புதன், 4 ஆகஸ்ட், 2010

ஐ.நா.வுக்குச் சாவுமணி அடிக்க முயற்சி


இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மன்றம், மூவர் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளது.  இந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மருசுகிடருஸ்மா குழுவின் தலைவராகவும், தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டிவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. செயலர் பான்-கீ-மூன் அறிவித்துள்ளார். இக்குழுவில் மேலும் சிலர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே இலங்கை அதிபர் ராஜபட்ச, ஐ.நா. குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஐ.நா. குழுவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல நாடுகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த 6-7-10 அன்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தொடங்கி, இப்போராட்டத்தில் புத்த பிட்சுகள் உள்பட  ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஐ.நா. அலுவலகத்தைச் சேர்ந்த 120 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்துவைப்பதுதான் தங்களது நோக்கம் என வீரவன்ச தெளிவாக அறிவித்தார். ஐ.நா. குழு பற்றிய அறிவிப்பை  பான்-கீ-மூன் திரும்பப் பெற்றால் ஒழிய ஐ.நா. அலுவலர்கள் அனைவரும் தங்களது முற்றுகையிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் கூறினார். அதுமட்டுமல்ல, 8-7-10 அன்று தனது கோரிக்கை நிறைவேறும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறி அந்தப் போராட்டத்தையும் தொடங்கினார். பான்-கீ-மூனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. ஐ.நா. அலுவலர்களின் பாதுகாப்புக்குரிய நடவடிக்கையை இலங்கை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என ஐ.நா. மன்றம் எச்சரித்தது. இதன் விளைவாக, மூன்று மணி நேர முற்றுகைக்குப் பிறகு இலங்கையின் வெளியுறவுச் செயலர் ரமேஷ் ஜெயசிங்கே தலையிட்டு ஐ.நா. அலுவலர்களைப் பத்திரமாக வெளியேற்றினார். போர்க் குற்றம் தொடர்பான விசாரணைக் குழுவை ஒருபோதும் கலைக்க முடியாது என ஐ.நா. மன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. ஐ.நா.வுக்கு எதிராக இலங்கையின் அமைச்சர் ஒருவரே போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை மூடுவது என பான்-கீ-மூன் முடிவு செய்தார். இலங்கையில் உள்ள ஐ.நா.வின் பிரதிநிதியையும் திரும்பப் பெற்றுள்ளார். ஐ.நா.வின் விசாரணைக் குழுவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. பான்-கீ-மூன் தமது அதிகாரங்களை மீறிச் செயல்படுவதாகத் தெரிவித்து வழக்கு தொடரும் உலகின் முதலாவது நாடு இலங்கையே ஆகும். இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்தச் சலசலப்புக்குப் பின்னணியாக இந்தியாவும், சீனாவும் நிற்கின்றன. அதுதான் ஐ.நா.வை எதிர்த்து அறைகூவல் விடுவதற்கு அவருக்குத் துணிவை அளித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பட்டமாக மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ள ராஜபட்ச மீது விசாரணை நடத்த ஐ.நா. மன்றம் முற்படும்போது, அதற்கு எதிராக அவர் விடுத்துள்ள அறைகூவலைச் சந்திக்கும் துணிவை ஐ.நா. பெறுமா? அதில் அங்கம் வகிக்கும் நாடுகள் துணை நிற்குமா என்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்துள்ளன. இந்தக் கேள்விகளுக்குரிய விடையில்தான் ஐ.நா.வின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. இல்லையென்றால் ஐ.நா.வின் முன்னோடியாக விளங்கிய சர்வதேச சங்கத்துக்கு ஏற்பட்ட கதி ஐ.நா.வுக்கும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. முதல் உலகப்போர் முடிவடைந்த பிறகு மீண்டும் போர் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் வெர்செயில்ஸ் உடன்பாட்டைப் போரில் வெற்றிபெற்ற நாடுகள் செய்துகொண்டன. அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த உட்ரோ வில்சன் உலகில் அமைதியை நிரந்தரமாக நிலைநிறுத்தச் செய்யவும், சர்வதேச நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கவும், சர்வதேச அமைப்பு ஒன்று தேவை என்பதை வலியுறுத்தினார். முதல் உலகப்போரில் ஏற்பட்ட பேரழிவைக் கண்ட நாடுகள் அமெரிக்காவின் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்தன. அதற்கிணங்க சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச சங்கம் அமைக்கப்பட்டது.ஆனால், இதற்கான யோசனையைத் தெரிவித்த உட்ரோ வில்சனின் நாடு இந்த அமைப்பில் இணைவதற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.     போரில் தோற்ற ஜெர்மனி, இந்த அமைப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதைப்போல 1917-ம் ஆண்டில் அக்டோபர் புரட்சியை நடத்தி ஜார் ஆட்சியை வீழ்த்தி உருவான சோவியத் ஒன்றியமும் இந்த அமைப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. உலகின் மூன்று முக்கிய வல்லரசுகள் இந்த அமைப்பிலிருந்து விலகிநின்றன. மற்றும் இரு வல்லரசுகளான பிரிட்டனும், பிரான்ஸýம் இந்த அமைப்பில் அங்கம் வகித்தன. ஆனாலும் பல்வேறு நாடுகளுக்கிடையே தகராறுகள் எழுந்தபோது அதில் தலையிட்டுத் தடுக்க வேண்டிய சர்வதேச சங்கம் அவ்வாறு செய்ய பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் ஒத்துழைக்கவில்லை. 1923-ம் ஆண்டில் பிரான்ஸýம், பெல்ஜியமும் இணைந்து ஜெர்மனியின் முக்கியத் தொழில் பகுதியான ரூர் என்பதை ஆக்கிரமித்தன. இதைத் தடுக்கவோ கண்டிக்கவோ சர்வதேச  சங்கம் முன்வரவில்லை. 1935-36-ம் ஆண்டில் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி, சிறிய நாடான அபிசீனியா மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார். பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ரகசியமாக முசோலினியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அபிசீனியாவின் மூன்றில் இரண்டு பகுதியை அவர் ஆக்கிரமிப்பதற்கு இசைவு தெரிவித்தன. ஆக்கிரமிப்பாளரான இத்தாலிக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச   சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், வல்லரசுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் இத்தாலியுடன் கொண்டிருந்த வணிக ரீதியான உறவை ஒருபோதும் கைவிடவில்லை. 1931-ம் ஆண்டில் சீனாவின் பகுதியான மஞ்சூரியா மீது ஜப்பான் படையெடுத்து ஆக்கிரமித்தது. இதை சர்வதேச சங்கம் கண்டித்தபோது அதிலிருந்து விலகிக்கொள்வதாக ஜப்பான் அறிவித்து வெளியேறியது. 1936-ம் ஆண்டில் ஹிட்லரின் ஜெர்மனி ரைன்லேண்ட் மீது படையெடுத்துக் கைப்பற்றியது. 1938-ம் ஆண்டில் ஆஸ்திரியாவையும், 1939-ம் ஆண்டில் செக்கோஸ்லோவாகியாவையும் அது கைப்பற்றியது. ஆனால், வல்லரசுகளில் ஒன்றான பிரிட்டன் ஹிட்லரை தாஜா செய்யும் கொள்கையைப் பின்பற்றியதே தவிர, சர்வதேச சங்கத்தின்மூலம் அவரது ஆக்கிரமிப்புகளைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் சேம்பர்லேன், ஜெர்மனிக்கே சென்று இனிமேல் புதிதாக எந்த நாட்டின் மீதும் படையெடுக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை ஹிட்லரிடம் பெற்று மூனிச் உடன்பாடு செய்துகொண்டார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசுகள் சர்வதேச சங்கத்துக்கு வலிமை சேர்ப்பதற்குப் பதில் தங்களின் தன்னலத்துக்காக இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் சமரசம் செய்துகொண்டது வேண்டாத விளைவுகளுக்குக் காரணமாயிற்று. சிறிய நாடுகள் சர்வதேச சங்கத்திடம் நம்பிக்கை இழந்தன. சர்வதேச சங்கத்துக்கு வல்லரசுகள் முழுமையாக ஆதரவு தந்திருந்தால் ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும். அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகத்தான் முசோலினி, ஹிட்லர், டோஜோ போன்ற பாசிச சர்வாதிகாரிகள் மேலும் மேலும் வலிமை பெற்றவர்களாக மாறி, இரண்டாம் உலகப்போரைத்  தொடங்கும் துணிவைப் பெற்றார்கள். அதன் விளைவாக வரலாறு காணாத பேரழிவை உலகம் சந்தித்தது. 1939-ம் ஆண்டில் ஜெர்மனி பிரான்ஸின்மீது படையெடுப்பு நடத்தி அதைப் பிடித்து, பிரிட்டன் மீது பறக்கும் குண்டுகளை ஏவித் தாக்கியபோதுதான் தனது தாஜா கொள்கையின் தவறுகளைப் பிரிட்டன் உணர்ந்தது. ஆனால், காலம் கடந்துவிட்டது. 1941-ம் ஆண்டுவரை இரண்டாம் உலகப்போரில் இருந்து விலகி நின்ற அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்தை ஜப்பானிய விமானங்கள் குண்டுவீசி அழித்தபோதுதான் அமெரிக்கா தனது தவறை உணர்ந்தது. 1941-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் மீது ஹிட்லர் திடீரென படையெடுத்தபோது சோவியத் நாடு அதிர்ச்சியடைந்தது. அமெரிக்காவும் பிரிட்டனும் அதை வேடிக்கை பார்த்தன. காலங்கடந்துதான் உலகையே அடிமை ஆக்கும் ஹிட்லரின் பேராசையை இந்நாடுகள் புரிந்துகொண்டன. சூடான் அதிபர் அல்பஷீருக்கு எதிராக போர்க் குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து அவருக்குத் தண்டனை வழங்கியுள்ளது. அதைப்போல செர்பியாவின் அதிபராக இருந்த மிலோசேவிக் மீதான  போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரித்து அவருக்கு சர்வதேச நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.இதற்கு வல்லரசுகளும் இந்தியா, சீனா போன்ற நாடுகளும் துணையாக இருந்தன. ஆனால், மேற்கண்ட இருவரைவிட மிகக்கொடிய குற்றங்களைச் செய்த ராஜபட்சவைக் காப்பாற்றுவதற்கு இந்தியாவும் சீனாவும் முயற்சி செய்கின்றன. ஐ.நா. அமைத்துள்ள விசாரணைக் குழுவை எப்படியும் ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.ஐ.நா. குழுவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா. பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவருவதற்கு எகிப்தை இந்தியா தூண்டியுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு சீனாவின் ஆதரவைப் பெறுவதற்காக இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் சீனாவுக்கு விரைந்துள்ளார். தென்னாப்பிரிக்க நிறவெறி பிரச்னை, சூயஸ் கால்வாய் பிரச்னை, வியட்நாம் பிரச்னை போன்றவற்றில் மேற்கு நாடுகள் எதிராக இருந்தபோதிலும் இந்தியா முன்னின்று ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை ஒன்றுதிரட்டி ஐ.நா.வின் கரத்தை வலுப்படுத்தி மேற்கு நாடுகள் சதியை முறியடித்தது. ஆனால், அந்த இந்தியா இன்று மிகக்கொடிய சர்வாதிகாரியான ராஜபட்சவைக் காப்பாற்ற பெருமுயற்சி செய்கிறது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் பத்து நீதிபதிகளும் பல நாள்கள் தொடர்ந்து நடத்திய விசாரணைக்குப் பிறகு ராஜபட்ச ஒரு போர்க்குற்றவாளி என்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தது உண்மை என்றும் தீர்ப்பளித்திருக்கின்றனர். பல நாடுகளைச் சேர்ந்த இந்த பத்து நீதிபதிகளில் இந்தியாவைச் சேர்ந்த ராஜேந்தர் சச்சாரும் ஒருவராவார். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் ஐ.நா. மன்றம் ராஜபட்ச மீது விசாரணை நடத்தக் குழுவை அமைத்தது. ஆனால், இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து பிரச்னையைத் திசைதிருப்ப இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் நாடகமாடுகின்றனர். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையைக் கண்டறிய சிறப்புத் தூதுவர் ஒருவரை அனுப்ப வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதும் அக்கடிதத்திற்கிணங்க அவர் ஒரு தூதுவரை அனுப்ப முன்வந்திருப்பதும் ராஜபட்சவைக் காப்பாற்றுவதற்கே தவிர, தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு அல்ல.ஐ.நா.வின் விசாரணைக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு இந்தியாவின் சிறப்புத் தூதுவர் அங்குசெல்வதும் நிலைமையை அறிந்துவந்து ராஜபட்சவுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையை வெளியிடச் செய்வதும்தான் சிறப்புத் தூதுவர் அனுப்பப்படுவதன் நோக்கமாகும். சர்வதேச சங்கத்துக்குத் துணையாக நின்று ஆக்கிரமிப்பாளர்களையும், அநீதியாளர்களையும் அடக்கி ஒடுக்க அன்று அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்ஸýம் தவறியதன் விளைவாக சர்வதேச சங்கம் செத்துப்போனது.  இப்போது ஈவு இரக்கமற்ற படுகொலைகளையும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் செய்த இலங்கை அதிபர் ராஜபட்சவைக் காப்பாற்ற இந்தியாவும் சீனாவும் செய்யும் முயற்சி ஐ.நா.வுக்குச் சாவுமணி அடித்துவிடும்.
கருத்துக்கள்

பழ.நெடுமாறன் ஐயா எழுதியுள்ளவை சரிதான். வல்லரசுகளே இனப்படுகொலையில் கை கோத்துச் செயல்பட்டுள்ளமையால் அவர் குறிப்பிடுவதுபோல் ஐ.நா.விற்குச் சாவுமணி அடிக்கப்படும் என்பது உண்மையாகலாம். ஈழத்தமிழர் உரிமைக் காப்பிற்கெனப் பன்னாட்டுக் குழு ஒன்றை அமைத்து உலகெங்கும் சென்று உண்மையை உணரச் செய்து தமிழ் ஈழத்தை மலரச் செய்வதையே தத்தம் கடமையாக ஒவ்வொருவரும் கொள்ள வேண்டும். வாழ்க தமிழ்! வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக மனித நேயம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/4/2010 5:58:00 PM
இத்தாலி நாட்டு சோனியாவின் கணவனை கொன்றதால் ராஜ பக்ஷ்க்குதான் அதரவு கை நீட்டுகிறார்கள் .ஒன்றும் செய்ய முடியாது.தமிழர்கள் புலம் பெயருவரது நல்லது.சோனியாவின் ஆட்சி இது.கருணாநிதி முதலமைச்சராக சாகவும் அடுத்த முதலமைச்சராக வாரிசும் வர பாடு படுகிறார்.அவரவர் கவலை அவரவருக்கு.ஏல தமிழர்களை இங்கு இருக்கும் தமிழர்கள் நினைக்க நேரமில்லை .அவரவர்கள் பாடே பெரும் பாடாக உள்ளது .புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் மெதுவாக ஈழத்தை மறக்கவும் அடுத்த மண்ணில் வாழ்வை தேட ஆரம்பித்து விட்டார்கள் .
By sumban
8/4/2010 1:43:00 PM
Thiru.Ayya. Nedumaaran,s Editorial Article is Excellent. It clearly shows the present Tamil Ethnic Issue in Srilanka. Everybody knows about the Unjustifiable Support of our Indian Government and China to Srilanka,s Mahinda Rajapakse for the Genocide of Eezham Tamils in the North East. They never care about the UN Panel Appointed by Mr.Ban Ki Moon. The Killers Rajapkse/Gothapaiah/Fonseka should be punished as soon as Possible by the Verdict given by the Panel in the Future. If India tries to Protect Rajapakse, it will face the Adverse Effect in many ways internally and Internationally. Long Live Mr.Nedumaaran, the Core Supporter of Eezham Tamils from the Beginning onwards and he is the One Who Clearly Demand Separate Tamil Eezham to solve the year long Tamil Eezham Struggle.
By VanniArasu
8/4/2010 1:19:00 PM
MR NEDUMARAN, GOOD WRITE UP. YOU HAVE TRACED HISTORY OF LEAGUE OF NATIONS AND UNO. MAY BE IT IS TRUE THAT THE INDIAN REPRESENTATIVE ,VISITING SRILANKA MIGHT GIVE AN OPINION IN FAVOUR OF RAJAPAKSE GOVERNMENT BUT THAT MAY NOT SOUNGD THE END OF UNO AS SURMISED BY YOU. BUT HOW TO EXECUTE THE DECISION OF UN COMMITTEE IT SRILANKA IS NOT GOING TO COOPERATE IN FINDING OUT FACTS? WHAT THE UN WILL DO?
By S Raj
8/4/2010 11:09:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக