First Published : 29 Jun 2011 01:39:29 AM IST
Last Updated : 29 Jun 2011 05:56:55 AM IST

தஞ்சாவூர், ஜூன் 28: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தனித் தன்மையை மீட்டெடுக்க, அரசியல் கலப்பில்லாத ஒருவரை 10-வது துணைவேந்தராக நியமிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தமிழ் அறிஞர்களிடையே ஏற்பட்டுள்ளது.இந்தியப் பண்பாட்டின், நாகரிகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும், தொன்று தொட்டு இன்றுவரை நமது நாட்டின் கலை, இலக்கியம், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புக்கு உரிமையுடையதாகவும் விளங்குவது தமிழ் மொழி.தமிழ் மொழியின் அடிப்படையில் அமைந்த வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றைச் சார்ந்த துறைகளுக்கு வலுவூட்ட ஒரு பல்கலைக்கழகம் அமைவது இன்றியமையாதது என்று அரசு கருதியது. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 5-வது உலகத் தமிழ் மாநாட்டின் போது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தஞ்சாவூரில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.அதன்படி, தஞ்சையில் 15.9.1981 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கியது. முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் முதல் துணைவேந்தராக 19.9.1981-ல் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டு பணிக்காலத்தை அவர் நிறைவு செய்ததும், மீண்டும் 22.9.1984 முதல் துணைவேந்தராக பணி நீட்டிக்கப்பட்டு, 31.7.1986 வரை அவர் பணிபுரிந்தார்.முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் தலைமையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு அனைத்துலக தமிழ் ஆர்வலர்களை ஒருமுகப்படுத்தியது. அதன்மூலம் ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய ஐம்பெரும் கண்டங்களிலிருந்தும் கல்வியாளர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வந்து, தங்களுடைய ஆய்வுத் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய வாய்ப்புகளைப் பெற்றனர்.தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியாளர்களும், உலக அரங்கில் மாநாடுகள், கலந்தாய்வுகள், தனிப்பெரும் ஆய்வுகளின் அழைப்பின் பேரிலும், நியமன அடிப்படையிலும் கலந்து கொண்டு தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு போன்ற பல்துறைப் பெருமைகளை நிலைநிறுத்தி வந்ததுடன், நூல்களாகவும் வெளியிட்டனர்.இன்றைய சூழலில், 10-வது துணைவேந்தர் பொறுப்பேற்கவுள்ள நிலையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த நோக்கத்துக்காக இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் 30 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேறவில்லை என்பதைவிட நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.ஆசியப் பிராந்தியம் மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க, ஐக்கிய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் பல பிரதிநிதிகள் ஆய்வாளர்களாக வந்து போகும் சுற்றுலா மையமாக தமிழ்ப் பல்கலைக்கழகம் கடந்த சில காலமாக இருந்து வருகிறது எனக் கூறப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்நிலை மாறி, வரும் காலத்தில் மொழி குறித்த சிந்தனை, தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு, சமயம் போன்றவற்றை நாம் ஒரு சேர மீட்டாக வேண்டும்.மனிதவள மேம்பாட்டுத் துறை, இதனை புறந்தள்ளாமல் நிதி ஆதாரங்களைப் பெருக்கித்தர வேண்டும். பழைய குறைபாடுகளைப் போக்கி, புத்துயிர் ஊட்டும் வகையில் உள்கட்டமைப்புகளையும், திறமையான துறைசார் அறிஞர்களையும் நியமிக்க வேண்டும்.கடந்த கால நியமனங்கள் யாவற்றிலும் திறமைக்கு மதிப்பளிக்காமல், பரிந்துரைகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிலையும் மாற வேண்டும். அரசியல் குறுக்கீடு இல்லாத, முழுமையான தகுதியுடையவரை, பணியை ஈடுபாட்டுடன் செய்பவரை இனம் கண்டு 10-வது புதிய துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களால் எழுப்பப்படுகிறது.""கலைப் புலம், சுவடிப் புலம், வளர்தமிழ்ப் புலம், மொழிப் புலம், அறிவியல் புலம் உள்ளிட்ட 5 புலங்களில் உள்ள 25 துறைகளில் இதுவரை என்னென்ன ஆய்வுகள் நடைபெற்றன, தற்போது என்ன ஆய்வுகள் நடைபெறுகின்றன என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, பல்கலைக்கழகம் பொலிவு பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இழந்து போன தனித்தன்மையை மீண்டும் பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஆதாரத்துடன் புதுமைகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழுக்காக பாடுபட்ட தமிழ்ச் சான்றோர்களின் எண்ணம் நிறைவேறும்'' என்கிறார் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாகப் பணிபுரியும் மூத்த தமிழறிஞர் ஒருவர்.
- 2-வது துணைவேந்தராக முனைவர் ச. அகத்தியலிங்கம் 1.12.1986 முதல் 30.11.1989 வரையும்,
- 3-வது துணைவேந்தராக சி. பாலசுப்பிரமணியன் 4.12.1989 முதல் 3.12. 1992 வரையும்,
- 4-வது துணைவேந்தராக ஒளவை து. நடராஜன் 16.12.1992 முதல் 15.12.1995 வரையும்,
- 5-வது துணைவேந்தராக கே. கருணாகரன் 11.1.1996 முதல் 3.9. 1998 வரையும் பணியாற்றினார்.
- 6-வது துணைவேந்தராக கதிர் மகாதேவன் 19.2.1999 முதல் 14.9.2001 வரையும்,
- 7-வது துணைவேந்தராக இ. சுந்தரமூர்த்தி 19.12.2001 முதல் 18.12.2004 வரையும்,
- 8-வது துணைவேந்தராக சி. சுப்பிரமணியம் 6.6.2005 முதல் 5.6.2008 வரையும்,
- 9-வது துணைவேந்தராக ம. ராசேந்திரன் 19.6.2008 முதல் 18.6.2011 வரையும் பணியாற்றியுள்ளனர்.
கருத்துகள்


By selvakumar
6/29/2011 10:40:00 AM
6/29/2011 10:40:00 AM


By kathiresan
6/29/2011 6:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *6/29/2011 6:43:00 AM