செவ்வாய், 10 ஜூலை, 2012

கண்டதையும் கடலில் கொட்டாதீர்கள்!

"கண்டதையும் கடலில் கொட்டாதீங்க!'



கடலுக்கு அடியில், "ஸ்கூபா டைவிங்' மூலம், கடல் வளத்தை ஆராய்ச்சி செய்யும் அனிதா ஜார்ஜ்: கடலுக்கடியில், பவளப் பாறைகள், செடிகள், பாசிகள் அடங்கிய தோட்டங்கள் உள்ளன. இவற்றை நேரடியாகப் பார்க்க, "ஸ்கூபா டைவிங்' உதவுகிறது.முகத்தில் மாஸ்க், முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர், கால்களில் துடுப்பு என, அதற்குரிய உபகரணங்களை அணிந்து, கடலினுள் சென்று, பவளப்பாறைக் கூட்டங்களில், மீன்கள், வித்தியாசமான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதை நேரில் பார்ப்பது, ஒரு சுகமான அனுபவம். பொழுதுபோக்குக்காக, கடலுக்குள், "ஸ்கூபா டைவிங்' அடிக்காமல், ஆராய்ச்சியிலும் ஈடுபடுகிறேன். கடலில், 40 மீட்டர் ஆழம் வரை செல்கிறேன். இந்தியாவின் தென்மேற்கு, தென் கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்து, "கடல் பஞ்சுகள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன்.கன்னியாகுமரி மாவட்டத்தில், முட்டம், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, இலங்கை, அமெரிக்கா, மஸ்கட் உட்பட பல நாடுகளில், 1997லிருந்தே கடல் பஞ்சுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி, ஆராய்ச்சி செய்கிறேன். கடலில், பவளப் பாறைகளில் தான், மீன்கள் அதிகம் வாழ்கின்றன. துறைமுகத்திலிருந்து கொட்டப்படும் கழிவுகள், மீனவர்கள் வீசி எறியும் வலைகள், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவற்றால், பவளப்பாறைகள் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகின்றன.ஆறுகளில் வீசப்படும், வீணான பிளாஸ்டிக் உட்பட பல பொருட்கள், கடலில் சேர்கின்றன. அவற்றை மீன்கள் என நினைத்து, கடல்வாழ் உயிரினங்கள் சாப்பிடுவதால், அவற்றின் சுவாச உறுப்பு பாதிக்கப்பட்டு இறக்கின்றன.சுனாமிக்கு முன்னும், பின்னும், பவளப்பாறைகளை ஆராய்ச்சி செய்த போது, அவை பெருமளவு சேதமடைந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால், மீன்வளம் வெகுவாகக் குறைந்துள்ளது.கடலைப் பற்றி கவலைப்படாமல், குப்பைத் தொட்டியாக நினைத்து, கண்டதையும் கொட்டினால், மீன்வளம் மேலும் குறையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக