திரி கோணமலை,ஜன.18: ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வமே திரிகோணமலைப் பகுதி தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை.அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் மகிந்த ராபட்ச தமிழர்களை வாழவைப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போதுகூட அப்பாவித் தமிழர்கள் பட்ட வேதனைகள் குறித்து அவர் கவலையேபடவில்லை. எனவே அவருக்கு வாக்களிப்பதால் தங்களுடைய நிலைமை மேம்படப் போவதில்லை என்பதில் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நிச்சயமாக இருக்கின்றனர்.அவரை எதிர்த்து எதிர்க் கட்சிகளால் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பொன் சேகாவும் தமிழர்களுக்கு சம உரிமைகளைத் தந்து வாழ்வில் ஒளியேற்றிவைப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. எல்லாவற்றையும் விட, தமிழர்களின் வாக்குகளை நம்பி இரு வேட்பாளர்களுமே இல்லை என்ற போது இந்தத் தேர்தலில் தங்களுடைய வாக்களிப்பு எதைச் சாதித்துவிடப் போகிறது என்ற விரக்தியே தமிழர்களிடம் மேலோங்கி நிற்கிறது.இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரியமான பகுதிகள், தமிழர்களுக்குத் தாயகம் என்று காலம்காலமாக தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனாலேயே சிங்களப் பேரினவாத அரசுகள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த போதெல்லாம் தமிழர் பகுதிகளில் சிங்களர்களை திட்டமிட்டு குடியேற்றி வந்தது. மகாவலி கங்கை என்று அழைக்கப்படும் வெலி ஓயா ஆற்றுப்பகுதி மேம்பாட்டுத் திட்டமே அதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது என்பது உலகறிந்த ரகசியம்.இப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்துவிட்டதால் தமிழர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் எலி வளைகூட இல்லாதபடிக்கு எல்லா இடமும் சிங்களர்களின் ஆதிக்கத்திலும் கண்காணிப்பிலும் கொண்டு வரப்பட்டுவிட்டது. இதற்காக புதிய புதிய தொழில் திட்டங்களுக்கு இலங்கை அரசு கொழும்பிலிருந்தே அனுமதி அளிக்கிறது. அதற்குத் தேவைப்படும் நிலங்களை அளிப்பது, திட்டங்களுக்கு ஒப்புதல் தருவது போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புகள் உடனுக்குடன் செய்து முடிக்கின்றன.உள்ளாட்சி அமைப்புகளில் தமிழர்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும், மத்திய அரசு கூறும் திட்டங்களை அனுமதிக்க மறுத்தால் கடுமையான பின் விளைவுகள் ஏற்படும் என்று உணர்ந்திருப்பதால் ரப்பர் ஸ்டாம்புகளாகவே செயல்படுகின்றனர். திரிகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் சேர்ந்து வசிக்கின்றனர். இந்த 3 இனங்களில் இப்போது தமிழர்கள் எண்ணிக்கை குறைந்தும் சிங்களர் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. சிங்களர்கள் தொழில் முனைவர்களாக, தொழிலாளிகளாக, அதிகாரிகளாக, அரசு ஊழியர்களாக, வியாபாரிகளாக, புதுவாழ்வு பெறக் குடியேறுபவர்களாக குடியமர்த்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் அரசு மூலமே பணம் விநியோகிக்கப்படுகிறது. எனவே புதிய இடமாயிற்றே என்று அவர்கள் குடியேறத் தயக்கமே காட்டுவதில்லை. தமிழர்கள் நிலைமை அப்படியில்லை.போருக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்ளும் சாக்கில் புதிய தொழில் முகவர்களும் தொழிலாளர்களும் குடியமர்த்தப்படுவதாக தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்ன சிங்கம் தெரிவிக்கிறார்.கிழக்கு மாகாணத்தைச் சேராத சிங்களர்களே தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகவும் சுற்றுலாத் தலங்களில் ஊழியர்களாகவும் பணியில் சேர்க்கப்படுகின்றனர் என்று கிழக்கு மாகாண நிர்வாகத்தில் உள்ள, பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி தெரிவிக்கிறார்.புதிய தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு கொழும்பிலிருந்தபடியே அனுமதி தருகிறது, இதர நிர்வாக நடைமுறைகளுக்கு உள்ளாட்சி மன்றங்கள் அச்சம் காரணமாகவே ஒப்புதல் தந்துவிடுகின்றன என்கிறார் துரை ரத்னசிங்கம்.அதி பர் தேர்தலை தமிழ் தேசிய கூட்டணி புறக்கணிக்கவில்லை. கிழக்குப் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுமே இந்தக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போதுள்ள அரசியல் கட்டமைப்புக்குள்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. தேர்தலைப் புறக்கணிப்பதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. இரு வேட்பாளர்களில் பொன்சேகாவை ஆதரிக்கிறோம்; ""தமிழர்களின் கோரிக்கைகளைக் கவனிக்கிறேன்'' என்றாவது அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார் என்கிறார் துரை ரத்னசிங்கம்.தேர்த லில் பங்கேற்கலாம், பொன் சேகாவை ஆதரிக்கலாம் என்ற தமிழர் விடுதலை கூட்டணி முடிவை வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லை.தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறும் உரிமையே இந்தக் கூட்டணிக்குக் கிடையாது; போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் துயரில் ஆழ்ந்துகிடந்தபோது அவர்களுடைய மறுவாழ்வுக்கென கூட்டணி எம்.பி.க்கள் எதையும் செய்யவில்லை, அகதிகளாக நாங்கள் அடைக்கப்பட்டிருந்த முகாம்களுக்குக் கூட வரவில்லை என்கிறார் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரியும் கோணேஸ்வரன்.கோணேஸ்வர னின் உறவினர்கள் முத்தூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். போருக்குப்பிறகு இலங்கை அரசு அவர்களை அந்த ஊரில் மீண்டும் குடியேற அனுமதிக்கவில்லை. அதே நிலைமைதான் சம்பூரைச் சேர்ந்தவர்களுக்கும். அவர்கள் தங்களுடைய ஊருக்கு இனி திரும்ப முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அந்தப் பகுதி மிகுந்த உயர் பாதுகாப்பு தேவைப்படும் ராணுவப் பகுதியாக 2007-ல் அறிவிக்கப்பட்டுவிட்டது.எங்களுடைய தொகுதிகளில் உள்ள தமிழ் அகதிகள் முகாம்களுக்குக்கூட நாங்கள் செல்லக்கூடாது என்று அதிபர் மகிந்த ராபட்ச தடுத்துவிட்டார், இந்த நிலையில் தமிழர்கள் எங்களைக் குறை கூறுவதில் அர்த்தமே இல்லை என்று வருத்தப்பட்டார் துரை ரத்னசிங்கம்.திரிகோணமலையில் அற்புதமான துறைமுகம் இருக்கிறது, கடற்படை தளம் இருக்கிறது. இந்திய எண்ணெய் நிறுவனத்தின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு இருக்கிறது. கிழக்குப் பகுதி முழுவதற்குமே ரொட்டி சப்ளை செய்யும் ஆலை இருக்கிறது. ஆனால் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிலும் குறிப்பாகத் தமிழ் இளைஞர்களுக்கு வேலையே இல்லை. அத்தியாவசியப் பண்டங்களின் விலையோ பணக்காரர்கள்கூட எண்ணிச் செலவழிக்கும் நிலையில் இருக்கிறது.திரிகோணமலையில் உள்ள பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தும் அரசு தரும் சம்பளத்தில் குடித்தனம் நடத்த முடியாமல் திணறுகின்றனர். எனவே பொன்சேகாவை ஆதரிக்க அவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். கிராமப்புறங்களில் சிங்களர்களின் ஆதரவு ராபட்சவுக்குத்தான். தமயந்தி என்ற சிங்களப் பெண்ணின் குடும்பத்தார் திரிகோணமலையை விட்டு உயிரைக் காத்துக்கொள்ள 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடினர். அவர்கள் இப்போது போருக்குப் பிறகு மீண்டும் ஊர் திரும்பியுள்ளனர். அவர்கள் தங்களுடைய வாக்குகள் ராபட்சவுக்குத்தான் என்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக