”தமிழீழத் தனி அரசே” எமது இறுதி தீர்வு என்பதை பறைசாற்றுவோம் – யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு
சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை. இவ் உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்களின் வேட்கையான ‘சுதந்திரமானதும்,இறமையுள்ளதுமான தனித் தமிழீழ அரசினை” அமைக்கும் போரான ‘தமிழீழப்போர்” ஆரம்பமாகி பல வடிவங்களில் போர் நகர்ந்தது.
ஒவ்வொரு காலகட்டங்களிலும் சிங்கள அரசு எம்மை ஏமாற்றி, எமது சுதந்திர உணர்வை வல்லாதிக்க சக்திகளாலும், இனவெறித் தீயாலும் நசுக்கியது. இந்த மனிதநேயமற்ற அழுத்தங்களால், எமது மக்களின் போராட்டம் உச்ச நிலையை அடைந்தது. அந்தவேளையில் உலக வல்லாதிக்க சக்திகளுடன் கைகோர்த்து பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களை கொன்று குவித்தது சிங்களம். அந்த வெஞ்சினத்தீயில் கருகி நீறாகிய தியாகங்கள் வார்த்தைக்குள் வசப்படாத துயரங்கள். இந்த கருஞ்சுழியில் புதைந்துள்ள உண்மைகள் வெளிவரும் காலத்தில் உலகம் தலை குனியும்.
இன்றைய காலகட்டத்தில், எமது மக்கள் முள்ளுவேலிச் சிறையினுள்ளும், திறந்த வெளிச்சிறையினுள்ளும், இளையோர், குழந்தைகள், பெண்கள், முதியோர் என்ற பாகுபாடின்றி பெரும் அவலநிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். உலகத்தின் கண்கள் இன்னும் பூட்டப்பட்டேயுள்ளது. ‘எமது மக்களின் சுதந்திர வாழ்வு” முற்றாக சிதைக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்ட நிலையில், எமது மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த முடிவான ‘சுதந்திரமானதும், இறமையுள்ளதுமான தனித் தமிழீழ அரசினை” நிறுவுவதே முடிவாகியுள்ளது.
இந்த முடிவு அனைத்து தமிழர்களின் ஏகோபித்த முடிவென்பதை, உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டிய உண்மை நிலையில் ஈழத் தமிழர்கள் உள்ளனர். 1977 ஆம் ஆண்டு சிங்கள அரசால் நடாத்தப்பட்ட பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது முன்வைக்கப்பட்டு, ஒட்டுமொத்த தமிழர்களாலும் ஏற்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமான ‘சுதந்திரமானதும், இறைமையுள்ளதுமான தனித் தமிழீழ அரசினை” நிறுவுவதற்கான மீள்வாக்குப்பதிவு உலகெங்கும் நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் 24.01.2010 அன்று யேர்மனியில் நடாத்தப்படவுள்ள மீள் இறுதி வாக்கெடுப்பில், ஈழத்தமிழர்கள் அனைவரும் பங்கு கொண்டு வாக்களிப்பது உங்களது சுதந்திர உரிமை. இந்த வாக்கெடுப்பில் 16 அகவை இளையோர் முதல் அனைவரும் கலந்து கொண்டு சுதந்திரமானதும், இறைமை உள்ளதுமான தனித் தமிழீழ அரசை நிறுவுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்கு ‘ஆம்” என நாம் அனைவரும் ஒன்று திரண்ட பலத்தின் சக்தியின் மூலம் மீளுறுதி செய்து, எமது ஏகோபித்த இறுதித் தீர்வு தமிழீழமே என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்வதோடு இச் சம காலத்தில் மீள் வாக்கெடுப்பு நடைபெறும் பிரித்தானியா சுவிச்சர்லாந்து மற்றும் நெதர்லாந்திலும் எம் உறவுகள் ‘சுதந்திரமானதும், இறைமையுள்ளதுமான தனித் தமிழீழ அரசே” எமது இறுதி தீர்வு என பறைசாற்ற வேண்டும் என அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
(Visited 11 times, 11 visits today)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக