திங்கள், 9 ஜூலை, 2012

நாள்தோறும் வியக்க வைக்கிறது திருக்குறள்: "தினமணி' ஆசிரியர்

நாள்தோறும்  வியக்க வைக்கிறது திருக்குறள்: "தினமணி' ஆசிரியர்

First Published : 09 Jul 2012 02:28:36 AM IST


திருக்குறள் வாழ்வியல் மன்றம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் மன்றச் செயலாளர் மா. வள்ளிமுத்துவுக்கு (இடமிருந்து 4-வது) பொன்னாடை ப
சென்னை, ஜூலை 8: ""ஒவ்வொரு நாளும் தலையங்கத்துக்கு ஏற்ற குறளைத் தேர்ந்தெடுக்கும்போது பிரமிப்பு மேலிடுகிறது'' என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.  சென்னை போரூர் புனித யோவான் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் வாழ்வியல் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் திறனாய்வுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டும் விழாவில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியது:  உலகிலேயே மலைப்பான விஷயம் என்னவென்று என்னை யாரேனும் கேட்டால், நான் சற்றும் தயங்காமல் திருக்குறள் என்று பெருமிதத்தோடு சொல்வேன். என்னை தினந்தோறும் பிரமிக்க வைக்கும் விஷயம் திருக்குறள்தான்.  "தினமணி'யில் தினமும் தலையங்கம் எழுதி முடித்தவுடன், அந்தத் தலையங்கத்துக்கு ஏற்ற குறளைத் தேர்ந்தெடுப்போம். சர்வதேச அரசியல், பொருளாதாரம், அன்றாட நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், விளையாட்டு என்று எதைப் பற்றிய தலையங்கமாக இருந்தாலும் சரி, அதற்கு ஏற்ற குறள் ஒன்று தினந்தோறும் கிடைக்கிறது என்றால் வள்ளுவப் பேராசானின் ஆற்றல் எத்தகையது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  பாரதி, யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் என்று குறிப்பிடுவார். வள்ளுவரை மட்டும் "ர்' விகுதியிட்டு மரியாதையாக அழைப்பார். வள்ளுவப் பெருந்தகையின் தனிச்சிறப்புக்கு அது ஒன்றே போதும் எடுத்துக்காட்டு.  பல மெட்ரிக் பள்ளிகள் தங்கள் கல்விச் சாலையில் படிக்கும் குழந்தைகளை வீட்டில்கூட ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. ஆங்கில வழிக் கல்வியை முற்றிலுமாக நான் எதிர்க்கவில்லை. நம்முடைய குழந்தைகள் ஆங்கிலம் படித்துத் தரணியை ஆள வேண்டும், எங்கெல்லாம் அவர்கள் குடியேறுகிறார்களோ அங்கெல்லாம் தமிழையும், தமிழர் தம் நாகரிகத்தையும் கொண்டு செல்ல வேண்டும் என்று விழைபவன் நான்.  குழந்தைகள் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படித்தாலும் வீட்டில் தமிழில் மட்டுமே பேசச் சொல்லுங்கள். தினமும் ஒரு குறள் படிக்கச் சொல்லுங்கள். தமிழ் மொழி உலகமெலாம் பரவும் வகை செய்ய வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி, குழந்தைகளுக்குக் குறளைக் கற்றுக் கொடுப்பதுதான்.  வள்ளுவனும், ஒளவைப் பிராட்டியும் தமிழுக்கும் தமிழனுக்கும் கிடைத்த வரம். நாளைய சந்ததியினருக்குக் குறளையும் ஆத்திசூடியையும் விடச் சிறந்த வழிகாட்டி எதுவும் கிடையாது.  இனத்தின் அடையாளம், ஜாதியோ, மதமோ, நிறமோ அல்ல. மொழிதான் இனத்தின் அடையாளம். அதனால்தான், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வீட்டில் தினம் ஒரு திருக்குறளைக் கற்றுக்கொடுத்தால் தமிழ் வாழும், தமிழினமும் வாழும்.  ஆட்டோ ஓட்டுநரான வள்ளிமுத்துவும் அவரது நண்பர்களும் திருக்குறள் வாழ்வியல் மன்றம் என்கிற அமைப்பை ஏற்படுத்திப் பள்ளிக் குழந்தைகளுக்குத் திருக்குறள் போட்டிகளை நடத்தி, ஆண்டுதோறும் பரிசளித்து உற்காசப்படுத்துகிறார்கள். நாங்கள் எழுதியும், பேசியும் செய்துவிட முடியாத செயற்கரிய சேவையைச் செய்து காட்டி வருகிறார் வள்ளிமுத்து.  ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இப்படி ஒரு சேவையில் ஈடுபட்டிருப்பதாக நான் தொலைபேசியில் தெரிவித்தவுடன், நர்மதா பதிப்பக அதிபர் ராமலிங்கம், இந்தக் குழந்தைகளுக்குப் பரிசளிப்பதற்காக அவர்கள் வெளிட்ட "நீதிநெறிக் கருவூலம்' புத்தகத்தைப் பாதி இலவசமாகவும், மீதியைப் பாதி விலையிலும் கொடுத்து உதவ முன் வந்தார். அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்'' என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.  திருக்குறள் வாழ்வியல் மன்றச் செயலர் மா. வள்ளிமுத்துவை மன்றத்தின் தலைவர் இலக்குமி சம்பந்தன், பொன்னாடை அணிவித்து கெüரவித்தார். நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவை தலைவர் தெ.பொ. இளங்கோவன், திருக்குறள் வாழ்வியல் மன்றத் துணைத் தலைவர் தனுக்கோடி, மன்றத்தின் இணைச் செயலர் ஏ.காசி, சென்னைப் பல்கலைக்கழகம் சட்டத்துறை பேராசிரியர் ஏ.டேவிட் அம்ரோஸ், புனித யோவான் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜே.பிரவின் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் சிறப்பித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக