வியாழன், 30 ஜூன், 2011

காளகசுத்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர் இராகு- கேது பரிகார பூசை செய்து சிறப்பு வழிபாடு


நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர், சாமி தரிசனம் செய்தனர். அத்துடன் காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜை செய்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

வெங்கடேச பெருமாளை தரிசிக்க, திருமலைக்கு வந்திருந்த கருணாநிதியின் மகள் செல்வி, பேரன் கலாநிதிமாறனின் மனைவி காவேரி ஆகிய இருவரும், நேற்று முன்தினம் (செவ்வாயன்று) அதிகாலை வி.ஐ.பி., தரிசன நேரத்தில், கோவிலுக்குச் சென்று சுப்ரபாத சேவையில் பங்குகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். பின்னர், செல்வி, காவேரி மற்றும் அவர்களுடன் வந்திருந்த சிலரும், காளஹஸ்தி கோவிலுக்குச் சென்றனர்.சர்ப்ப தோஷ நிவாரணம், ராகு-கேது பரிகார பூஜைக்கு பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில், வாயு தலமான காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் நடத்தப்படும், ராகு-கேது பரிகார பூஜையில் செல்வி, காவேரி ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

கோவில் வளாகத்தில் ம்ருத்யஞ்ஜய லிங்கம் அருகே, இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (செவ்வாயன்று) காலை 11 மணிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் பங்குகொண்டு, தங்களது பெயர்களில் சிறப்பு பரிகார பூஜை செய்தனர். இந்த பூஜைக்குப் பின், கோவிலுக்குள் சென்ற இவர்கள் வாயுலிங்கேஸ்வர சுவாமி, ஞானபிரசூணாம்பிகை தயார் சன்னிதியில் சிறப்பு பூஜை செய்து, சாமி தரிசனம் செய்தனர். பின், ம்ருத்யஞ்ஜய லிங்கம் அருகே கோவில் அர்ச்சகர்கள் இவர்களை ஆசிர்வதித்து, கோவில் பிரசாதங்களை வழங்கினர்.மாஜி முதல்வர் கருணாநிதி மகள் செல்வி, காவேரி கலாநிதி மாறன் ஆகிய இருவரும் கோவிலில் சாமி கும்பிடும் நேரத்தில், புகைப்படம் எடுக்க வேண்டாம் என, அவர்களுடன் வந்திருந்த பிரமுகர்கள், பத்திரிகை புகைப்படக்காரர்களை கேட்டுக் கொண்டனர். இதையும் மீறி, சில புகைப்படக்காரர்கள் படமெடுக்க முயன்றதால், அவர்களை விரட்டியடித்தனர்.

சாமி தரிசனத்திற்குப் பின், கோவில் வளாகத்தில் செல்வி, காவேரி, அவர்களுடன் வந்திருந்த சிலரும், சிறிது நேரம் ஓய்வாக உட்கார்ந்திருந்தனர். அப்போது, தெலுங்கு தினசரி புகைப்படக்காரர்கள் படம் எடுத்துச் சென்றனர்."2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி, திகார் சிறையில் உள்ள கருணாநிதி மகள் கனிமொழிக்காக, அவரின்மற்றொரு மகளான செல்வி, காவேரி கலாநிதி மாறன் மற்றும் சிலருடன் சேர்ந்து ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து: