ஈழத் தமிழர்களை கொன்றழித்த பிரச்னையில் இந்தியா இனியும் மெளனம் காக்கக் கூடாது: அதிரடி அன்பழகன்
First Published : 29 Jun 2011 02:04:59 PM IST
புதுக்கோட்டை, ஜூன் 28: இலங்கை அதிபர் இராசபக்சே போர்க் குற்றவாளி என உலக நாடுகள் அறிவித்த நிலையில், இனியும் இந்தியா மெüனம் காக்கக் கூடாது என்றார் திராவிடர் கழக மாநிலப் பேச்சாளர் அதிரடி அன்பழகன். இலங்கை அதிபர் ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவித்து, கைது செய்து தண்டிக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: இலங்கையில் நடத்தப்பட்ட இனப் படுகொலை விவகாரத்தில் இந்தியா இப்போதும் மழுப்பலாகவே பதிலளித்து வருகிறது. குறிப்பாக, இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்று இந்தியா சொல்லி வந்தது. அங்கு நடந்த கொடூரங்கள் மறைக்கப்பட்டன. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட ஏராளமான நாடுகள் இலங்கை பிரச்னையில் நடவடிக்கை கோரி ஐநா சபையில் வலியுறுத்தி வருகின்றன. இலங்கைப் பிரச்னையில் சுமூகத் தீர்வு காண்பதற்காக நார்வே நாடு ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவிட்டுருக்கிறது. இங்கிலாந்து எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தியா மட்டுமே மெüனமாக இருக்கிறது. அதேநேரத்தில், இந்த பிரச்னையில் தமிழக முதல்வர் கண்டனமும், சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றியிருப்பது பாராட்டுக்குரியது. எனவே, அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்றழித்த பிரச்னையில் இனியும் இந்தியா மெüனமாக இருக்கக் கூடாது என்றார் அன்பழகன். கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்ட மாணவரணிச் செயலர் த. முல்லைவேந்தன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு. அறிவொளி, மாவட்டச் செயலர் ப. வீரப்பன், பொதுக் குழு உறுப்பினர்கள் இரா.புட்பநாதன், இரா. சரசுவதி, சு. தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, நிர்வாகி சாமி இளங்கோ வரவேற்றார். நிறைவில், நிர்வாகி ரெ.மு. தருமராசு நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக