினர்கள் மட்டுமே அடக்கம் செய்வதற்காக ஓதுக்கப்பட்ட பாரீசின் மயானத்திற்குள், முதல் முறையாக 1937ம் ஆண்டு சாதாரண குடும்பத்தை சேர்ந்த 27 வயது பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்ய இடம் ஒதுக்கியதற்கான காரணம், இறந்த பெண்ணிற்கு இருந்த புகழும், அவர் மேற்கொண்டிருந்த தியாக வாழ்க்கையும்தான்.

அவரது இறுதி யாத்திரையின் போது வந்த கூட்டம், அதுவரை அங்கு அடக்கம் செய்யப்பட்ட யாருக்கும் வராத கூட்டம். இவர் இறந்த பிறகு, இவரைப் பற்றி 184 பக்கத்திற்கு, இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த புத்தகம் பொதுமக்களிடம் பரபரப்பாக படிக்கப்பட்டது.

யார் அவர்? கொள்கையும், லட்சியமும் கொண்ட உலகின் முதல் பெண் போர்க்கள புகைப்பட கலைஞர் கேரா டேராதான் அவர். 1910-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தவர், ஹிட்லரின் நாஜி படைகள் மக்களுக்கு எதிராக யுத்தம் என்ற பெயரில் நடத்திய கொடுமைகளை எதிர்த்து பள்ளியில் படிக்கும் போதே போராட்டத்தில் இறங்கியவர்.

மாணவியாயிற்றே என்று கூட பாராமல் இவரை பிடித்து சிறையில் அடைத்தது நாஜி படை. ஆஆனாலும் சிறைக்குள்ளேயே இவரது போராட்டமும், நாஜிகளுக்கு எதிரான முழக்கங்களும் தொடர்ந்தன. இதனால் பல கொடுமைகளை சந்தித்தார். ஆனாலும் அசராமல் தனது கொள்கையில் தீர்க்கமாக இருந்தார்.

இவர் மீதான கோபம் காரணமாக நாஜிக்கள் இவரது குடும்பத்தையே நாடு கடத்தியிருந்தனர். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு பிரிந்த குடும்பத்தை கடைசிவரை கண்டுபிடிக்கமுடியாமலே இறந்து போன கொடுமைக்கு சொந்தக்காரர்தான் டேரா.

நாஜிக்களின் யுத்த கொடுமைகளை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல பேச்சை விட புகைப்படங்களுக்கு சக்தி அதிகம் என்பதை உணர்ந்து போர்கள புகைப்படக் கலைஞராவது என்று முடிவு செய்தார். இதற்காக அப்போது போர்க்கள புகைப்படக் கலையில் புகழ்பெற்றிருந்த ராபர்ட் கபேயிடம் உதவியாளராக சேர்ந்தார்.

யுத்த களத்தில் ரத்த சகதியில் குண்டு மழைக்கு நடுவே புகைப்படத் தொழிலை நன்கு கற்று தேர்ந்தார். ராணுவ வீரர்கள் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு எதிரியை சுட்டுக்கொண்டு இருக்கும் அதே வேளையில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்து கொண்டு, துளியும் பயமின்றி நடக்கும் சம்பவங்களை தனது கேமிராவால் பதிவு செய்து கொண்டு இருப்பார்.

கேரா டேராவின் தொழில் நேர்த்தியிலும், அழகிலும் மனதை பறிகொடுத்த ராபர்ட் கபே, தனது காதலை அவரிடம் ஒரு போர்முனையில் தெரிவித்தார், விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். காலம் கனியட்டும், எனது லட்சியம் நிறைவேறட்டும் அதுவரை நம்முடைய அன்பு என்பது நட்பாகவும், காதலாகவும் மட்டுமே இருக்கட்டும் என்று கூறி திருமணத்தை தள்ளிப்போட்டார்.

இவருக்குள் இருந்த நாஜிகளுக்கு எதிரான வேகம், கொடுமைகளை சொல்லவேண்டும் என்ற தாகம் இவரது படங்களுக்கு கூடுதலாக உயிர் கொடுக்க உலகம் முழுவதும் இவரது படங்களை பிரபலமாயின. போர்க்கள புகைப்படக்கலைஞர் என்றாலும் இவர் போரை வெறுத்தவராவார். யுத்தத்தால் பெண்களும்,குழந்தைகளும் பட்ட சிரமத்தை சொல்லிய இவரது படங்கள் உலகை உருக்கியது என்றால், ஒரே இரவில் பணக்காரர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் போல அனைத்தையும் விட்டுவிட்டு உயிர்பிழைக்க அண்டை நாடுகளுக்கு அகதியாக செல்லும் படங்கள் உலகை உலுக்கியெடுத்தது எனலாம்.

மாற்று உடையோ, போதிய உணவோ இல்லாமல் நீண்ட நாட்கள் தங்கியிருந்து இவர் எடுத்த ஸ்பானிஷ் போர் படங்களை "லைப்', "லண்டன் நியூஸ்' ஆகிய பத்திரிகைகள் பிரமாதமாக வெளியிட, டேராவிற்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் உருவானார்கள். அவரை பார்க்கவும், போர் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் நிறைய பேர் காத்திருந்தனர்

யாரும் எதிர்பாரத நிலையில் ஸ்பெயின் போர்க்களத்தில் ஒரு ராணுவ டேங்கின் கீழ் சிக்கி உடல் சிதைந்து இறந்துபோனதை அடுத்து அவர்களால் பார்க்க முடிந்தது டேராவின் உடலைத்தான். பகிர்ந்து கொள்ள முடிந்தது அவரது இறப்பின் சோகத்தைத்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக