செவ்வாய், 21 டிசம்பர், 2010

பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா இலக்குவனார் அறக்கட்டளை நிறுவப்படும் 100 ஆன்றோர்களுக்கு இலக்குவனார் விருது வழங்கித் தி.க.தலைவர் வீரமணி அறிவிப்பு

Ilakkuvanar virudhu to laksmikanthan bharathy
சென்னை அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கமும் இலக்கியவீதி அமைப்பும் இணைந்து சென்னை அண்ணாநகர் வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் செந்தமிழ் அரிமா பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்தி 100 ஆன்றோர்களுக்கு இலக்குவனார் விருதுகள் வழங்கினார்.
தொடக்கத்தில் இலக்கிய வீதி இனியவன் வரவேற்புரை நல்கினார். அடுத்துத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்  நீதிபதி அரு.இலக்குமணன், அறிஞர் ஔவை நடராசன், முனைவர் வா.செ.குழந்தைசாமி, கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், முனைவர் பொன்னவைக்கோ, முனைவர் பா.வளன்அரசு, பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் முதலான தமிழ் ஆன்றோர்கள் நூற்றுவருக்கு இலக்குவனார் விருதுகள் வழங்கினார். தோழர் நல்லகண்ணு , எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் வர இயலாமல் சார்பாளர்கள் மூலம் விருதுகள் பெற்றுக் கொண்டனர்.
அடுத்துச் சிறப்புரையாற்றிய பேராசிரியர் க.திருமாறன் அவர்கள், பேராசிரியர் சிறப்புகளைக் கூறினார். இலக்குவனார் என்றாலே அனைவருக்கும் அவரது தியாகமும் தீரமும் நினைவிற்கு வரும் என்றார். விருதுநகரில் செந்திற்குமாரர் கல்லூரியில் பணியாற்றுகையில் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பாவேந்தர் பாரதிதாசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பங்கேற்ற மாபெரும் திருக்குறள் மாநாட்டை நடத்தினார். அண்ணா இது போல் சிறந்த மாநாட்டை வேறு யாரும் நடத்தியதில்லை எனப் பாராட்டினார். கல்லூரியில் அனைவரும் நல்ல தமிழில் பேசச் செய்தார். மாணவர்களையும் ஆசிரியர்களையும் மதித்தார். அனைவராலும் பேராசிரியர் மதிக்கப்பட்டார்.  அவரின் இலக்கியப் பணியாலும் தமிழ்ப் பணியாலும் பகுத்தறிவுப் பணியாலும் விருதுநகரில் ஒவ்வொருவரும் பேராசிரியரை அறிந்திருந்தனர். ஒரு சமயம் திராவிடர் கழக மாநாட்டில் பங்கேற்கப் பேராசிரியருக்கு வழக்கம் போல் அழைப்பு வந்திருந்தது. கல்லூரித் தாளாளருக்கும் அழைப்பு வந்திருந்தது. அவர் பேராசிரியரிடம் வந்திருந்து இருவருக்கும் அழைப்பு வந்துள்ளது: இருவரும் ஒன்றாகச் சென்றால் பேராசிரியரைக் கருஞ்சட்டைக்காரர் என்று சொல்லும் மக்கள் தன்னையும் அவ்வாறுதான் சொல்லுவார்கள். எனவே, யாரேனும் ஒருவர்தான் செல்ல வேண்டும் என்றார். வேறு யாரேனுமாக இருந்தால், ஐயா, நீங்களே செல்லுங்கள் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், பேராசிரியரோ அப்படியானால் நீங்கள் மாநாட்டிற்குச் செல்ல வேண்டாம். நான் செல்கிறேன் என்று துணிவுடன் கூறிவிட்டு மாநாட்டிற்குச் சென்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில்  பேராசிரியர் பணியாற்றும் பொழுது பதவியைத் துச்சமெனக் கருதி இந்திஎதிர்ப்புப் போரில் குதித்தார். அவரது நூற்றாண்டு விழாவில் நான் பார்க்கக் கருதிய தமிழறிஞர்கள் எல்லாம் ஒன்று கூடி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேராசிரியர் க.திருமாறன் பேசினார்.
விருதாளர்கள் சார்பில் மூவர் பேசினர். முதலில் பேசிய ஈரோடு தமிழன்பன் அவர்கள் அரசே பேராசிரியர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி அவர் பெயரில் அறக்கட்டளை நிறுவியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அடுத்து நீதிபதி அரு. இலக்குமணன் அவர்கள் பேராசிரியரின் மாணவர் என்ற நிலையில் நினைவுரையாற்றினார். பின்னர் ஆட்சித்துறை வல்லுநர் இலட்சுமிகாந்தன் பாரதி அவர்கள் பேராசிரியர் இலக்குவனாருடன் தொடார்பு கொண்டதற்கே தனக்குப் பெருமை கிடைத்தது என்றார்.
நிறைவாகத் தலைமையுரை ஆற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், வெவ்வேறு கருத்துடைய தமிழறிஞர்கள் கூடியிருந்தாலும் தமிழால் ஒன்றுபட்டுள்ளோம் எனக் காட்டுவதற்காக இங்கு வருகை தந்துள்ளதைப் பாராட்டினார். பேராசிரியர் எழுதிய துரத்தப்பட்டேன் என்னும் பாவியத்தைப் பெரிதும் பாராட்டிப் பேசினார். தந்தை பெரியார் அவர்கள் பேராசிரியர்  மீது பற்றும் அன்பும் கொண்டு தன்னருகேயே வைத்துக் கொண்டதையும் அவர் பணியிழந்த பொழுது தம் இதழில் இணை ஆரியராக அமர்த்திக் கொண்டதையும் பேராசிரியரின் சிறப்புகளையும் விளக்கிப் பேசினார். இறுதியில் தஞ்சாவூரில் உள்ள பெரியார்  மணியம்மை பல்கலைக்கழகத்தில் இலக்குவனார் அறக்கட்டளை ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படும் வகையில் நிறுவுவதாகவும் முதல் வைப்பாகத் திராவிடர் கழகத்திலிருந்து உரூபாய் பத்தாயிரம் வழங்குவதாகவும் ஆர்வமுள்ள பிறரும் பங்களிப்பை வழங்கலாம் என்றும் மிகுந்த வரவேற்பிற்கிடையே தெரிவித்தார். விழாவில்  விருது பெற்ற மேனாள் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள், எசு.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் இலக்குவனார் அறக்கட்டளை நிறுவப்போவதாகத் தெரிவித்தார். இறுதியில் அண்ணா நகர் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு தருமலிங்கம் நன்றியுரை ஆற்றினார்.
}
இது உங்களுக்குப்பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் valaiyakam,tamilish,tamil10 திரட்டிகளில் உங்களின் ஓட்டினையும் இடவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக