ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஜீவா நினைவு அஞ்சல் தலை வெளியீடு

First Published : 22 Aug 2010 12:00:00 AM IST


சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் தபால் தலையை தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் சாந்தி நாயர் வெளியிட அதைப் பெறுகிறார்
சென்னை, ஆக.21: சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவருமான ப.ஜீவா என்ற ஜீவானந்தத்தின் நினைவு அஞ்சல் தலை சென்னையில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.நினைவு அஞ்சல் தலையை தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் சாந்தி நாயர் வெளியிட, விடுதலைப் போராட்ட தியாகிகள் சி.எஸ்.சுப்பிரமணியன், பார்வதி கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசியது:ஜீவா என்னும் பேராசானை நான் மாணவப் பருவத்தில் பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். அந்த காலக் கட்டங்களில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் தனது வாழ்நாளில் பெரும்பாலும் சிறையில் தான் இருப்பார்.கடந்த 1952-ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வடசென்னை சட்டப்பேரவை தொகுதியில் ஜீவா போட்டியிட்டார். மதுரை மேற்குத் தொகுதியில் பி. ராமமூர்த்தி போட்டியிட்டார். அப்போது, நான் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.மதுரையில் போட்டியிடும் ராமமூர்த்திக்காக, பிரசாரம் செய்ய ஜீவா வந்தார். அவரது பேச்சைக் கேட்க ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். இரவு 1 மணிவரை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டம் முடிந்த பிறகு யாரும் வீட்டிற்குச் செல்ல வேண்டாம். காலை 6 மணிக்கு நேராக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள் என்று ஜீவா சொன்னார். அவரது பேச்சைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி அமைந்துள்ள தெருக்களில் மக்கள் இரவில் தங்கி இருந்ததைக் கண்ணால் கண்டேன். இது என்னை வியக்க வைத்தது. ஜீவா குறித்து காந்தியடிகள் குறிப்பிடும்போது, தேசமே உங்கள் சொத்து என்றார். அப்பெருமைக்குரிய ஜீவாவின் தியாகத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இன்று அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா எம்.பி. பேசியது:ஜீவா நினைவைப் போற்றும் வகையில் இந்திய அரசும், அஞ்சல் துறையும் தபால் தலையை வெளியிடுவது   அவருக்கு அளித்த அங்கீகாரம் ஆகும். ஜீவாவை நான் பார்த்ததோ, பேசியதோ கிடையாது.அவரது பேச்சுக்களையும், எழுத்துக்களையும் மற்றவர்கள் கூற கேட்டுள்ளேன். சரித்திரம் போற்றும் தலைவராக ஜீவா விளங்கினார்.  உழைப்பவர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை தமிழர்களுக்கு மிக எளிமையாகச் சொன்னவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். அவர் விட்டுச் சென்ற பணியை நாமும் தொடர வேண்டும் என்றார்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணை செயலாளர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

பொதுவுடைமைச் சிங்கம் சீவா அவர்களின் குரு பகுத்தறிவுச் சிங்கம் சிவகங்கை இராமச்சந்திரன். பொதுவுடைமை நூல்கள் தந்து பல வழிகளில் முன்னோடியாக வாழ்ந்து வழிகாட்டி மறைவுலக வாழ்க்கையின் பொழுது முழுப் பாதுகாப்பு தந்து மறைந்த குருவின் மீது பற்றும் செய்ந்நன்றி உணர்வும் கொண்டவர் சீடர் சீவா என்பதற்குச் சான்று:28.2.1948 இல் சிவகங்கையில் தன்மதிப்புச் சுடர் இராமச்சந்திரனாரின்நினைவுப் பூங்காவை அறிஞர் அண்ணா திறந்து வைக்கும் பொழுது தாடி வளர்த்துக் கொண்டு மறைவாக வாழ்ந்து வந்த சீவா அவர்கள், காவல்துறை தளையிட்டாலும் பரவாயில்லை எனத் துணிந்து வந்து பங்கேற்றார். அவர் வழியில் கலப்பு நடையைத் தவிர்ப்போம். குருவான சிவகங்கை இராமச்சந்திரனார்க்கும் அஞ்சல்தலை வெளியிடச் செய்து சிறப்பிப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 6:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக