மத்தியில் காங்.ஆட்சியில் மக்களுக்கு மனநிறைவு இருப்பதாக எண்ணமோ? தமிழர்களைப்படுகொலை புரியும் தமிழ்ப்பகையான காங்.உடன் கூட்டு வைத்ததால்தான் தி.மு.க. மதிப்பு வீழ்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சிகளும் காங்.ஐக் கை கழுவினால் அனைவர்க்கும் நல்லது என்ற எண்ணம் பரலவாக மக்கள் மத்தியில் உள்ளதையும் இராகுலிடம் எடுத்துச் சொலலுங்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 23 Dec 2010 01:41:16 AM IST
சென்னை, டிச. 22: தமிழகத்தில் இப்போதுள்ள ஆட்சியில் தங்களுக்குத் திருப்தி இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். இரண்டு நாள் பயணமாக அவர் புதன்கிழமை தமிழகம் வந்துள்ளார். சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய இடங்களில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். சென்னையில் வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், தனது பேச்சின் நிறைவில், ""இப்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் பிடிக்காதவர்கள் யார் யார்?'' என்று ராகுல் கேள்வி எழுப்பினார். அரங்கில் இருந்தவர்களில் ஏறத்தாழ அனைவருமே கைகளை உயர்த்தி, தங்களுக்கு இந்த அரசியல் பிடிக்கவில்லை என்று தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவைக்குப் பொதுத் தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில், ராகுல் தமிழகத்தில் பயணம் மேற்கொண்டிருப்பதால், கூட்டணி பற்றி அவர் ஏதாவது கருத்து கூறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டணி பற்றி அவர் நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், இப்போதைய அரசியல் பிடிக்காதவர்கள் யார் என்று எழுப்பிய கேள்வியின் மூலம், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்தை அறிந்து கொண்டுள்ளார் என கட்சியினர் தெரிவிக்கின்றனர். சென்னையில் நிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்தார். கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் நெருக்கமாக இருந்து கடுமையாக உழைத்தால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். இளைஞர் காங்கிரஸில் இருந்தேகூட ஒருவர் முதல்வர் பதவிக்கு வர முடியும் என்று கூறினார். ""வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும்?'' என்று ஒரு நிர்வாகி கேட்டார். ""இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எத்தனை சதவீத இடங்கள் வழங்கப்படும் என்பதை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இடங்களைப் பெற்றுத்தர முயற்சி மேற்கொள்வேன். கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 30 சதவீத இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்றார் ராகுல். ""கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்குமாறு நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இப்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் நாங்கள் மக்களைச் சந்திக்கச் சென்றால் அது பற்றி கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். அதனை எப்படி எதிர்கொள்வது?'' என இன்னொரு நிர்வாகி கேட்டார். ""விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. விலைவாசியைக் குறைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனை பிரதமர் பார்த்துக் கொள்வார். எனவே, விலைவாசி உயர்வு குறித்து நாம் கவலைப்பட வேண்டாம்'' என்றார் ராகுல் காந்தி. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் அறிவுஜீவிகளைச் சந்தித்துப் பேசிய ராகுல், இலங்கையில் தமிழர்களுக்கான நிவாரணப் பணிகளில் அந் நாட்டு அரசு மேற்கொண்டுள்ள பணிகள் திருப்திகரமாக இல்லை என்று கூறினார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளில் உள்ள தலித் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. அதில் பேசிய ராகுல் காந்தி, கக்கன், இளையபெருமாள் போன்ற தலைவர்கள் மீண்டும் உருவாகாமல் போய்விட்டார்கள் என வருத்தம் தெவித்தார். கல்விக்கடன் சரியாகக் கிடைப்பதில்லை என்று நிர்வாகிகள் கூறியபோது, ""கக்கன் போன்ற ஒருவர் அமைச்சராக இருந்திருந்தால், இந்தக் கடன்கள் கிடைத்திருக்குமா?'' என கேட்டார். எல்லோரும் ""ஆமாம்'' என பதில் அளித்தனர். ""அப்படியானால் நீங்கள் அவரைப் போன்ற தலைவர்களாக உருவாக முயற்சிக்க வேண்டும்'' என்றார் ராகுல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக