சனி, 23 ஜனவரி, 2010

தலையங்கம்:உரிமைக்கும் குரல் கொடுப்போமே...



இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் உள்ள உறவு என்பது மிக நீண்ட சரித்திரத்தை உள்ளடக்கியது. குறிப்பாக, ஆங்கிலேய ஆட்சிக்கு உள்பட்ட இந்தியப் பகுதியாகக்கூட மலேசியா மற்றும் பர்மா கருதப்பட்டது. இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே பர்மாவிலும், மலேசியாவிலும் குடியேறிய வரலாறு உண்டு.வணிகர்களாகச் சென்று பெரும் பொருள் ஈட்டியதுடன் மலேசியாவையே தங்களது தாயகமாகக் கொண்ட தமிழர்கள் பலர். மலேசிய ரப்பர் தோட்டங்களில் கூலி வேலைக்காக அங்கே குடியேறியவர்களும் லட்சக்கணக்கினர். இப்போதும்கூட மலேசிய நாட்டில் தமிழர்கள் கணிசமான பகுதியினராகத் தொடர்கிறார்கள்.இந்தச் சூழ்நிலையில் மலேசியாவின் பிரதமர் நஜீப் துன் ரசாக் அரசுப் பயணமாக இந்தியாவில் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தில்லியில் பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் அவரும், அவருடன் வந்திருக்கும் குழுவினர் அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தச் சுற்றுப்பயணம் பல பிரச்னைகளுக்கு விடை கூறுமானால், ஆசியக் கண்டத்தின் முக்கியத்துவத்துக்கு அது வழிகோலும் என்பதில் சந்தேகமில்லை.பத்து தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான "ஏசியன்' இந்தியா, சீனா மற்றும் ஜப்பானையும் உள்ளடக்கியோ இணைத்தோ செயல்படுமானால், உலகப் பொருளாதாரமும், ஆசியாக் கண்டத்தைச் சார்ந்ததாக இருக்கும் என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்திருக்கும் கருத்தை மறுக்க முடியாது. கூடவே அவர் இன்னொரு கருத்தையும் தெரிவித்திருக்கிறார். அதுதான் நம்மைச் சற்று சிந்திக்க வைக்கிறது.""அடுத்த 50 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறப்போவது சீனாதான்'' என்பதுதான் அது. இந்தக் கருத்து அமெரிக்காவையும் இந்தியாவையும் கோபப்படுத்திவிடக் கூடாது என்பதாலோ என்னவோ, இந்தியாவுக்கு உலக அரங்கில் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் மறுப்பதற்கில்லை என்றும் கூறியிருக்கிறார். சமீபகாலமாக, மலேசியா சீனாவுடன் மிக நெருக்கமான உறவு பாராட்டி வருவது குறிப்பிட வேண்டிய உண்மை.சீனாவுடனான மலேசிய நெருக்கத்தை நாம் நெருடல் என்று ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், பல பிரச்னைகளில் இந்தியாவும் மலேசியாவும் கைகோர்த்துச் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தை உணர முடிகிறது. வர்த்தகம், கல்வி உள்ளிட்ட பல பிரச்னைகளில் இந்தியாவும் மலேசியாவும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த ஆண்டு முடிவுக்குள் இருநாடுகளுக்கும் இடையேயான தடைகளற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பயங்கரவாதத் தடுப்பு மற்றும் குற்றவாளிகள் ஒப்படைப்பு போன்ற ஒப்பந்தங்களும், உயர்கல்வி மற்றும் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான பிரச்னைகளில் உடன்பாடுகளும் கையெழுத்தாகி இருக்கின்றன. இந்திய மலேசிய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும், வர்த்தக ரீதியிலான உறவை மேலும் அதிகரிக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. குறிப்பாக, மலாக்கா ஜலசந்தியின் பாதுகாப்பைப் பலப்படுத்த இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்கிற உடன்பாடும் பேச்சுவார்த்தை அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.மலேசியாவுடனான இந்திய உறவின் மிக முக்கியமான பங்கு வகிக்கும் ஒரு பிரச்னை, இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் பற்றியது. கணிசமாக மலேசிய இந்தியர்கள் வாழும் நாட்டில், இங்கிருந்து சுற்றுப்பயணிகள் என்கிற பெயரில் சென்று அங்கேயே சட்டவிரோதமாகத் தங்கிவிட்டிருக்கும் இந்தியர்களின் நிலைமை பற்றி மலேசிய அரசு முடிவெடுக்கத் தயங்குகிறது. இப்படித் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகம் என்கிறது மலேசியத் தரப்பு.இப்படித் தங்கி வருபவர்களில் கணிசமானவர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் மலேசியத் தரப்பு கூறுகிறது. இப்படி சட்டபூர்வமில்லாமல் தங்குபவர்களை மனதில் வைத்து இப்போதெல்லாம், மலேசியாவில் காலடி எடுத்து வைத்த பிறகு "நுழையுரிமை' (விசா) வழங்குவது என்கிற பழக்கம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.அங்கேயே தங்கிவிட்டவர்களை மலேசியப் பிரஜைகளாக்கி விடுவதிலோ அல்லது அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி வேலைபார்க்கும் உரிமம் (வர்க் பர்மிட்) வழங்குவதிலோ என்ன சிரமம் இருக்கும் என்பது புரியவில்லை. இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகரித்துவரும் நிலையில் இப்படி ஒரு பொதுமன்னிப்பு அளிப்பதால் மலேசிய நாட்டுக்கு எந்தவிதப் பிரச்னையும் தோன்றிவிட வாய்ப்பில்லை. லட்சக்கணக்கில் இந்தோனேசியர்கள் இதுபோல மலேசியாவில் குடியேறி இருக்கிறார்கள் என்பதும் அவர்களைப் பற்றிக் கவலைப்படாத மலேசிய அரசு இந்தியர்களைப் பற்றி மட்டும் ஏன் கவலைப்பட வேண்டும் என்பதும், இந்திய மலேசிய நட்புறவில் சந்தேகங்களைக் கிளப்புவது நியாயம்தானே?உகண்டாவில், பிஜி தீவில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டால் வீறுகொண்டு எழும் மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம், மலேசியாவில் அடையாளம் தெரியாமல் பல ஆண்டுகளாகத் தலைமறைவு வாழ்க்கை வாழும் இந்தியக் கூலித் தொழிலாளர்களின் அவலத்தைப் போக்கக் குரலெழுப்பவே இல்லையே, அதற்குக் காரணம் அவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் என்பதால்தான் என்று நாம் சந்தேகப்படாமல் இருப்போமாக!

ஐயப்படவில்லை எனத் தெரிவித்து உண்மையை மறைமுகமாக உணர்த்தியுள்ளது தினமணி. தமிழர்களுக்கு ஓர் அளவுகோலையும் பிறருக்கு மற்றோர் அளவு கோலையும் கொண்டு சிக்கல்களை அணுகுவதும் உதவி புரிவதுமே இந்திய அரசின் பண்பாடு. இவ்வுணர்வு தொலைந்தால்தான் இந்திய ஒருமைப்பாடு உண்மையில் சிறக்கும். மலேசியத் தலைமை யமைச்சர் வந்துள்ள தக்க நேரத்தில் தினமணி குரல் கொடுத்திருப்பினும் இது செவிடன் காதில் ஊதிய சங்கே! எனினும் தினமணி தன் பணியைத் தொடரட்டும்! வாழ்த்துகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/23/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக