வெள்ளி, 24 டிசம்பர், 2010

worst conditions in S.C. students hostels : dinamani editorial: தலையங்கம்: சாயம் வெளுக்கிறது..

முறையான கருததுகள். சரியான கேள்விகள். எல்லாத் துறை மாணவர் விடுதிகளும் எல்லா ,டங்களிலும் பொதுவாக  இவ்வாறுதான உள்ளன. உணவிற்காக ஒதுக்கீடு செய்யும தொகையும் போதுமானதாக இல்லை. பல விடுதிகளில் சமையலர்கள் மட்டுமே பெரும்பாலும்  இருப்பர். விடுதிக் காப்பாளர்கள் சில நேரம்  வந்து  செல்வார்கள்.
எனவே, அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தலையங்கம்: சாயம் வெளுக்கிறது...!

First Published : 24 Dec 2010 12:46:38 AM IST


இரு தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையின் போக்குவரத்தை நிலைகுலைய வைத்தது எம்.சி. ராஜா ஆதிதிராவிடர் மாணவர் விடுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய போராட்டம். இந்தப் போராட்டத்தில் "வெளிசக்திகள்' இருந்ததாகச் செய்திகள் வந்தாலும், இதுபோன்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கான மாணவர் விடுதிகள் தங்குவதற்குத் தகுதியற்றதாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.  ஏற்கெனவே வசதிகள் குறைவாக இருக்கும் இத்தகைய விடுதிகளில் மாணவர்கள் தங்கிப் படிக்கச் சிரமப்படுகிறார்கள் என்பதோடு, இந்த அறைகளைப் பழைய மாணவர்களும் வேறு சிலரும் ஆக்கிரமித்துக் கொண்டு, இவர்களுக்கான உணவையும் தட்டிப் பறிக்கிறார்கள் என்பதை இத்துறையின் அமைச்சரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது.  இப்போதைய போராட்டத்துக்கு வேண்டுமானால் வெளிசக்திகள் காரணமாக இருக்கலாமேயொழிய, இந்த நிலைமைக்குக் காரணம் நிச்சயமாக வெளிசக்திகள் மட்டுமே அல்ல. தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், ஆதிதிராவிட மாணவர்கள் நல வாரிய அதிகாரிகளும்தான் இதற்கு முழுமுதற் பொறுப்பு. இவர்களது அக்கறையின்மையும் பின்னணியும் உள்ள ஊழலும்தான் இத்தகைய மோசமான நிலைமை உருவெடுத்ததற்கான காரணம்.  தமிழ்நாட்டில், 2009-ம் ஆண்டு மக்கள் சாசனத்தின்படி, 1,204 ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் உள்ளன. 82,636 மாணவர்கள் தங்கியுள்ளனர். இதில் பள்ளி மாணவர்களுக்கான விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 70,773. மீதியுள்ள சுமார் 11,863 மாணவர்கள் உயர்கல்வி பயில்வோர். கலைக் கல்லூரி, தொழிற்கல்வி, பாலிடெக்னிக், சட்டக் கல்வி, முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக 81 விடுதிகளும், மாணவியருக்காக 55 விடுதிகளும் உள்ளன. கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் இந்த மாணவ மாணவியருக்காவது உரிய வசதிகள் செய்து தர வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் அரசும், அதிகாரிகளும் உள்ளதால்தான் இத்தகைய போராட்டம் வீதிக்கு வருகிறது.  ஆதிதிராவிட மாணவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் அதிக அளவு நிதியை ஒதுக்குகின்றன. ஒவ்வோர் ஆண்டும் மாணவர் விடுதிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் எந்தவொரு நகரை எடுத்துக் கொண்டாலும், ஆதி திராவிட மாணவர்களுக்காகக் கட்டப்படும் விடுதிகள் தரமானதாக, தங்கிப் படிப்பதற்கான வசதிகள் உள்ளதாக இல்லை. கழிப்பறைகள்கூட இடிந்து பாழ்பட்ட நிலையில்தான் இருக்கின்றன. இந்த நிலைமை பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளுக்கும் பொருந்தும்.  மாணவர் விடுதிக் கட்டடங்கள் ஓராண்டுக்குள்ளாகவே விரிசல் விட்டும், கதவுகள் பெயர்ந்தும், சன்ஷேட் அனைத்தும் உடைந்தும், கட்டடம் முழுதும் மழையில் சாதாரண குடிசைபோல ஒழுகுவதும்தான் வாடிக்கையாக இருக்கிறது. ஏதோ தர்மத்துக்குக் கட்டித் தருவதைப்போல, ஒப்பந்ததாரர்கள் ஏனோதானோ என்று கட்டிக் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்தான் இவை. இதைக் கட்டிக் கொடுத்த ஒப்பந்ததாரர்கள்மீது இதுவரை ஒரு வழக்குக்கூட தமிழக அரசினால்-அது எந்த ஆட்சியாக இருந்தாலும்-பதிவு செய்யப்பட்டதில்லை.  ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளில் வழங்கப்படும் இலவச உணவின் தரமும் மோசம். இதற்குக் காரணம், அங்குள்ள விடுதிக் காப்பாளர்தான். ஒவ்வொரு மாணவருக்கும் குறிப்பிட்ட அளவு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அந்தப் பணம் முழுமையாக மாணவர்களின் சாப்பாட்டுத் தட்டுக்கு வந்து சேர்வதில்லை. பாதியில் யாரோ சாப்பிடுகிறார்கள். மாணவர்களின் உணவுக்காக வழங்கப்படும் அரிசி, பருப்பு "வெளியே கொண்டுபோய் தூய்மை செய்து கொண்டு வருகிறோம்' என்ற பெயரில் பட்டப்பகலிலேயே கடத்தப்படுகின்றன.  இந்த ஊழலுக்குத் துணையாக நிற்கவும், புதிதாக வரும் ஆதி திராவிட மாணவர்களை மிரட்டுவதன் மூலம் அடங்கிப்போகச் செய்யவும் அடியாள்களாக முன்னாள் மாணவர்களை விடுதிக் காப்பாளர்களே "நியமிக்கிறார்கள்' என்று மாணவர்களே புகார் சொல்கிறார்கள். இதை அதிகாரிகளிடம் சொன்னாலும் நடவடிக்கை இல்லை என்று சொன்னால், அதிகாரிகள் மனப்போக்கை என்னவென்று சொல்வது? நேர்மையான விடுதிக் காப்பாளர்கள் சிலரும்கூட, இதில் தலையிட அச்சப்பட்டு ஒதுங்கி நிற்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  இந்த முன்னாள் மாணவர்கள் விடுதிகளில் தங்கிக்கொண்டு, அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்வதன்மூலம், உண்மையான மாணவர்களின் நலன் முழுக்க முழுக்க கேள்விக்குறியாகிவிடுகிறது.  தமிழக அரசு ஒரு குழுவை அமைத்து, உயர்கல்வி பயிலும் ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள், பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகள் அனைத்திலும் ஆய்வு நடத்தி, அங்கு இப்போது உள்ள வசதி என்ன, எத்தனை மாணவர்கள் உண்மையில் தங்கியிருக்க வேண்டும், வெளிசக்திகள் தங்கியிருந்தால் அதற்கு ஆதரவாக இருக்கும் நபர்கள் யார் என்பதை மாணவர்களிடம் தனித்தனியாகப் பேசி, உண்மையைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும். இதைச் செய்வதற்கும், சில அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு தயங்கும் என்றால், தாழ்த்தப்பட்ட மக்களை அரசாங்கமே தாழ்வாக நடத்துகிறது என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கும்.  புதிது புதிதாக சமத்துவபுரம் கட்டுவது ஒருபுறம் இருக்கட்டும். இருக்கும் ஆதிதிராவிட நல விடுதிகளை முதலில் முறையாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்க அரசு முன்வரட்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின்மீது இந்த அரசுக்கு இருக்கும் உண்மையான பரிவும் அக்கறையும் இந்த ஆதிதிராவிடர் நல விடுதிகளைப் பார்த்தாலே தெரிகிறதே...  தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசு என்று கூறும் ஓர் அரசு, ஆதிதிராவிடர் நலவிடுதிகளை மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும்படியான வசதிகளுடன் அமைத்து, அவர்களுக்கான வசதிகளை கூடுதலாகவே செய்திருக்க வேண்டாமா? இதுவரை செய்யாதது ஏன்?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக