வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

கல்லெறிதலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

காஸ்யப முனிவரின் பெயரால் காஷ்மீர் என பெயர் பெற்று, ஆதிசங்கரர் விஜயம் செய்த சாரதா பீடத்தின் அதிதேவதையாக உள்ள  சரஸ்வதி தேவியின் இருப்பிடமாகத் திகழும் ஜம்மு - காஷ்மீர் இன்று இந்தியாவுக்கு பெருத்த சவாலாக எழுந்துள்ளது.1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோதே, காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டுவிட வேண்டும் என நினைத்த பாகிஸ்தான், பழங்குடியினரைத் தூண்டிவிட்டு உள்ளே நுழையவைத்தது.ஆனால், அந்த முயற்சியை இந்தியா முறியடித்தபோதும், அதன் பின்னர் 1965-லும், 1999-லும் மீண்டும் இந்தியாவுடன் போர் தொடுத்தது.நமது வரைபடத்தில் நாம் பார்க்கும் காஷ்மீரில் 1,01,338 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே நம் வசம் உள்ளது. 85,846 சதுர கி.மீ. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராகவும், 37,555 சதுர கி.மீ. பரப்பளவு சீனா வசமும் உள்ளது.இப்போது நம் வசம் உள்ள காஷ்மீரிலும் கடும் சவால் எழுந்துள்ளது."சிரித்துக் கொண்டே பாகிஸ்தானைப் பெற்றோம்; போராடி ஹிந்துஸ்தானத்தைக் கைப்பற்றுவோம்' என தேசத்தைப் பிரித்தபோது பாகிஸ்தான் தலைவர்கள் கூறினார்கள். அந்தத் தலைவர்களின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் அவர்களது வழித்தோன்றல்கள் இந்தியாவில் கலவரத்தைத் தூண்டி வருகின்றனர்.நேரடிப் போரில் வெல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பாகிஸ்தான், தனது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் மூலம் கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகிறது.தொடர்ந்து மாநிலத்தில் நிலவி வரும் பிரச்னை காரணமாக லட்சக்கணக்கான பண்டிட்டுகள் மாநிலத்தில் இருந்து அகதிகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.இப்போது, புதிய உத்தியாக மக்களைத் தூண்டிவிட்டு பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிய வைக்கின்றனர். முதலில் இளைஞர்கள் மட்டும்தான் கல்லெறிதலில் ஈடுபட்டனர். அடுத்து பெண்களும், முதியவர்களும் கூட இந்த கல்லெறிதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.மக்களுக்கு இடையே பயங்கரவாதிகள் சிலர் புகுந்து கொண்டு பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுடுகின்றனர். தற்காப்புக்காக பாதுகாப்புப் படையினர் சுடுவதில் சிலர் உயிரிழக்கும்போது நிலைமை இன்னும் உணர்ச்சிகரமானதாக ஆகிவிடுகிறது.இதுபோதாதென்று பாதுகாப்புப் படையினரின் முகாம்களைத் தாக்கி தீவைத்துக் கொளுத்துவதிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர்.நிலைமை எந்த அளவுக்கு விபரீதமாகி இருக்கிறது என்றால் சையத் அலி ஷா ஜீலானி தலைமையிலான ஹுரியத் அமைப்பு, ஞாயிற்றுக்கிழமையை வேலைநாளாகவும், வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.அத்துடன், இந்திய அரசாங்கத்துக்கு ஒத்துழைக்காதவண்ணம் ஜூலை 28 முதல் பொதுமக்கள் யாரும் மின் கட்டணம், விற்பனை வரி, தண்ணீர் வரி ஆகியவற்றை கட்ட மறுக்க வேண்டும் என ஹுரியத் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.காஷ்மீர் பல்கலைக்கழகமும், பாரத ஸ்டேட் வங்கியும் ஜூன் 25-ம் தேதி செயல்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது அங்கு அரசாங்கம் என்று ஒன்று உள்ளதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.ஏன் இந்த நிலை? எந்தவொரு போராட்டமுமே திடீரென ஒரே நாளில் உருவாவதில்லை.  அதுவும் காஷ்மீர் பிரச்னை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.ஆனால், மக்கள் இந்த அளவுக்கு இந்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க உளவு அமைப்பு தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.ஏழ்மையின் காரணமாகவும், வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாகவும்தான் மக்கள் இதுபோன்ற வன்முறையில் இறங்கியுள்ளனர் என்றும் அதனால் அதற்குரிய சில திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.இப் பிரச்னைக்கு வேலையில்லாத் திண்டாட்டம் என்ற காரணத்தில் முழு உண்மையில்லை. அதுதான் உண்மையென்றால் நமது நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் சுமார் 50 கோடி பேர் தினசரி கல்லெறிதலிலோ, துப்பாக்கியைத் தூக்குவதிலோ ஈடுபட்டிருக்க வேண்டும்.அது காஷ்மீராக இருந்தாலும் சரி, மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் சரி, மக்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். எல்லாப் பகுதிகளிலும் சீரான வளர்ச்சிப் பணிக்கு திட்டமிடும் அதே நேரத்தில் தூண்டிவிடுபவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது அவசியம்.பிரிவினையின்போது பாகிஸ்தான் சென்றவர்கள் படும் துன்பங்களையும், இந்தியாவுடன் இருப்பதே நன்மை பயக்கும் என்பதையும், இந்தியப் பற்று உள்ள உள்ளூர் தலைவர்கள் மூலம் மக்களுக்குப் புரியவைக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.எந்த விலை கொடுத்தும் காஷ்மீரை நாம் தக்கவைத்துக் கொள்வோம் என்பதை பிரிவினைவாதத் தலைவர்களுக்கு அரசு உணர்த்த வேண்டும். பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்ததால் பிரச்னை தீரும் என நினைத்தே தேசம் பிரிக்கப்பட்டது. அதனால், கடந்த 63 ஆண்டுகளாக காஷ்மீரில் கலவரம், மும்பைத் தாக்குதல், நாட்டின் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் என தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.காஷ்மீர் நம் கையை விட்டுப் போனால், அடுத்து மேற்கு வங்கத்துக்கும், அசாமுக்கும் குறிவைக்கப்படும். அதற்கான பணிகளை ஏற்கெனவே பாகிஸ்தானும், வங்கதேசமும் தொடங்கிவிட்டன.மேற்கு வங்கத்திலும், அசாமிலும் லட்சக்கணக்கானோர் இரு தேசங்களிலும் இருந்து ஊடுருவியுள்ளனர். அவர்களை வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட அவர்களை வெளியேற்ற முடியவில்லை. காரணம் இரு மாநிலங்களிலும் ஊடுருவியவர்களை ஓட்டு வங்கியாகக் கருதி, அவர்களுக்கு ரேஷன் அட்டை உள்பட சகல வசதிகளையும் இரு மாநில அரசுகளும் செய்து கொடுத்துவிட்டன. 1947-ல் ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் ரசாக்கர்கள் எனப்படுவோர் பாகிஸ்தானுடன் சேரப் போவதாக முரண்டு பிடித்தபோது, ராணுவத்தை அனுப்பி தனது உறுதியான நடவடிக்கை மூலம் அவர்களை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் பணியவைத்தார்.அதுபோன்ற துணிவான, சாதுர்யமான நடவடிக்கையால் காஷ்மீரைக் காப்பாற்றுவதன் மூலம்தான் பாகிஸ்தானுக்கு உரிய பதிலை நாம் தர முடியும். செய்யுமா மத்திய அரசு?
கருத்துக்கள்

பாகிசுத்தான் கட்டுப்பாட்டு காசுமீர் நிலையையும் சீனாக் கட்டுப்பாட்டுக் காசுமீர் நிலையையும் தினமணி விளக்கினால் நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 3:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக