சனி, 7 ஆகஸ்ட், 2010

தலையங்கம்: கேள்விக்கு ஒருவரில்லை!

First Published : 07 Aug 2010 12:17:50 AM IST

Last Updated : 07 Aug 2010 12:29:04 AM IST

பால் விஷவாயு மரணங்களும், வாரன் ஆண்டர்சன் தப்பிச்சென்ற விவகாரமும், இப்போது அதே வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை சி.பி.ஐ.  தாக்கல் செய்திருப்பதும் என்று விவகாரங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் போபால் நகரில் யூனியன் கார்பைடு விட்டுச் சென்ற நச்சுக் கழிவுகளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதற்காக ஏற்கெனவே | 200 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.இந்த நச்சுக் கழிவுகளின் அளவு 300 டன் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பாதரசம் முதலாக சயனைடு வரையிலான பல்வேறு நச்சுக்களின் கலவைதான் இந்த நச்சுக் குப்பை. 1984-ல் விபத்து நடந்த பின்னர் கைவிடப்பட்ட ஆலையில் இருப்பவை இந்தக் கழிவுகள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. 1969 முதல் 1984-ம் ஆண்டு வரை-ஆலை செயல்பட்ட சுமார் 15 ஆண்டுகளாகச் சேர்ந்த நச்சுக் கழிவுகள்தான் இவை. அப்போதும் அரசும் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் கண்டுகொள்ளவில்லை. விபத்து நடந்து 25 ஆண்டுகள் ஆன பின்னாலும்கூட அதை அகற்றாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தது அரசு.தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (சஉஉதஐ) ஜூலை முதல் வாரம் வெளியிட்ட அறிக்கையில், 1984-ம் ஆண்டு நடந்த விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட மரணங்களுக்கும், ஆலையில் குவிந்துள்ள நச்சுக் கழிவுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், இந்த நச்சுக் கழிவுகள் இந்த ஆலையில் 1969-ம் ஆண்டு முதலாகவே குவிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றால் போபால் நகரின் மண்ணும் நீரும் நச்சுத்தன்மை அடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறியுள்ளது.குவிக்கப்பட்டுள்ள நச்சுக் குப்பையை இன்சினரேட்டர் கருவி மூலம் எரிக்க வேண்டும் என்பதோடு, மேற்பரப்பில் நச்சுக் கலந்திருக்கும் 11 லட்சம் டன் மண் அகற்றப்பட்டு, வேறிடத்தில் புதைக்கப்பட வேண்டும். முற்றிலும் விஷமாகிவிட்ட மூன்று கிணறுகளை மூட வேண்டும், நச்சுக் கலந்துள்ள நிலத்தடி நீரை மின்னேற்றி மூலம் இரைத்து வெளியேற்ற வேண்டும் என்று இந்த ஆய்வு நிறுவனம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. மண்ணை அகற்றுவதற்கு | 117 கோடி செலவாகக்கூடும். நிலத்தடி நீரை வெளியேற்றும் மின்னேற்றிகள் அமைக்க | 30 லட்சம் செலவாகும். இதன் பராமரிப்புச்  செலவு ஆண்டுக்கு | 15 லட்சம் ஆகலாம்.தற்போது போபால் அருகே பீதாம்பூர் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள மத்தியப்  பிரதேச நச்சு மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், இக்கழிவுகளை எரிக்கும் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஹைதராபாத் நிறுவனத்திடம் நச்சுக் கழிவுகளை எரிக்கப் போதுமான நவீன கருவிகள் இல்லை என்று கூறப்படுகிறது. நச்சுக் கழிவுகளை எரிக்கும் வெள்ளோட்டத்தின்போது, 6 பணியாளர்களுக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.மக்கள்தொகை அதிகம் உள்ள இடத்தில் இத்தகைய ஆபத்தான நச்சுகளை எரிக்கும் பணியை நடத்தக்கூடாது, இவற்றை வேறிடத்தில் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அப்படிச் செய்யும்போது இன்னும் பல கோடிகள் செலவு கூடும்.இந்தச் செலவுகளை ஏன் இந்திய அரசு ஏற்க வேண்டும்? என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. 1969 முதலாகவே நச்சுக் கழிவுகளைக் குவித்து வைத்த யூனியன் கார்பைடு நிறுவனம்தானே இதற்குப் பொறுப்பு? இத்தனை காலமாக இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த ஆலை அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும்தானே இதற்குப் பொறுப்பு?தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை டௌ நிறுவனம் வாங்கியுள்ளது. எங்களுக்கும் நச்சுக் கழிவுகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று சொல்கிறது டெü. "எல்லா இழப்பீடுகளையும் யூனியன் கார்பைடு செய்து முடித்த பின்னர்தான் அந்த நிறுவனம் எங்கள் கைக்கு மாறியது. ஆகவே, நாங்கள் இந்த நச்சுக் கழிவுக்குப் பொறுப்பேற்க மாட்டோம்' என்று சொல்கிறது டெü.யூனியன் கார்பைடு நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த இழப்பீட்டுத் தீர்வைகள் யாவும் 1984 டிசம்பர் மாதம் நடந்த விஷவாயுக் கசிவு மரணங்களுக்கு மட்டும்தானே அல்லாமல், நச்சுக் கழிவை அகற்றும் பணிகளுக்கும் சேர்த்து அளிக்கப்பட்ட இழப்பீடு அல்ல.மேலும், டௌ நிறுவனத்துக்கு விற்கும் முன்பாக, யூனியன் கார்பைடு நிறுவனம் கேட்டுக்கொண்டதன் பேரில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் இந்த நச்சுக் கழிவுகள் பற்றி ஆய்வு நடத்தி, 1994-ல் அறிக்கை அளித்துள்ளது. மண்ணும் நிலத்தடி நீரும் நச்சுக் கழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்து 1996-ம் ஆண்டு தங்களுக்குத் தெரிய வந்ததாக டௌ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழக்குரைஞர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.நிலைமை இதுவாக இருக்க, நச்சுக் கழிவுகளை அகற்றுவதில் தனக்குப் பொறுப்பே கிடையாது என்றும் யூனியன் கார்பைடு செய்யாமல் விட்டதற்குத் தான் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் டெü நிறுவனம் கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசும் மக்கள் பணம் | 200 கோடியை ஒதுக்கி, அவர்கள் போட்டுவிட்டுப்போன நச்சுக் குப்பையை அகற்றவும், மண்ணையும் நிலத்தடி நீரையும் தூய்மையாக்கவும் நடவடிக்கை மேற்கொள்வது அதைவிட வேடிக்கை.யாரோ அன்னிய வியாபாரி இங்கே வந்து தொழில் தொடங்கி லாபம் ஈட்டினார். அந்தத் தொழிற்சாலையில் கசிந்த விஷவாயுவால் போபால் நகர மக்கள் பல தலைமுறைகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற நச்சுக் கழிவுகள் மண்ணையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்திவிட்டிருக்கின்றன. அவர்கள் செய்த தவறைத் தட்டிக் கேட்டு நியாயம் தேட வேண்டிய இந்திய அரசுதான் மக்களின் வரிப்பணத்தில் பொறுப்பேற்கிறது. பாரதியின் வரிகளில் சொல்வதானால், "கேள்விக்கு ஒருவரில்லை- (எம்மை) கீழ்மக்கட்கு ஆளாக்கினான்'.
கருத்துக்கள்

தினமணியின ஆழமான ஆசிரிய உரைக்கும் மதுரைக்காரனின் சரியான கேள்விக்கும் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/7/2010 5:17:00 AM
இதில் என்ன ரகசியம் இருக்கிறது? போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக இந்திய அரசு மட்டும் தான் வழக்கு நடத்தும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, ரூ.600 கோடி நிவாரணம் வாங்கி வந்தது காங்கிரஸ் அரசு. மேஜைக்கு கீழே எத்தனை கோடிகள் வாங்கினார்கள் என்பது காங்கிரஸ்காரனுக்குத்தான் தெரியும். இப்போ போயி கழிவுகளை Union Carbide /Dow Chemicals கிட்ட அகற்ற காசு கேட்டா, பழைய வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறிடுமே? அதான் மக்கள் வரிப்பணத்தை எடுத்துகொடுத்து விஷயத்தை கமுக்கமா முடிக்கப் பார்க்கிறாங்க. மத்தியில் ஆட்சியில் மிச்சமிருக்கிற நாலு வருசத்துக்கு இந்த விஷயத்தை கொஞ்சகொஞ்சம மறைக்க பார்க்கிறானுங்க. போபால் மக்களுக்குப் பண்ணின துரோகத்தும், ஈழத்தமிழனை கழுத்தறுத்ததற்கும் காங்கிரஸ் என்ன விலைடா கொடுக்கப் போறீங்க? மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/7/2010 1:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக