செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

காலமானார் தமிழறிஞர் இரா.சாரங்கபாணி


சிதம்பரம், ஆக. 23: முதுபெரும் தமிழறிஞர் முனைவர் இரா.சாரங்கபாணி (85) (படம்) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) காலமானார். இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை சிதம்பரம் மாரியப்பாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.சிதம்பரத்தை அடுத்த தேவன்குடி கிராமத்தில் 21-3-1925 அன்று பிறந்தவர் இவர். அண்ணாருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், அந்துவன் என்ற மகனும் உள்ளனர். இரா.சாரங்கபாணி 1949-82 வரை 32 ஆண்டுகள் அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும், உயர் ஆராய்ச்சி மைய நெறியாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1982-86 வரை 4 ஆண்டுகள் துறைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1988-94 வரை சிறப்பு நிலைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு தமிழகஅரசின் திருவள்ளுவர் விருது 1998-ல் முதல்வர் மு.கருணாநிதியால் வழங்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு உரை வேற்றுமை 3 தொகுதிகளாக வெளியிட்டவர். சங்கப் பாடல்களுக்கும், திருக்குறள் ஆய்வுக்கும் உலகளவில் பேரறிஞராக மதிக்கப்பட்டவர். நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவினரும், என்எல்சி நிறுவனமும் இணைந்து சிறந்த எழுத்தாளர் விருது அளித்து பாராட்டியுள்ளன. சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம். மேல்நிலைப் பள்ளிக்குழுத் தலைவராகவும் இருந்து வந்தார்.
கருத்துக்கள்

பரிபாடல் திறன் நூலைப்படிக்க நேர்ந்த பொழுதுதான் அறிஞர் சாரங்கபாணியாரின் புலமையை உணர்ந்தேன். பின்னர் பரிபாடல் பாடல்ககளை இசையுடன் பாடச் செய்யவும் பரிபாடல் முத்தமிழ் விழா என இயல் இசை நாடக நாட்டுப்புறப் பாடல் நாட்டுப்புற நாட்டிய வடிவில் சிறப்பாக நடத்தவும் பரிபாடலை எளிமையாக வெளிப்படுத்தவும் இவரது நூலே உதவியது. தமிழ் நலம் நாடும் சிறந்த அறிஞருக்கு முனைவர மு.இளங்கோவன் தன் வலைப்பூவில் புகழஞ்சலி செலுத்தி வரலாற்றுக் குறிப்பும் அளித்துள்ளார்.தினமணி இணைய நேயர்கள் சார்பில் சாரங்கபாணியார் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவிப்போம். சங்க இலக்கியச் சானறோர் சாரங்கபாணியார் வழியில் சங்கத்தமிழ வளர்ப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 3:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக