கருணாநிதியின்” இடத்தில் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இந்திய அரசு உதவி செய்திருக்காது – கவிஞர் புலமைப்பித்தனின் செவ்வி
[2 ஆம் இணைப்பு] தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மாபெரும் உதவிகளை செய்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளன்று மீனகம் வலைத்தளத்துடன் கவிஞர் புலமைப்பித்தன் பகிர்ந்து கொண்ட நினைவலைகள்.
மீனகம்: இன்று எமது தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மானமார்ந்த ஆதரவைத் தந்து எமக்காக தன்னை அர்ப்பணித்த ஏழைகளின் நண்பன் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள். இத் திருநாளில் அவருடன் ஒன்றாக இருந்த உங்களுடன் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
உங்களுக்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் இடையிலான உறவு பற்றி எங்களுக்கு கூறுவீர்களா?
புலமைப்பித்தன்: புரட்சித்தலைவர் என்று எல்லாராலும் அழைக்கப்படுகிற நம்முடிய ஈழவிடுதலைக்கு மிகவும் பங்காற்றிய அண்ணன் எம்ஜிஆர் அவர்களுடன் 22 ஆண்டுகள் நான் ஒன்றாக வாழ்ந்தவன். 1966 ஆம் ஆண்டில் அவர் நடித்த “குடியிருந்த கோயில்” படத்திற்கு “நான் யார்” என்ற பாடல் மூலமாக நான் அவரோடு நெருங்கிப் பழகிற வாய்ப்பு பெற்று பின்னர் கட்சி ஆரம்பிக்கும் போது அவருக்கு பக்கத்தில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனப்பெயரிட்டு அந்த கட்சி வளர்ந்த பின்னர் அதில் பல பதவிகளை வகித்திருக்கிறேன். அவருக்காக பெருமளவு பாடல்களை எழுதியதுடன் அவரது முயற்சிகளிற்கு தோளோடு தோள் நின்றவன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.
அந்த் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இன்று இல்லாமல் போனது என்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எவ்வளவு பெரிய பேரிழப்பு என்பதை என் தம்பிமார்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். மனித நேயத்தினுடைய மிக உயர்ந்த உன்னதத்தைப் பெற்றவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
அவர் இங்குள்ள தமிழ் மக்களிற்கு மட்டுமல்லாது ஈழமக்களிற்கு பெரும் ஆதரவாக இருந்து என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கின்றேன் என்று எல்லாவிதமான உதவிகளையும் செய்தார் என்பதை நான் நேராக இருந்து பார்த்தவன். நம்முடைய தேசியத் தலைவர் தம்பி அவர்களோடு ஏற்பட்ட உறவு அந்த உறவு ஏற்பட்டதற்கு காரணம் நான் தான் என்று சொல்வதிலே தமிழனாக மனிதனாக பிறந்ததிலே மகிழ்ச்சியடைகிறேன். அப்படிப்பட்ட தம்பிக்கு உறுதுணையாக நின்று என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்தார் என்பதை உலக மக்களிற்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுக்க தன்னுடைய தமிழ்மக்களுக்காக செயற்பட்டார். 5ஆம் உலகத் தமிழ் மாநாட்டை மதுரையிலே ஆரம்பித்தார். தமிழ் பல்கலைக்கழகத்தை தஞ்சையிலே நிறுவினார் இப்படி மொழிக்காக மட்டுமல்லா உலகில் இருக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறையுடன் இருந்தார்.
ஒருமுறை தமிழீழத்தேசிய தலைவர் உலகத்தமிழர்களின் தலைவராக இருக்கின்ற தம்பியிடத்திலே கேட்டார் “ஆயுதம் புரட்சியின் மூலமாகவே தமிழீழத்தை வென்றெடுக்கின்றதானால் எவ்வளவு செலவாகும்” என்று. கொஞ்சநேரம் யோசித்துவிட்டு தம்பி சொன்னா ” ஒரு100 கோடி” என்று. அப்போது எம்ஜிஆர் சரி பார்ப்பம் என்று சொன்னார். அப்படி சொன்னதன் மூலம் அதை கொடுப்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்பதை நேரில் இருந்து பார்த்தவன் என்ற ரீதியில் நான் சொல்கிறேன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இன்று இருந்திருந்தால் இல்லாததைப்பற்றி சிந்திக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் இருந்தால் என்பதை கற்பனை செய்து ஒரு ஆசைக்காகவாவது எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் எமக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் ஒரு லட்சம் எமது மக்கள் கதற கதற கொலை செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்திருக்காது என்பதிலே நான் முழுமையான நம்பிக்கையில் இருக்கிறேன்.
காலம் ஒரு மனிதனை படித்து கொண்டதனாலே, காலம் இங்கிருக்கின்ற 7 கோடி தமிழர்கள் இருந்தும், அந்த ஒருவன் இல்லாததால் 7 கோடி தமிழர்கள் இருந்தும் தமிழீழத்திலே இந்த மாபெரும் இனப்படுகொலையை நான் இரண்டு ஆண்டுகளிற்கு முதல் ஒரு பாட்டெழுதினேன் ” எங்குமுள்ள வானத்திலே மேகம் மழை பொழியும். எங்களது வானத்திலே குண்டு மழை பொழியும் இது என்று விடியும் இது என்று முடியும் ஈழ மண்ணில் இன்னும் எத்தனை நாள் இரத்த வெள்ளம் வடியும்” என்று.
அப்படி இன்று ஏற்பட்டிருக்கின்ற துயரங்கள், வேதனைகள் அவ்வாறு இத்தனைக்கும் காரணமாக இருந்த மனிதநேயமில்லாமல், ஈவிரக்கமில்லாமல் நாலைந்து நாடுகள் ஒன்றாக இருந்து ஒரு மாபெரும் இனப்படுகொலைக்கு துணைபோயிருக்கும் கொடுமை நிகழ்ந்த போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புரட்சித்தலைவராக இருந்திருந்தால், அப்படி உதவி செய்வதற்கு இந்தியாவிலே ஒரு அரசாங்கமே இல்லாமல் போயிருந்திருக்கும் என்பதிலே எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
என்னை அவர் விட்டு விட்டதாலே நான் அனாதையாக போனேனோ என்று சஞ்சலப்படுவதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு என்னுடைய தலைவன் எம்ஜிஆர் இருந்திருந்தால் என்னுடைய தொப்புள்கொடி உறவுகொண்ட என்னுடைய தாய் தந்தையர்கள் என்னுடைய பிள்ளைகள் துடிக்கத்துடிக்க கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதை நினைக்கிற போது எம்ஜிஆர் அவர்கள் இல்லையே இல்லையே என்ற ஏக்கம் நெஞ்சை அடித்துக் கொண்டிருக்கிறது. அவரினுடைய பிறந்தநாளில் கூட நான் அதைத் தான் நினைக்க வேண்டியதாய் இருக்கின்றது.
அவர் மாபெரும் தலைவர், வந்தவருக்கெல்லாம் வாரி வாரிக்கொடுத்தவர். கேட்காதவருக்கு கூட ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்றார்கள் ஆனால், அவருடைய வீட்டை தட்டவேண்டிய அவசியமே இருந்ததில்லை. கேட்கவேண்டிய அவசியமும் இருந்ததில்லை. கேட்காமல் திறந்த கதவு இராமாபுரம் தோட்டத்து எம்ஜிஆர் தோட்ட வீட்டுக்கதவு. கேட்காமல் கொடுத்த கரம் எம்ஜிஆர் கரம் என்பதையெல்லாம் நான் இந்த நாளிலே நினைத்துப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். என் உயிரினும் மேலான ஈழத்தமிழ் மக்களிற்கு நான் தெரிவித்துக் கொள்வது நான் இரண்டு பெயர்களைப் பெற்றேன். ஒன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் நண்பனாக அவருக்கு தம்பியாக அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்கின்றவனாக அவருடைய கொள்கைகளிற்கான பாடலை திருத்தி தருகின்றவனாக இருந்ததை ஒரு பெருமையாக கருதுகிறேன்.
அதேபோல, எனது சொந்த தம்பியாகவே நான் கருதி வையத்து மாவீரன் தம்பியாக பெற்றிருந்ததைக் கருதுகிறேன். இரண்டு பேரும் என்னுடைய வாழ்க்கையிலே பங்கெடுத்தவர்கள் என்ற முறையிலே மகிழ்ச்சியடைகிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நினைக்கிற பொழுது தம்பியை நினைக்காது இருக்கமுடியாது. தம்பியை அவர் எவ்வாறு நேசித்தார் என்பதை நான் நன்றாக அறிவேன். அவர் ஒருமுறை சொன்னார் “உலகத்திலே தமிழர்களினுடைய வரலாற்றை படித்தவர்களெல்லாம் சொல்கிறார்கள். சங்ககாலத்திலிருந்து நான் சொல்கிறேன் தம்பியைப்போன்ற ஒரு தலைவனை வீரனை தமிழ் சமுதாயம் கண்டிருக்காது என்பதை தான் நான் புரட்சித்தலைவருடைய பிறந்தநாளில் அவர் மனந்திறந்து தமிழர் தேசியத் தலைவரை எப்படி பாராட்டினார் பார்த்தார் என்பதை சொல்ல விரும்புகிறேன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் இருந்த 22 ஆண்டு காலம் நினைத்துப் பார்க்கிற போது ஒரு கணவனை காதலித்து திருமணம் செய்து அண்டில் பறவைகள் போல கணவனும் மனைவியுமாக வாழ்ந்து விட்டு கணவனை இழந்து விதவையாக இருக்கின்றவள் எப்படி வேதனைப்படுவாளோ அதைப்போன்ற வேதனையை நான் அடைகிறேன். பாரிக்கு கபிலன் இருந்ததைப்போல பறங்கிமலைப்பாரி புரட்சித்தலைவன் எம்ஜிஆருக்கு கபிரனாக நான் இருந்திருக்கிறேன். என்னை யாரென்று தெரியாத உலகிற்கு என்னை அறிமுகப்படுத்தினார். என்னுடைய தமிழிற்கு பெருமை சேர்த்தார். அப்படி எல்லாவற்றையும் வழங்கிய ஒருவர் என்னைவிட்டுப் போய்விட்டார் என்கிற அழியாத துயரத்தை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன்.
மீனகம்: புரட்சித்தலைவர் இருந்திருந்தால் தமிழீழத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருப்பார் என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள்? அது வந்து இந்தியாவின் பார்வையில் எவ்வாறன மாற்றத்தை கொண்டு வந்திருப்பார்?
புலமைப்பித்தன்: தமிழ்நாட்டிலிருந்த அரசு, 2007 – 2008 வரை இலங்கைக்கு இந்தியா என்ன என்ன உதவிகள் செய்யவேண்டுமோ எல்லாவற்றையும் செய்தது. நமக்காகச் சென்ற 10 ஆயிரம் தொன் ஆயுதங்கள் பல்வேறுபட்ட ஆயுதத்தளபாடங்கள் மூன்று போர்விமானங்களிற்குரிய உதிரிப்பாகங்கள் ரேடார் போன்றவற்றை இந்தியாவின் கடற்படைதான் கண்டுபிடித்து இலங்கைக் கடற்படைக்கு சொன்னது. இரண்டு கடற்படையும் சேர்ந்து தான் அவ்வளவு எடையுள்ள ஆயுதங்களை தகர்த்தது.
இலங்கையின் வெற்றியில்லை தற்போது பெற்றிருக்கின்ற வெற்றி. அது ஒரு ஐந்து ஆறு நாடுகள் கூட்டாகச் சேர்ந்து நிகழ்ந்து போன நிகழ்வே தவிர அது வேற என்னவென்று என்னால் கருத முடியவில்லை. அதில் முக்கியமாக பங்கெடுத்துக்கொண்டது இந்தியா தான். இந்தியாவிலிருக்கிற ஆட்சியைத் தாங்கிப் பிடித்தது தமிழ்நாட்டு ஆட்சி. தமிழ்நாட்டு அரசு போன 2008 ஆம் ஆண்டு இன்றைக்கு முதலமைச்சராக இருக்கின்ற கருணாநிதி அவர்கள் சொல்லியபடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியிருப்பார்களானால் டெல்லியிலே இருக்கின்ற மத்தியரசு கவிழ்ந்து போயிருக்கும். அப்படி கவிழ்ந்து போயிருந்தால் அப்படி காப்பந்தாக இருக்கின்ற ஒரு அரசாங்கம் தானே முன்னின்று யுத்தத்தை நடத்துகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்க முடியாது.
அதனாலே இந்த கருணாநிதி அவர்கள் தன்னுடைய ஆட்சியை காப்பாற்றுவதற்காக இந்தியரசை தாங்கிப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியரசு கவிழாமல் இருந்த் காரணத்தினாலே மாபெரும் உதவியைச் செய்து பல்லாயிரம் கோடி பணத்தைக்கொடுத்து ரேடார் கொடுத்து என்னென்ன உதவிகள் செய்யவேண்டுமோ அத்தனையையும் கொடுத்து தமிழீழ மக்களை கொண்று குவிப்பதற்கு பெரும் காரணமாக இருந்தது. கருணாநிதி இருந்த இடத்திலே புரட்சித்தலைவர் இருந்திருந்தால் மத்தியரசு கவிழ்ந்து போயிருக்கும். அப்படி கவிழ்ந்து போயிருந்தால் ஈழத்தமிழர்கள் ஒரு லட்சம் பேர் கொல்லப்படுகின்ற அவலம் நடந்திருக்காது. இதில் என்ன பெரிய பின்னடைவு தமிழ்நாட்டில் ஏற்பட்டது என்று கேட்டால், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி தன்னுடைய ஆட்சியை பாதுகாப்பதற்காக இந்தியரசுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். இந்தியரசு யாருடைய ஆதரவில் இருந்தது என்றால் தமிழ்நாட்டின் ஆதரவில். இந்தியரசு எப்படிப் பட்ட அரசு என்றால் தமிழீழ மக்களை முழுவதுமாக ஒழிக்கின்ற தாக்கியழிக்கின்ற அரசாக இருந்தது. அந்த தாக்கியழிக்கின்ற அரசுக்கு முட்டுக்கொடுத்து தாங்கிப்பிடிக்கின்ற வேலையை செய்தவர் கருணாநிதி தான். புரட்சித்தலைவர் இருந்திருந்தால் இவ்வாறான ஒரு ஆதரவை கொடுத்திருக்கமாட்டார். இந்தியரசு உதவி செய்யாவிட்டால் இலங்கையரசு நம்முடைய விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டிருக்க முடியாது. இவ்வளவு பின்னடைவு ஏற்பட்டிருக்க மாட்டாது. ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.
மீனகம் : நீங்கள் சொல்லியிருந்தீர்கள் இந்தியரசு ஆதரவு தந்ததால் தான் சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டது என்று. அதற்கு கருணாநிதி உதவியதால் தான் மத்தியரசை காப்பாற்ற முடிந்தது என்றும் சொல்லியிருந்தீர்கள். புரட்சித்தலைவருக்கு தமிழீழ விடுதலை போராட்டத்தின் மீது இருந்த நெருக்கம் கருணாநிதி்க்கு இல்லாமல் போனதற்கான காரணம் என்ன?
புலமைப்பித்தன்: அது அவருக்கு எந்த கொள்கையிலும் ஈடுபாடு இல்லை. அவர் தன்னைப் பற்றி வலைப்படுவாரே தவிர மக்களைப் பற்றி கவலைப்படுகிறவர் இல்லை. தன்னலம் அவரது குறிக்கோள்.
மீனகம்: புரட்சித்தலைவர் இருந்த காலத்தில் அதிமுக வழங்கிய ஆதரவுக்கும் எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னர் ஜெயலலிதா தலமையிலான அதிமுக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய எதிர்ப்புணர்விற்கும் என்ன காரணம்?
புதுமைப்பித்தன்: ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் ஆரம்பகாலத்தில் அதாவது எம்ஜிஆர் இருக்கிறபோது ஓரளவு ஆதரவாக இருந்தார். 1990 ஆம் ஆண்டு வரை ஆதரவாக இருந்ததை நான் அறிவேன். ஒரு முறை ஜானி அவர்கள் என்னை வந்து பார்த்து லண்டனில் நடக்கின்ற விடுதலை மாநாட்டிற்கு தலைவர் அவர்கள் உன்னை அழைத்து வர சொல்லியிருக்கிறார் என்று வந்து என்னிடம் சொன்னார். அதை நான் ஜெயலலிதாவிடம் சொன்னேன். ஜானி என்னையும் பார்த்தார் வேண்டுமானால் நீங்கள் போய்விட்டு வாருங்கள் என்று சொன்னார். அப்போது விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக இருந்தவர் தான் ஜெயலலிதா. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக அவர் மாறிபோயிருக்கிறார். இதில் உண்மையை சொல்ல போனால் அவர் நமக்கு எதிராகவே மாறுகின்ற சூழ்நிலையை உருவாக்கி கொண்டார். எம்ஜிஆரினுடைய கொள்கையை அவர் தொடர்ந்து ஆதரிக்காமல் இருக்கலாம். எம்ஜிஆரினுடைய கொள்கை அண்ணா திராவிட கழகத்தின் கொள்கை ஈழவிடுதலையை ஆதரிப்பது என்று தான். ஈழவிடுதலையை ஆதரிக்காதவர்கள் கட்சியிலோ எம்ஜிஆரிற்கு வேண்டியவர்கள் என்றோ மதிக்கப்படவில்லை என்பது என்னுடைய கருத்து.
மீனகம்: இந்திராகாந்தி மற்றும் எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் இந்திய மத்தியரசு தமிழ் இனத்தை மாற்றந்தாய் போல நடத்துவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது இது உண்மையா?
புலமைப்பித்தன்: இந்திராகாந்தி இருக்கிற போது நமக்கு அனுசரணையாக இருந்தார். ஆனாலும் அவருக்கு கூட ஈழம் கிடைப்பதில் உடன்பாடு இல்லாமல் இருந்தது. அதை ஒரு நிகழ்ச்சி மூலம் உங்களிற்கு தெளிவு படுத்த வேண்டும். தம்பி பிரபாகரன் தம்முடைய ராகவன் போன்றவர்கள் இங்கு பிணைக்கைதிகளாக இருந்தார்கள். அதேபோல புளொட் இயக்கத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரன், சிவனேசன் மற்றும் யோதீஸ்வரன் மூன்று பேரும் இங்கே பிணையில் இருந்தார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டால் வழக்கு இருக்கிறவரை அவர்கள் இங்கு தங்கியிருக்க அனுமதிக்கப் படுவார்கள். வழக்கு முடிந்த பிறகு தங்கியிருந்தால் அவர்களை நாடுகடத்த வேண்டும். கொழும்புக்கு அனுப்ப வேண்டும். கொழும்புக்கு அனுப்பினால் அங்கு என்ன விபரீதம் நடக்கும் என்றதால், வழக்கு முடிந்தாலும் அவர்கள் இங்கேயே தங்கவைக்கப்படவேண்டும் என நான் அப்போது சட்டமன்ற துணைமேஜராக இருந்த காரணத்தினாலே பல்வேறு தரப்பினரின் தகவல்களைப் பார்த்து அதன் படி பரிந்துரை செய்யும்படி கேட்டிருந்தேன். அப்போது மறைந்துபோன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த கல்யாணிசுந்தரத்திடம் இந்த கோரிக்கையை நான் சொன்னேன். அப்போது அவர் சொன்னார் நான் பிரதமரை பார்க்கிறேன். ஈழவிடுதலையிலே எங்களிற்கு ஆதரவு இல்லை. ஈழவிடுதலையில் ஆதரவு தருவதாக நாங்கள் இல்லை. ஆனால், அந்த பிள்ளைகளை கொழும்புக்கு அனுப்ப முடியாமல் செய்ய இருப்பதை என்னால் வலியுறுத்தி சொல்ல முடியும் அந்த உரிமையும் கடமையும் எனக்கிருக்கிறது என்று சொல்லிவிட்டு இந்திராகாந்தியை சந்தித்து அவர் பேசினார்.
பேசுகிறபோது, அவர் நேரடியாக தமிழ்நாட்டிற்கு வந்து எனக்கு சொன்னார், இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் சொன்னது “i can not support tamileelam and in the same time i want sent the boys to colombo” பின்னர் வேறு ஒரு செய்தியும் சொன்னார் எப்படி வங்கதேச விடுதலையை வாங்கி கொடுத்தோமோ அப்படி ஈழவிடுதலையையும் வாங்கி கொடுத்துவிடலாம். நாமே அதற்கு ஆதரவாக இருந்து ஈழவிடுதலையை செய்துவிடலாம். ஆனால், அதனுடைய தாக்கம் இந்தியாவினுடைய தமிழகத்திற்கும் வந்துவிடும் என்கின்ற அச்சம் தான் எனக்கும் இருக்கிறது. ஏற்கனவே, திராவிட நாடு திராவிடருக்கே என்ற பிரிவினைவாதம் தமிழ்நாட்டிலே இருந்திருக்கிறது. ஈழம் விடுதலை பெற்றால் அதனுடைய தாக்கம் தமிழகத்திற்கும் வந்துவிடும் என நான் அஞ்சுகிறேன் எனவே தான் நான் தமிழீழ விடுதலையை ஆதரிக்க மாட்டேன்.
ராஜீவ் காந்தி அளவிற்கு நேர் எதிராக சென்றிருக்க மாட்டார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒருமுறை சொன்னார் இலங்கையிலே சிங்களவருக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதைவிட அதிகமாகவே தமிழருக்கு உரிமை இருக்கிறது என ஒரு கட்டத்தில் இந்திராகாந்தி சொன்னார். எனவே, இந்திராகாந்தி இல்லாமல் போனது மோசமான பின்விளைவுக்கு காரணமாக போனதை நான் இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.
இந்திராகாந்தியினுடைய பார்வையிலிருந்து ராஜீவ்காந்தியின் பார்வை மாறிப்போனது தான் இன்றைய எல்லாவிதமான மோசமான விளைவுகளுக்கும் காரணம் என்பதை நான் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
மீனகம்: எமது தேசிய தலைவரை டெல்லியில் வலுகட்டாயமாக உடன்படிக்கையை ஒப்புக்கொள்ள முயற்சித்து பின்னர் புரட்சித்தலைவர் அவர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தேசிய தலைவரின் அபிலாசைகளை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக புரட்சித்தலைவர் இருந்தார் என்று செய்திகளில் படித்துள்ளோம். அங்கு நடந்தவற்றை விளக்கமாக கூறமுடியுமா?
புதுமைப்பித்தன்: அடிப்படையிலே புரட்சித்தலைவர் தமிழீழத்தை ஆதரித்தார். முழுமையாக தமிழீழம் விடுதலை பெறவேண்டும் என்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார் நம்பிக்கை வைத்திருந்தார். அதனாலே தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிறவர் அவ்வாறு எல்லாம் செய்யமுடியாது என்பதைவிட்டு அதையெல்லாம் தாண்டி நாலு கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை விடுதலைப்புலிகளிற்காக கொடுத்தார். அதனையடுத்து தனது சொந்தப்பணத்தையும் தம்பியை அழைத்து எல்லாவிதமான உதவிகளையும் அறிந்து செய்தார். அவர் என்ன நினைத்தார் என்றால், ஈழத்தமிழர்களிற்கு விடுதலையைத் தவிர வேறுவழியில்லை என்பதை அப்போதே அவர் புரிந்துகொண்டிருந்தார். 1956 ஆம் ஆண்டிலிருந்து ஈழத்தமிழர்கள் எவ்வாறான கொடுமைகளிற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டதனாலே தமிழீழ விடுதலையைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்பதில் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அது மாத்திரமல்லாமல் வெவ்வேறு அணிகளைக்கூட அழைத்து நீங்கள் ஒன்றாக இருந்து விடுதலைப்போரில் ஈடுபடவேண்டும் என்று வற்புறுத்தியதைக்கூட நான் கூட இருந்து பார்த்திருக்கிறேன். அந்த அடிப்படையில் அவர் நம்பிய ஒரேயொரு இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம். இந்த இயக்கம் மட்டும் தான் இந்த இயக்கத்தின் தலைவர் மட்டும் தான் உறுதியோடு இலட்சியத்திற்காக போராடுவார் என்பதில் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அதன் விளைவாலே தான் அந்தளவிற்கு உதவியைச் செய்தார்.
இங்கு பல நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு தமிழீழவிடுதலைக்கு ஆதரவு வழங்கினாரென்றால் அதற்கு காரணம் அவர் தமிழீழவிடுதலை மேல் வைத்திருந்த அக்கறை தான் காரணம்.
மீனகம்: புரட்சித்தலைவர் ஈழத்தின் மீது மிகவும் அன்பு கொண்டவர். நீங்கள் அவருடன் எப்பொழுதும் இருந்தவர் என்ற ரீதியிலே அண்டிய காலப்பகுதியில் நடந்தவற்றை பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா?
புலமைப்பித்தன்: தொடக்கத்தில் அவர் பொதுவாக தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஒரு சுதந்திர மனதோடு இருக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டிருந்தார். நீங்கள் அவருடைய படங்களைப் பார்க்கின்ற வேளை கூட தெரியும், மனிதர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதை அவர் எல்லாக்காலகட்டத்திலும் எதிர்த்து வந்தவர்.
அதற்கு காரணம் அந்த சுதந்திரம் விடுதலை என்பது அவருடைய உள்ளத்திலே உதிரத்திலே ஊறிப்போன ஒன்றாக இருந்தது. தமிழீழ விடுதலை பற்றிய பேச்சு வருகிற போது 1980 ஆம் ஆண்டுகளிற்கு பின்னாலே நம்முடைய போராளிகள் தமிழ்நாட்டிற்கு வந்த பின்னால் ஒரு சில செய்திகள் நெருக்கடியாக அவர் தெரிந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி அவசியம் ஏற்பட்டதனாலே அவர் ஆட்சியில் இருக்கிறபோது அது பற்றிய பல்வேறு கருத்துக்களையும் அவர் தெரிந்து கொண்டார். அதற்கு பின்னாலே தான் தமிழீழம் விடுதலை பெறுவதைத்தவிர வேற வழியில்லை என்பதை தெரிந்து கொண்டு தமிழீழம் விடுதலைக்கு என்னென்ன வழி என்பதை பார்க்கின்ற போது ஒருமுறை தொடர்ந்து நான் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக இருந்தேன்.
தம்பி அவர்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிற போதெல்லாம் எங்களின் வீட்டில் தங்குவார் எங்களுடன் தான் இருப்பார் என்ற வகையில் நான் சட்டமன்ற மேலவை துணைத்தலைவராக ஒரு அமைச்சரவைக்குள்ள அந்தஸ்துள்ள பதவியிலிருந்த போது எங்களுக்குள்ளே பல மாறுபட்ட கருத்துக்கள் எனக்கும் அவருக்கும் ஏற்பட்டது. அவர் ஆட்சிப்பொறுப்பில் இருந்ததாலே ஒரு விடுதலை அமைப்பிற்கு நேரடியாக ஆதரவு தரமுடியாத இக்கட்டான சூழ்நிலை இருந்தது. ஆனால், அவருடைய ஆட்சியிலே அரசாங்கத்தில் பெரிய பொறுப்பில் இருந்த நான் நேரடியாக விடுதலைப்புலிகளிற்கு ஆதரவு தருவது என்பது அவருக்கு சங்கடமாக இருந்தது. அப்படி வருகின்றபோது எங்களிற்குள்ளே கருத்து பரிமாற்றங்கள் ஏற்பட்டன. பல நேரங்களில் என்னை கண்டிக்கிற அளவிற்கு கூட இருந்தார். ஆனால், பிறகு ஒரு சமயத்தில் ஜெயவர்த்தன அந்த நேரத்தில் தான் 1983 ஆன் ஆண்டு ஏப்ரல் மாத வாக்கிலே டில்லிக்கு வருவதாக இருந்தது. அப்போது இரவு 12மணிக்கு எம்ஜிஆர் அவர்கள் தொடர்பு கொண்டு விடுதலைப்புலிகள் பற்றிய ஒருசில செய்திகளை என்னோடு பேசினார். அப்போது எங்கள் இரண்டு பேருக்கும் கருத்து மோதல்கள் மிக அதிகமாக ஏற்பட்டு போயிருந்தன. அதனை சமாளிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது அவர் என்னைக்கேட்டது விடுதலைப்புலிகளிற்கு என்னைக்காட்டிலும் கருணாநிதி அவர்கள் உதவி செய்துவிட்டாரா? உங்களுக்கு ஏன் என் மீது கோபம் என்று கேட்டார். நான் சொன்னேன் அவரும் செய்யவில்லை. நீங்களும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் இருக்கின்ற யாரும் உதவி செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை என்றேன். என்னைச் சமாதானப்படுத்துவதற்காக அந்த நள்ளிரவிலே எனக்கு சொன்னார் நான் விடுதலைப்புலிகளிற்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்வேன். தமிழீழம் விடுதலை பெறுவதற்கு அது விடுதலைப்புலிகளால் மட்டும் தான் சாத்தியமாகும்.
ஜெயவர்த்தனா டெல்லிக்கு வருகிறார். வந்துவிட்டு போன பின்னாடி நான் தங்களை சந்திக்க விரும்புகிறேன் என்றார். பிறகு கொஞ்ச நாள் கழித்து தம்பியை அழைத்து அவர் நேரடியாக பேசினார். பேசிய பின்னர் தம்பி மீதிருந்த நம்பிக்கை இந்த மனிதரை நம்பலாம் இவனை நம்பி ஒரு இலட்சியத்தை நிறைவேற்றலாம் என்ற நம்பிக்கை வந்த பின்னாலே தான் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று உள்ளத்திலே அந்த ஆதரவு நிலை உருவாகி உண்மையைச் சொல்லப்போனால் என்னைக்காட்டிலும் தீவிரமாக ஆதரிக்க ஆரம்பித்தார்.
எத்தனையோ குறுக்கீடுகள் இருந்த போதுகூட அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஒன்றை நினைவு படுத்த வேண்டும். 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை என்கிற பெயரில் தமிழீழத்திற்குள்ளே இந்தியப்படையை ராஜீவ்காந்தி அனுப்பியதை அவர் மனமாற ஒப்புக் கொள்ளவில்லை. மனமாற எதிர்த்தார். அன்றிருந்த சூழல் காரணமாக அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த ஒப்பந்தத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் முதலமைச்சர் பதவியை யாருக்காவது கொடுத்துவிட்டு நீங்கள் விலகிவிடுங்கள் என்று ராஜீவ் காந்தி புரட்சித்தலைவருக்கு கூறினார்.
நான் உங்களிற்கு ஒன்றை நினைவு படுத்த வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பிலே கையெழுத்தானது. ஆகஸ்டு 2 ஆம் திகதி அந்த ஒப்பந்ததைப் பாராட்டி தமிழ்நாட்டின் சென்னையிலே ஒரு பாராட்டு விழா ஏற்பாடானது. அந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்ள எம்ஜிஆர் அவர்களிற்கு விருப்பமில்லை. எனவே பாவலர் நெடுஞ்செழியன் அவர்களை கலந்து கொள்ள சொல்லிவிட்டு 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி ஆகஸ்டு 2 ஆம் திகதி வரும் முன்னரே அமெரிக்காவிற்கு கிளம்பினார். மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கிளம்பினார்.
அப்படி கிளம்பியபோது போகக்கூடாது என டெல்லியிலிருந்து உத்தரவு வந்தது. தடுத்து நிறுத்தினார்கள். என்ன காரணம் என்று கேட்டால் பின்னாலே ஏற்படபோகும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இடம்பெறப்போகும் நிகழ்வுகளை அனுமானித்தோ என்னவோ எம்ஜிஆரையும் அதிலே பங்கு பற்றுவதாக ஆக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்க போகக்கூடாது என உத்தரவு வந்தது. அதற்கு பின்னாலே அவர் போக முடியவில்லை. பின்னர் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நடந்த நிகழ்வில் எம்ஜிஆர் வற்புறுத்தி கலந்து கொள்ள வைக்கப்பட்டார். அந்த படத்தை பார்த்தால் தெரியும் தூக்க முடியாமல் இருந்த எம்ஜிஆர் கையை பலவந்தமாக ராஜீவ் தூக்கிப்பிடிப்பார். அதன் பின் 5 ஆம் திகதி தான் அவர் அமெரிக்காவிற்கு புறப்பட்டு போனார். என்னிடத்திலே 5 ஆம் திகதி காலை நெருக்கடியைச் சொல்லி என்னை மிகவும் நெருக்குகிறார்கள் என்று சொல்லி என்னுடைய தோளில் சாய்ந்து அழுதார்.
எனவே, எம்ஜிஆரைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைக்கு தன்னால் ஆன அத்தனை உதவிகளையும் செய்தார் என்பது மாத்திரமல்ல இந்தியாவினுடைய வெளியுறவுத்துறையின் கொள்கையிருக்கிறதே அது ஈழத்திற்கு எதிராக இருந்தால் ஆதரிக்க கூடாது என்பதிலும் அவர் அழுத்தமாக இருந்தார் என்பதை உங்களுக்கு தெரிவிப்பது என்னுடைய கடமை.
மீனகம்: எம்ஜிஆர் அவர்களுடைய மறைவு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா நீங்கள் கருதுகிறீர்களா?
புலமைப்பித்தன் :
ஆமாம்
மீனகம்: நிச்சயமாக ஐயா. இன்று தமிழீழ மக்களாகிய நாம் அநாதைகளாக நிர்க்கதியாக நிற்பதற்கு எம்ஜிஆர் அவர்களின் மறைவும் ஒரு காரணமாக இருக்கின்றது என்ற கடந்த கால வரலாற்றை எமது எதிர்கால சந்ததியினருக்காக மீனகம் தளத்திற்களித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக