செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

மின் கட்டண உயர்வு அனைவரையும் பாதிக்கும்: ஜெயலலிதா


சென்னை, ஆக. 2: அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் வகையில் தி.மு.க. அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.  இதற்கு எதிராக தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டார்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ÷இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ÷விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னால், விலைவாசியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர் கருணாநிதி. ÷மின் கட்டணத்தை உயர்த்தப் போவது குறித்து 6.5.2010 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,  "அது முழு கற்பனை.  மின் கட்டணத்தை உயர்த்தப் போவதும் இல்லை. இலவச மின்சாரத்தை நிறுத்தப் போவதும் இல்லை.  இதை வைத்து போராடலாம் என்ற கனவு பலிக்காது' என்று குறிப்பிட்டார். ÷முதல்வர் கருணாநிதி கற்பனை என்று கூறியது, உண்மை ஆகிவிட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வை அறிவித்து விட்டது. 2 மாதத்துக்கு 600 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  ÷நகர்ப்புறங்களில் காற்றோட்ட வசதியும், போதிய வெளிச்சமும் வீடுகளில் இல்லாததன் காரணமாக, மின் விசிறிகள், மின் விளக்குகளை 24 மணி நேரமும் பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது.   இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான வீடுகளில் மாதம் 300 யூனிட் மின்சார பயன்பாடு என்பது சர்வசாதாரணம்.÷மேலும், வாடகை வீடுகளில் குடியிருக்கும் ஏழை எளிய மக்கள் கூடுதல் மின்சார கட்டணத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். மின் கட்டண உயர்வால் வீட்டு வாடகையும் உயரலாம்.  ÷தொழிற்சாலைகள், சிறு, குறுந் தொழில்கள், குடிசைத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் என எல்லா தரப்புக்கும் மின் கட்டண உயர்வால் கடும் பாதிப்பு ஏற்படும்.÷மின் கட்டண உயர்வால் அத்தியாவாசியப் பொருள்களின் விலையும் மேலும் உயரக் கூடும். இதன் விளைவாக, கூடுதலாக மின்சாரத்தை பயன்படுத்தாதவர்களையும் இந்த மின் கட்டண உயர்வு கடுமையாக பாதிக்கும்.÷ஏற்கெனவே, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மின் கட்டண உயர்வு அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ÷சாமானிய மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் சுமையை உடனடியாக நீக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ÷மின்சாரம் வராது; மின் கட்டண உயர்வுதான் வரும் என்பதை 4 ஆண்டு கால நடவடிக்கைகளின் மூலம் முதல்வர் கருணாநிதி நிரூபித்து உள்ளார்.÷இதை மாற்றி அமைக்கக்கூடிய காலம் நெருங்கிவிட்டது. அதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

கற்பனை என்று சொன்னது அன்று. உண்டு என்று சொல்வது இன்று. என்றாலும், தவறான புள்ளிவிவரங்களைக் கூறி மின்கட்டண உயர்வைச் சரியென வாதிடாமல் உடனே முதல்வர் திரும்பப் பெற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/3/2010 4:43:00 AM
கட்டுங்கள் தமிழர்களே கட்டுங்கள் !...ஆட்சியாளர்களின் குடும்பப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்க வரி உயர்வினைக் கட்டுங்கள் !!! @ rajasji
By rajasji
8/3/2010 4:36:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக